

கலை இலக்கியப் பெருமன்றத்தின் குமரிமாவட்டக் குழு ஆண்டு தோறும் நடத்தும் பேராசிரியர். நா.வானமாமலை நினைவு கலை இலக்கிய முகாம் பண்பாட்டுப் பயிற்சிக்களமாக இருந்துவருகிறது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக தொடர்ந்து மே மாதத்தில் நடைபெற்றுவரும் இம்முகாம், இயற்கை எழில் சூழ்ந்த திற்பரப்பு அருவியின் அருகே நடைபெற்றது.
கருத்துரிமை, படைப்புச் சுதந்திரம் இவற்றை மையமாக வைத்து மே 16,17 நாட்களில் நடைபெற்ற முகாமில் தமிழகம் தழுவிய அளவில் கலை இலக்கியக்காரர்கள், செயல்பாட்டாளர்கள் எனச் சுமார் 180 பேர் பங்கேற்றனர். முகாமில் எழுத்தாளர்கள் பொன்னீலன், சி.சொக்கலிங்கம், தாமரை ஆசிரியர் சி.மகேந்திரன், எழுத்தாளர்.பாலமுருகன், தோழி.பிரேமா ரேவதி, பண்பாட்டு ஆய்வாளர். அ.ஜகன்னாதன், முனைவர்.டெரன்ஸ்சாமுவேல், ஹெச்.ஜி.ரசூல், வி.சிவராமன், ச.அனந்தசுப்பிரமணியன், கவிஞர்.நட.சிவகுமார், எஸ்.ஜே.சிவசங்கர், எழுத்தாளர். மீரான்மைதீன், முனைவர். இரா.காமராசு., மு.சி.ராதாகிருஷ்ணன், செந்தீநடராசன், ஏ.எம்.சாலன், ஜி.எஸ்.தயாளன், ஆர்.பிரேம்குமார் உள்ளிட்டோர்.வெவ்வேறு அரங்குகளில் உரையாற்றினர்.
சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்புக்கான விருதுபெற்ற எழுத்தாளர். சா.தேவதாஸுக்கும் முனைவர் பட்டம் பெற்றிருக் கும் கலை இலக்கியப்பெருமன்ற குமரிமாவட்டச் செயலாளர் எம்.விஜயகுமாருக்கும் பாராட்டாரங்கம் முதல் நாள் நடைபெற்றது.
கவிஞர் கலைவாணன் தன்னுடைய இசைக்குழு வின் சார்பாக மிக அருமையான இசை நிகழ்வு ஒன்றினை ஒருங்கிணைத்தார். கலை இலக்கியப் பெருமன்ற அரங்குகளில் தொடர்ந்து பாடப்பட்டு வரும் நாட்டார்பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள் இவற்றை நவீன மின்னிசைக் கருவிகளின் பின்னணியில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் பாடகர்களைக் கொண்டு பாடவைத்தனர்.
மக்கள் பாடக்ர்கள் கைலாசமூர்த்தி, என்.டிராஜ்குமார், ஆரல்விக்டர், ஜி.எஸ்.தயாளன் என பலர் தங்களுடைய குரல் வளத்தால் நிகழ்வை மெருகூட்டினர்.