Published : 12 Apr 2015 10:34 AM
Last Updated : 12 Apr 2015 10:34 AM

காலத்தில் கரையாத ஜெயகாந்தன் குரல்

கண்டதைச் சொல்லுகிறேன் - உங்கள்

கதையைச் சொல்லுகிறேன் - இதைக்

காணவும் கண்டு நாணவும் உமக்குக்

காரணம் உண்டென்றால் - அவ

மானம் எனக்குண்டோ?

- ஜெயகாந்தன்

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தது என ஜெயகாந்தன் குறிப்பிட்டுள்ள ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலிலிருந்து ஒரு பகுதி...

“ஐ லவ் யூ பப்பா” அவர் கையில் முத்தமிடுகிறான் ஹென்றி. “ம்… அப்புறம்? கல்யாணம் நடந்தது…” என்று கதையைத் தொடங்க அடி எடுத்துக் கொடுத்தான் ஹென்றி.

பப்பா பெருமூச்சு விட்டார். ஹென்றியின் கண்களை உற்றுப் பார்த்தார். அதில் ஒரு தோழமை தெரிந்தது.

“அவளும் நானும் பத்து வருஷம் வாழ்ந்தோம். நான் ரொம்ப சந்தோஷமா வாழ்ந்தேன். எங்களுக்குக் குழந்தை இல்லைன்னு ஊரே வருத்தப்பட்டது. பத்து வருஷத்துக்கப்புறம் நாங்க திரௌபதி அம்மனை வேண்டிக்கிட்டு கொடை நடத்தினோம்.”

“கொடைன்னா?...”

“கொடைன்னா… செலவெல்லாம் நாம்ப ஏத்துக்கிட்டுத் திருவிழா நடத்தறது… கஞ்சி ஊத்தறது… தெருக்கூத்து, கரகம் ஆட்டக்காரங்களை வரவழைச்சி நம்ம பொறுப்பிலேயே எல்லாக் கைங்கரியமும் நடத்தறது…”

“புரியுது… பப்பா…”

“அந்த ஊரிலே பழனி பழனின்னு ஒரு பரியாறி இருந்தான். சின்ன வயசிலேருந்து எனக்கு அவனைத் தெரியும். நல்லாப் பாட்டுப் பாடுவான். நாயனம் வாசிப்பான். தெருக்கூத்திலே வேஷம் போடுவான். பொம்பளை வேஷக்காரன். துரோபதி வேஷம். பிரகலாதன் கதையிலே அம்மா வேஷமெல்லாம் அவந்தான் போடுவான். காலையிலே பெட்டியெடுத்துக்கிட்டு எல்லார் வூட்டுக்கும் வந்து திண்ணையிலே குந்தி க்ஷவரம் செய்துட்டுப் போவான். அவன் போனப்பறம் திண்ணையெல்லாம் தண்ணி ஊத்திக் கழுவி விடுவாங்க அவன் தீட்டாம்… அப்ப எல்லாம் காசு பணம் குடுக்கிற பேச்சே கெடையாது. எல்லார் வீட்டிலேயும் மாசம் இவ்வளவு நெல்லுன்னு அவனுக்குக் குடுப்பாங்க. நம் வீட்டிலேருந்து காசும் குடுப்போம். என்னைப் பாத்தா மேல் துண்டை இடுப்பிலே கட்டிக்குவான். வாய் மேலே நாலு விரலையும் பதிச்சிக்கிட்டுத்தான் பேசுவான். எனக்கே அவனைப் பார்த்தா ரொம்பப் பாவமா இருக்கும். அந்தக் காலத்திலே எவ்வளவு மோசமா அவங்களை நடத்தியிருக்காங்கன்னு இப்பத்தான் புரியுது… க்ஷவரம்னா தலை, முகம்னு மட்டும் இல்லே… சாவாங்க க்ஷவரம் பண்ணிக்குவாங்க.

“அந்தப் பழனி மேலே எனக்கு ரொம்பப் பிரியம் ரொம்பப் பரிதாபம். நம்ப வீட்டிலே அவனுக்குச் சாப்பாடு, செலவுக்குக் காசு எல்லாம் உண்டு. திண்ணையோரமா வந்து படுத்துக்கினு இருப்பான்…

மகனே ஒரு நாள் புலவர் வீட்டு மருமகளும் அவனுமா ஓடிப்போயிட்டாங்க…”

“யுவர் வய்ப் அன் தட் பரியாறி?”

