Published : 11 Apr 2015 11:09 AM
Last Updated : 11 Apr 2015 11:09 AM

இப்போது படிப்பதும், எழுதுவதும் - எழுத்தாளர் கண்மணி குணசேகரன்

சு. வேணுகோபால் எழுதிய ‘நிலமெனும் நல்லாள்’ நாவலைச் சமீபத்தில் படித்தேன். நிலத்தை, பயிர்ப் பச்சைகளை, குடும்ப உறவுகளை விட்டுவிட்டு, மனைவியின் வீட்டில் வாழ நேரும் ஒருவனின் கதையே இந்த நாவல். அந்தக் குடும்பத்தோடு அவனால் இணைந்து வாழ முடியாத மன உளைச்சல்கள், தோல்விகள், போராட்டங்களென அவனது அவல வாழ்வைச் சொல்லும் இந்த நாவல் என்னைக் கலங்கடித்தது.

தன் தோழியின் திருமணத்துக்குப் போகும் கிராமத்துப் பெண்ணொருத்தியின் அழகில் மயங்குகிறார்கள் மூன்று பேர். திருமணத்தைப் படம் பிடிக்கும் வீடியோக்காரன், அந்தத் திருமணத்தின் மாப்பிள்ளை, அவளது அழகில் கிறங்கிப்போய் வரதட்சணையே வேண்டா மென்று திருமணமும் செய்துகொண்டு, அவள் அழகு குலைந்துவிடக் கூடாதென்று கூடலைக்கூடத் தவிர்க்கும் அழகின் ஆராதகன் என அந்த மூவரின் குவிமையமாய் ‘பேரழகி’ எனும் நாவலை எழுதப்போகிறேன்.

சுண்டல்

சென்னைப் புத்தகக் காட்சியைத் தவறவிட்டவர்கள் கவலையே பட வேண்டாம். வரும் 13-ம் தேதி முதல் 23-ம் தேதிவரை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ‘சென்னை புத்தகச் சங்கமம்’ நடக்கவிருக்கிறது. (நேரம்: பகல் 2 முதல் இரவு 9 வரை; 14, 18,19 ஆகிய தேதிகளில் காலை 11 முதல் இரவு 9 வரை). பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமும் நேஷனல் புக் டிரஸ்ட்டும் சேர்ந்து இந்தப் புத்தகக் காட்சியை நடத்துகின்றன.

வழக்கம்போல் 10% கழிவு இங்கு உண்டென்றாலும், உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு 23-ம் தேதியன்று கூடுதலாக 5% கழிவு வழங்கப்படுகிறது. இன்னொரு முக்கியமான விஷயம்… வாசகர்கள் படித்து முடித்த புத்தகங்களை இந்தப் புத்தகக் காட்சியில் பெற்றுக்கொண்டு கிராமப்புற நூலகங்களுக்கு அவற்றை நன்கொடையாக வழங்கவிருக்கிறார்கள். இதற்காகவும் அந்தப் புத்தகக் காட்சிக்குப் போய்த்தான் ஆக வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x