

பள்ளி மாணவனாகச் சுமார் 11 வயதில் பள்ளிக்கூட விழாவில் அரங்கேறியதாகக் கூறப்படும் நாகூர் ஹனிபாவின் கணீர்க் குரல், இஸ்லாமியர்களின் திருமணங்களில் தொடங்கி, தர்காக்களில் ஒலித்து, மேடைக் கச்சேரிகள் ஏறி திமுகவின் மாநாடுகள் உள்ளிட்ட பொதுக்கூட்ட மேடைகளில் தொடர்ந்தது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்பகால வளர்ச்சிக்கு முக்கியத் தலைவர்களைப் போலவே தொண்டாற்றிய பெருமகன் இசைமுரசு நாகூர் ஹனீபா. பாடலோடு மட்டும் இவர் ஓய்ந்துவிடவில்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் 1939-ல் நாகூருக்கு வந்த ராஜாஜிக்குக் கறுப்புக்கொடி காட்டிக் கைதான நால்வரில் இவரும் ஒருவர். அப்போது அவருக்கு வயது 13. இந்தியை எதிர்த்துப் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய ‘ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள், நீ தேடிவந்த கோழை நாடு இதுவல்லவே’ என்ற வரிகள் ஹனீபாவின் குரலில்தான் மக்களுக்கு உணர்ச்சியூட்டின.
மேடைகளில் பாடுவதற்குத் திமுக தொண்டர்கள் அளித்த சொற்பக் காசுகளைக்கொண்டே தன் குடும்பம் வளர்த்தார். இரண்டு ஆண் மகவுகள், நான்கு பெண் குழந்தைகள் என்று பெரிய குடும்பம். நாகூரில் முதன்முதலாக அவர் கட்டிய வீட்டுக்குப் பெயர் அண்ணா இல்லம். பிறகு தைக்கால் தெருவில் வசதியாகக் கட்டிய வீட்டுக்குப் பெயர் கலைஞர் இல்லம். தி.மு.க. மீது வைத்த விசுவாசம் போலவே முஸ்லிம் லீக் மேலும், காயிதே மில்லத் மேலும் கொண்டிருந்தார். சென்னையில் கட்டிய வீட்டுக்கு காயிதே மில்லத் பெயரைச் சூட்டினார்.
நபிகள் நாயகம் குறித்து ‘தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு, எங்கள் திருநபியிடம் போய்ச் சொல்லு’ என்ற பாடலும், ‘மலர்களின் மரகதமாம் மதன புழுதியில் படுத்து உருள வேண்டும்’, என்ற பாடலும் நாகூர் ஆண்டவரைப் பற்றி ‘திக்கு திகழ்தரும் கொள்கை பாடியே வந்து தீன்கூறி நிற்போர் கோடி’ என்ற பாடலும், ஈரான் நாட்டு இறை ஞானி அப்துல் காதர் ஜிலானியின் வாழ்க்கை வரலாற்றுப் பாடலும் இஸ்லாத்துக்கு அவர் தந்த கொடை.
பெருங்குரலெடுத்து உச்ச ஸ்தாயியில் பாடியதன் விளைவாக அவரது காது நரம்புகள் பாதிக்கப்பட்டு கடைசி ஆறு வருடங்களாகக் காது கேட்கும் திறன் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டவராக, இரவு பகலாக ஓயாது உழைத்ததன் காரணமாக உடல் தளர்ந்து சிரமப்பட்டார். இன்று அவர் மறைந்துவிட்டார். ஆனால் அந்தக் கம்பீரக் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
தொடர்புக்கு: muthu.k@thehindutamil.co.in