“எஸ்… மகனே…”

“ஸோ, தே வேர் இன் லவ்?”

“அதுக்கு அப்படித்தான் மகனே பேர்…”

“பப்பா, நீங்க அதுக்காக வருத்தப்பட்டீங்களா?”

“ஆமாம் மகனே, ரொம்ப வருத்தப்பட்டேன். அவ போயிட்டாளேன்னு வருத்தமில்லே. நான் ஏமாந்துபோயிட்டேனேன்னு வருத்தம். தெருவிலே நடந்து போறப்போ திடீர்னு ஒருத்தன் முகத்தைச் சுளிச்சுக்கிட்டு நம்மைப் பார்த்துக் காறித் துப்பின மாதிரி நியாயம் இல்லாத, அவமானமான வருத்தம்.

“இனிமே எனக்கு யாரும் இல்லையே, இனிமேலும் எனக்கு யார் வேணும்…? எல்லாரும் நம்மைப் பத்தி என்னென்ன சொல்லுவாங்க? ஆ ஆ!... அவள் எவ்வளவு அன்பா இருந்தாள்! அவள் எப்படி இதைச் செஞ்சா? நான் என்ன தப்புப் பண்ணினேன்?

“மகனே! நான் எப்போதாவது கோயில்லே போய்க் கதை சொல்லுவேன்; எங்க அப்பாகூடக் கதை சொல்லுவார். இது புலவர் வீட்டு வழக்கம், சீதையைப் பத்தியும் அருந்ததியைப் பத்தியும் நான் ரொம்பக் கைச்சரக்கெல்லாம் சேர்த்துச் சொல்லு வேன். அவளும் வந்து உட்கார்ந்திருப்பாள். அப்போல்லாம் நானும் அவளும் அந்த மாதிரி இருக்கறதா நினைச்சுக்குவேன்.”

பப்பா கண்களை மூடிக்கொள்கிறார், உட்கார்ந்த நிலையிலேயே முன்னும் பின்னுமாய் ஏதோ யோசனையில் லேசாக ஆடுகிறார், தலை சற்று அண்ணாந்திருக்கிறது. அவரது கிளாஸ் காலியாக இருப்பதைப் பார்த்து ஹென்றி அவரிடம் மெல்லிய குரலில் கேட்கிறான்:

“பப்பா”

“எஸ் மகனே!” என்று கண்களைத் திறக்காமலே, உட்கார்ந்த நிலையில் ஆடுகிற ஆட்டத்தை நிறுத்தாமலே, பதிலிறுத்தார். ஹென்றி மிகவும் மரியாதையோடு அந்த கிளாஸைக் கையில் எடுத்துக்கொண்டு கேட்டான்: “மே ஐ கெட் யூ அனதர் கிளாஸ் பப்பா?”

“ப்ளீஸ், மகனே!” அவரது மூடிய இமைகளினூடே எப்பொழுதோ மறந்து போன அவலத்தை எண்ணிய சோகத்தால் கண்ணீர் மின்னுகிறது. ஹென்றி கையில் கிளாசுடன் உள்ளே வரும்பொழுதுகூட, அவர் அதே நிலையில் தான் உட்கார்ந்து ஆடிக்கொண்டிருக்கிறார்.

எதற்காக எழுதுகிறேன்?

எதற்காகவோதான் எழுதுகிறேன் என்பவருக்காவது பேச நியாயம் உண்டு. எதற்குமில்லை என்பவர் ஏன் பேச வேண்டும்? ஆகையால் இங்கு இந்தத் தலைப்பின் கீழ் பேச வந்திருக்கும் நண்பர்கள் அனைவரும், எழுத்து என்பது எதற்காகவோதான் பிறக்கிறது, எதற்காகவோதான் அது பயன்படுகிறது, பயன்பட வேண்டும் என்கிற கொள்கையுடையவர்களாக இருத்தல் வேண்டும் என்று எண்ணி மகிழ்வுறுகிறேன். அது தவறாகாது.

