அறிவில் ஒளிரும் கலை

அறிவில் ஒளிரும் கலை
Updated on
1 min read

தமிழ்ப் படைப்புலகத்தைப் பொறுத்தவரை 1990-கள் மிகவும் முக்கியமான காலகட்டம். இந்தக் காலகட்டத்தில் சிக்கலான இலக்கிய, தத்துவக் கருத்தாக்கங்களையும் உரையாடக் கூடிய மொழியில் அறிமுகம் செய்த எம்.டி. முத்துக்குமாரசாமி முக்கியமானவர். இவரது சிறுகதைகள் அக்காலத்தில் தேக்கமடைந்திருந்த தமிழ் நவீனச் சிறுகதை மொழியைப் பரிசீலிக்கத் தூண்டியவை.

அவர் சமீப காலத்தில் தனது வலைப்பூவில் எழுதிய கட்டுரைகளின் தொகுதி இது. தமிழில் மொத்தை மொத்தையாக சீரியதும் சிறப்பும் இரண்டும்கெட்டானும் மோசமானதுமாகப் படைப்புகளைக் கலந்துகட்டிப் படைத்துவரும் காலம் இது. இந்தப் படைப்புகளைப் பரிசீலிக்க, அவற்றின் அழகியல், பண்பாட்டு மதிப்பை அறிய அறிவுபூர்வமான விமர்சன இயக்கமே இல்லாத சூழலில் இந்நூல் முக்கியமான வரவு.

பாரதியார் மகாகவிதான் என்பதை நிரூபணம் செய்ய ஜெயமோகனுடன் இவர் செய்த விவாதக் கட்டுரைகள் இந்த நூலில் முக்கியமானவை. ஒரு விவாதம் என்பது ஒரு அறிவும் இன்னொரு அறிவும் பண்பாட்டுச் செழுமைக்காக மேற்கொள்ளும் உறவு என்பதைச் சொல்லும் கட்டுரைகள் இவை. எதிராளியின் மீது கொண்டிருக்கும் மதிப்போடு தனது பகடிகளையும் முரண்பாடுகளையும் இவர் தனது கட்டுரையில் வைத்துள்ளார்.

தமிழில் நவீனக் கவிதைகள்குறித்து இவர் எழுதியுள்ள ‘கற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு’ என்ற கட்டுரைத் தொடர் முக்கியமானது. தமிழ்க் கவிதைகள்குறித்து வெறும் ரசனை விமர்சனங்களே உருவாகிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழ் நிலப்பரப்பு, தமிழ் மனம் எப்படி தமிழ் நவீனக் கவிதைகளாகப் பதிவாகியிருக்கிறது என்பதைச் சொன்ன தொடர் இது. கொரிய முழுக் கோழி சமைப்பது எப்படி, சாப்பிடுவது எப்படி?, நிலவொளி எனும் இரகசிய துணை போன்ற கட்டுரைகள் அறிவும், கலையும் முயங்கினால் எப்படிச் சுடர்விடும் என்பதற்கான உதாரணங்கள்.

நிலவொளி எனும் இரகசிய துணை
கட்டுரைகளும் கட்டுரைகள் போலச் சிலவும்
அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை
புத்தாநத்தம்- 621310, விலை: ரூ. 200/-
தொலைபேசி: 04332 273444


- வினுபவித்ரா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in