

நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளியான புதுமைப்பித்தன், சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், விவாதங்களின் மூலம் தனிமுத்திரையைப் பதித்தவர். சித்தி, கயிற்றரவு, செல்லம்மாள் போன்ற புகழ்பெற்ற சிறுகதைகளை எழுதியிருக்கும் அவர், சிறுகதை களுக்கு நிகராக மொழிபெயர்ப்புகளும் செய்திருக்கிறார்.
உலகத்துச் சிறுகதைகள், பிரேத மனிதன், உயிர் ஆசை (அமெரிக்கக் கதைகள்), மணியோசை (ஜப்பானியக் கதைகள்) மற்றும் உலக அரங்கு எனும் நாடகக் கதைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். அவரது மறைவுக்குப் பின்னர் பளிங்குச் சிலை (ருஷ்யக் கதைகள்), தெய்வம் கொடுத்த வரம், முதலும் முடிவும், பலிபீடம் போன்ற மொழியாக்கங்கள் வெளிவந்தன.
மூலப் படைப்பை அப்படியே மொழிபெயர்க்காமல் அதைத் தழுவித் தமிழில் எழுதுவதற்கும், நேரடியான மொழிபெயர்ப்புக்கும் இடையிலான வித்தியாசங்கள் பற்றிய விவாதங்களையும் புதுமைப்பித்தன் முன்வைத்திருக்கிறார். அவரது மொழிபெயர்ப்புகளைச் சேகரித்து ‘புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள்’ எனும் பெயரில் ஆ.இரா. வேங்கடாசலபதி, காலச்சுவடு பதிப்பக வெளியீடாகக் கொண்டுவந்தார்.