சரி, ‘நான் எதற்காக எழுதுகிறேன்?’ எல்லாவற்றுக்குமே ஒரு காரணமும், ஒரு காரியமும் உண்டு. நான் எழுதுவதே, ஏதோ தன்னியல்பாக தெய்வ வரம்போல், அல்லது தெய்வ சாபம்போல் என் ஆளுகைக்கு அப்பாலான ஏதோ ஒரு நிகழ்ச்சிபோல் என்னிடம் நிகழ்வதா?

குறியும் நெறியுமில்லாமல் என்னிடம் உள்ள அதீத, அபூர்வ மனுஷத்வத்தில் கிளைப்பதா?

‘மலர் எதற்காகப் பூக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா?’ என்றெல்லாம் அழகாக எனது நண்பரொருவர் என்னிடம் கேட்டாரே அதுபோலத்தானா? அதெல்லாம் வெறும் ஹம்பக்!

சிறுகதை மன்னனா நான்?

என்னைச் சிறுகதை மன்னன் என்கிறீர்கள். உண்மை என்ன தெரியுமா? நான் சிறுகதைச் சக்ரவர்த்திகளையே சந்தித்துவிட்டு வந்தவன். யார் அந்தச் சக்ரவர்த்திகள்? கிராமப்புறங்களில், வயலோரங்களில், மரத்தடியில், நடைபாதை ஓரங்களில் கூடிப் பேசும் அவர்கள் சொல்லும் கதைகளில் இல்லாத உணர்ச்சியையா, நகைச்சுவையையா, வாழ்வின் ஆழத்தையா நான் சொல்லிவிட்டேன்? ஆனால், அவர்களில் யாரையும் உங்களுக்குத் தெரியாது. காரணம், அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்.

தமிழுக்கு என்னைத் தெரியும்

என்னை அறிமுகப்படுத்தியவர்கள் நான் 5-ம் வகுப்பு வரை படிந்த்திருக்கிறேன் என்று சொன்னார்கள். அதுகூடக் கொஞ்சம் அதிகம். நான் 5-ம் வகுப்பில் இரண்டு முறை பெயில் ஆனவன். அந்தக் காலப் படிப்பு அப்படி இருந்தது. எனக்குப் பள்ளிக்கூடம் போக விருப்பமே ஏற்பட்டதில்லை. எனவே படித்தால் அல்லவோ பாஸ் செய்வதற்கு ? நான் பள்ளி வரைக்கும் போய் பிறகு வேறு பள்ளிகளில் பயின்றவன்.

ஒழுங்காகப் படிப்பவர்கள் ஏதோ ஒரு டிகிரி வாங்கிவிட்டு, நான் படித்துவிட்டேன் என்று தலையை நிமிர்த்திக்கொள்ளலாம். நான் இன்றுவரை ஒரு மாணவனாகப் படித்துக்கொண்டே இருக்கிறேன். எனவே, எனது படைப்பு எல்லையில்லாமல் விரிந்துகொண்டே போகிறது.

நான் வாழ்வின் மகத்துவத்தை, மகாகவி பாரதி மூலம் பயின்றேன். நான் படிக்காத காலத்திலும்கூட என் கையில் ஒரு புத்தகம் இருந்தது. அது மகாகவி பாரதி புத்தகம். அதன் மூலம் வாழ்க்கையை நான் நுணுக்கமாகவும் நெருக்கமாகவும் ஆத்மார்த்தமாகவும் அறிய முடிந்தது. பாரதியை எனக்குப் பயிற்றுவித்த நண்பர்கள் பலர் எனக்கு நெருக்கமான தோழர்களாக இருந்தார்கள்.

நான் 15 வயதிலே எழுத ஆரம்பித்தேன். தமிழே தெரியாத உனக்கு எப்படி எழுதவரும் என்று கேட்டார்கள். எனக்குத்தான் தமிழ் தெரியாது; தமிழுக்கு என்னைத் தெரியும் என்று நான் சொன்னேன்.

