

‘வரலாற்றின் மாபெரும் சூதாட்டம்’ என்று இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலைப் பற்றிக் குறிப்பிடுகிறார் வரலாற்றாய்வாளர் ராமச்சந்திர குஹா. அரசு மற்றும் தேர்தல் நிர்வாகமும், வாக்காளர்களும் அதுவரை சந்தித்திராத அந்த பிரம்மாண்ட நிகழ்வு நடந்தேறிய விதத்தை வேறு வார்த்தைகளால் குறிப்பிட முடியாது.
அரசியல், சமூக நிகழ்வுகள், முறைகேடுகள், ஊழல்கள், வேலைவாய்ப்பு, பொருளாதார நிலை, மத, இனக் கலவரங்கள் என்று முடிவே இல்லாமல் வளர்ந்துகொண்டே செல்லும் பட்டியலில் இடம்பெறும் விஷயங்கள் எதிரொலிக்கும் ஒட்டுமொத்த நிகழ்வு தேர்தல்தான். அந்த வகையில் வரலாற்று ஆய்வாளர் ஆர். முத்துக்குமார் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத்தேர்தல் முதல் 2014 மக்களவைத் தேர்தல் வரையிலான முக்கியமான வரலாற்றுப் பதிவுகளின் தொகுப்பாக வெளியாகியிருக்கிறது.
நேரு காலத்திய தேர்தல்கள்
1951-52-ல் நடந்த முதல் பொதுத் தேர்தலைப் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நடத்திக்காட்டியதன் மூலம் இந்தியாவில் ஜனநாயகத்தை ஆழமாக வேரூன்றச் செய்தவர்கள் நேருவும் முதல் தேர்தல் ஆணையர் சுகுமார் சென்னும்தான்.
வாக்காளர் பட்டியலைத் தயார் செய்வதில் ஆரம்பித்து எல்லாக் கட்டங்களிலும் கடும் சவாலைச் சந்தித்தார்கள். வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கும் பணிகளின்போது அதிகாரிகள் எதிர்கொண்ட சுவாரஸ்யமான சம்பவங்களையும் இப்புத்தகம் பதிவு செய்திருக்கிறது. “பெண்கள் பலர் பெயர் சொல்லவே பயந்தனர்… தன் பெயரைச் சொல்லவே பயந்தவர்கள் கணவர் பெயரைச் சொல்வார்களா?”
அந்தத் தேர்தலில் காங்கிரஸை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி, பாரதிய ஜனசங்கம் போன்ற கட்சிகள் தயாராகிவந்தன. ஜெயப்பிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோஹியா, அம்பேத்கர் போன்றவர்கள் பல்வேறு காரணங்களுக்காக காங்கிரஸிலிருந்து வெளியேறி, தீவிர அரசியலில் ஈடுபட்டும் அந்தத் தேர்தலில் காங்கிரஸே வெற்றிபெற்றது. காரணம், நேருவின் மீது மக்களுக்கு இருந்த அன்பும், சுதந்திரம் வாங்கித்தந்த கட்சி என்பதால் காங்கிரஸ் இருந்த அபிமானமும்தான்.
எனினும், அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் தேசிய அளவில் கம்யூனிஸ்ட் கட்சி, சோஷலிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்த விதம் பற்றியும், சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சிக்குக் கடும் சவாலாக தி.மு.க. உருவான விதம் பற்றியும் இந்த புத்தகம் பேசுகிறது.
மேலும், மொழிவாரிப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக புதிய மாநிலங்கள் உருவானது, அதன் விளைவாக தொகுதி எல்லைகள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது, பிராந்தியக் கட்சிகளின் வளர்ச்சி, தொழிலாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததால் கேரள கம்யூனிஸ்ட் ஆட்சி (நாட்டிலேயே முதன்முறையாக) கலைக்கப்பட்டது, தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் ஊழல்கள் வெளியானதன் விளைவாக எல்.ஐ.சி. நிறுவனம் உருவாக்கப்பட்டது, முந்த்ரா ஊழல், திபெத் பிரச்சினை என்று பல்வேறு நிகழ்வுகளை, 1951, 1957, 1962 ஆகிய தேர்தல்களின் பின்னணியில் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.
அந்தக் காலகட்டத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்தே சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன என்பதால், தேர்தல்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல் அலைகள் நாடு முழுவதும் எண்ணற்ற தாக்கங்களை ஏற்படுத்தின.
நேருவின் மரணத்தைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரியைப் பிரதமராகத் தேர்வுசெய்ததில் காமராஜரின் பங்கு, சாஸ்திரியின் மர்ம மரணம், இந்திரா பிரதமரானது, அண்ணா முதல்வரானது, திமுக-வில் ஏற்பட்ட பிளவு, நெருக்கடி நிலை, சஞ்சய் காந்தி மரணம் என்று இந்திரா யுகத்தில் நிகழ்ந்த சம்பவங்களும் இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. பிராந்தியக் கட்சிகளில் தேசிய அரசியல் நிகழ்வுகளும், தேசிய அளவில் பிராந்தியக் கட்சிகளும் ஏற்படுத்தும் தாக்கமும் இப்புத்தகத்தில் அலசப்பட்டிருக்கின்றன.
ஐக்கிய முன்னணி அரசின் ஊழல்களை எதிர்த்து அண்ணா ஹசாரே போன்றோர் நடத்திய போராட்டங்கள், டெல்லியில் ஆஆக முதல் தடவை ஆட்சியமைத்தது, 2014 மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சியமைத்தது வரையிலான நிகழ்வுகளைத் தொகுத்து எழுதியிருக்கிறார் ஆர். முத்துக்குமார். 64 ஆண்டுகால இந்தியத் தேர்தல் வரலாற்றைத் தகவல்களின் அடிப்படையில் தொகுப்பது என்பது அசாத்தியமான உழைப்பைக் கோருவது. அந்த உழைப்பு இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது.
இந்தியத் தேர்தல் வரலாறு
ஆர். முத்துக்குமார்
சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
10/2 (8/2) போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை,
தியாகராயநகர், சென்னை 600 017
தொலைபேசி: 24342771, 65279654
விலை: ரூ. 650, பக்கங்கள்: 608
- வெ.சந்திரமோகன்
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in