இளைஞர்கள் எழுத வேண்டும்

இளைஞர்கள் முதலில் எழுத வேண்டும். சித்தாந்தத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படவே கூடாது. சித்தாந்தத்தைப் படித்துவிட்டு அதற்கேற்ப எழுதுவதில்லை. நீங்கள் நல்ல மனிதனாயிருந்து நல்ல இதயத்தோடு இந்த வாழ்க்கையை பார்க்க வேண்டும். அதிலிருந்து பிறப்பதுதான் நமது சித்தாந்தம். சித்தாந்தங்களைப் பயின்றுவிட்டு எழுதுகிறவர்கள், அந்த நிறுவனங்களில் வேலைக்குப் போவதுதான் சரி. அனேகமாய் அதுதான் நடக்கிறது. படைப்பு இலக்கியம் என்பது வேறு. சித்தாந்தச் சிக்கலில் இளைஞர்கள் முதலில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்றெல்லாம் இளைஞனாய் இருக்கும்போது நான் யோசித்திருக்கிறேன். எல்லாச் சித்தாந்தங்களுடனும் பரிச்சயம் இருப்பது நல்லதே. ஒன்றும் தெரியாமல் இருக்க வேண்டும் என்று சொல்ல மாட்டேன். ஆனால், எதிலும் போய் நாம் மாட்டிக்கொள்ளக் கூடாது. அப்போதுதான் விஞ்ஞானபூர்வமான ஒரு சித்தாந்தத்திற்கு நாம் இடம் கொடுக்கிறோம் என்று அர்த்தம்.

யார்போல் எழுதுகிறேன்?

திரு.சபாநாயகம் அவர்கள் நான் புதுமைப்பித்தனைப் போல எழுதுவதாகச் சொன்னார். இல்லை! நான் புதுமைப்பித்தனை விடவும் மேலாக எழுதுகிறேன். புதுமைப்பித்தனைப் போல எழுதுவதற்கு இன்னொருவர் எதற்கு? நான் ஜெயகாந்தனாக எழுதுகிறேன்.

எழுத்து எங்கே பிறக்கிறது?

எங்கோ போய்க்கொண்டிருந்த வழியில், எழுத்தாளனாய் வரவேற்கப்பட்டேன். நான் கதைகள் எழுதிப் பத்திரிகை களுக்கு அனுப்பியதில்லை. என்னைப் பத்திரிகைகள் ஆதரிக்கவில்லை என்று புலம்பியதுமில்லை. நான் கல்லூரியிலோ, உயர்நிலைப் பள்ளியிலோ படித்தவனல்ல, அங்கே எழுத்தையோ இலக்கியத்தையோ கற்பதற்கு! நடைபாதையில், குழாயடியில், சில நாட்கள் வேலைக்குப் போன சிறிய தொழிற்சாலைகளில் பொதுவான நடைமுறை வாழ்க்கையில்தான் இலக்கியத்தைக் கற்றேன். பிறகு, அங்கேதான் எழுத்தும் இலக்கியங்களுமே பிறக்கின்றன என்று அறிந்தேன்.

யதார்த்தவாதம் முடிந்துவிட்டதா?

இன்றைக்கு இங்கு நடக்கிற விவாதங்கள் முழுவதும் தமிழ் இலக்கியம் குறித்து அல்ல. ஆங்கில இலக்கிய விமர்சனங்களைப் படித்துவிட்டு அந்த terminologyஐத் தமிழாக்கம் செய்துகொண்டு இங்கே அம்மானை ஆடுகிறார்கள் விமர்சகர்கள். இது இலக்கியச் சர்ச்சை ஆகாது. சொல்லப்போனால் இது தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் புறம்பானதும் ஆபத்தானதும் ஆகும். யதார்த்த இலக்கியமே இன்னும் முழுமை பெறாத தமிழ் மொழியில், இவர்கள் அதன் காலம் முடிந்துவிட்டது என்று சொல்கிறார்கள். எல்லாக் கால இலக்கியங்களும் யதார்த்தவாதத்துக்கு உட்பட்டதுதான். யதார்த்தம் என்பது வேறு. யதார்த்தவாதம் என்பது வேறு. The real is not realistic.

கல்லடி கிடைத்தாலும் எழுதுவேன். காசு தராவிட்டால்தான் என்ன?

பிழைப்புக்கு வேறு ஏதேனும் தொழில் செய்வேன். எழுத்து எனக்கு சீவனமல்ல; அது என் ஜீவன்!

ஜெயகாந்தன் நேர்காணல், கட்டுரை, உரை ஆகியவற்றிலிருந்து...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x