Last Updated : 18 Apr, 2015 03:00 PM

 

Published : 18 Apr 2015 03:00 PM
Last Updated : 18 Apr 2015 03:00 PM

சென்னையில் இன்னொரு புத்தகத் திருவிழா!

‘புத்தகக் காதலர்களுக்கு மீண்டும் ஓர் அரிய வாய்ப்பு’ என்று தண்டோராவே அடித்துச் சொல்லலாம்! சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இம்மாதம் 13-ம் தேதி தொடங்கி நடந்துவரும் ‘சென்னை புத்தகச் சங்கமம்’, புத்தக வாசிப்பை நேசிப்பவர்கள் தவற விடக் கூடாத நிகழ்வு. கடந்த ஜனவரி மாதத்தில் சென்னையில் நடந்த புத்தகக் காட்சிக்குப் பிறகு 3 மாத இடைவெளியில் நடைபெறும் புத்தகத் திருவிழா இது.

இப்புத்தகக் காட்சியில் முன்னணி தமிழ், ஆங்கிலப் பதிப்பகங்கள் தங்கள் புத்தகங்களைப் பார்வைக்கும் விற்பனைக்கும் வைத்திருக்கின்றன. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமும், நேஷனல் புக் ட்ரஸ்ட்டும் (என்.பி.டி.) இணைந்து இதை நடத்துகின்றன.

150-க்கும் மேற்பட்ட அரங்குகளில் இலக்கியம், அரசியல், வரலாறு, சமூகம், கல்வி, சூழலியல் என்று பல்வகையான புத்தகங்கள், கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், நடமாடும் ஏடிஎம் என்று புத்தகக் காட்சிகளுக்குரிய வழக்கமான ஏற்பாடுகளுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்விழா 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

புத்தகக் காட்சியில் வாங்குபவர்களுக்கு 10% கழிவு கிடைப்பது வழக்கம்தான். இறுதி நாளான 23-ம் தேதி, ‘உலகப் புத்தக நாள்’ என்பதால், கூடுதலாக 5% கழிவு கிடைப்பதுதான் இந்நிகழ்வின் விசேஷம்!

புத்தக வங்கித் திட்டம்!

புத்தகங்களை இரவல் கொடுப்பதற்குக்கூட மனமில்லாத ‘தீவிர புத்தகக் காதலர்கள்’ உண்டு. அவர்களில் பலர்கூட இப்புத்தகச் சங்கமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அரங்கில், தங்களிடம் இருக்கும் புத்தகங்களைக் கொடுத்துவருகிறார்கள். அத்தனை புத்தகங்களும் கிராமப்புற நூலகங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

“நாளொன்றுக்குச் சராசரியாக 20 பேர் தங்களிடம் இருக்கும் புத்தகங்களை எங்களிடம் தருகிறார்கள். அனைத்தும் கிராமப்புற மாணவர்கள், வாசகர்களுக்குப் பயன்படப்போகின்றன என்பது பெருமிதம் தரும் விஷயம்” என்கிறார் சென்னைப் புத்தகச் சங்கமத்தின் செய்தித் தொடர்பாளர் பிருத்விராஜ். நான்கு சக்கர வாகனங்கள் மூலம் நூற்றுக் கணக்கான புத்தகங்களைப் புத்தகச் சங்கமத்தின் அலுவலகத்துக்கே அனுப்பும் தயாளர்களும் உண்டு.

புத்தகங்களைத் தருபவர்களுக்குப் ‘புத்தகக் கொடைஞர்’ எனும் சான்றிதழும், புத்தகங்களுக்கான கழிவில் கூடுதலாக 5%-ம் கிடைக்கின்றன. தங்களிடம் இருக்கும் புத்தகங்களைத் தருவது / அனுப்புவது தொடர்பாகத் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்: 9840132684 / 9710944812.

கூட்டம் அதிகமில்லை!

குறுகிய கால இடைவெளியில் மற்றொரு புத்தகக் காட்சி என்பதாலோ என்னவோ வார நாட்களில் பெரிய அளவில் கூட்டம் இல்லை. இதுதான் நமக்குப் பெரிய வசதியும்கூட. விசாலமான இடத்தில், நெரிசல் இல்லாமல் நிதானமாகப் புத்தகங்களைப் பார்த்து வாங்கலாம்.

இந்தப் புத்தகக் காட்சிக்காகவென்றே புதிய புத்தகங்களைக் கொண்டுவந்திருக்கும் பதிப்பகங்களும் உண்டு. ஏற்கெனவே ஜனவரி புத்தகக் காட்சிக்குச் சென்றவர்கள், இந்தப் புத்தகக் காட்சியில் புதிய புத்தகங்களை வாங்க முடியும். எனவே, இதைப் பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனம்!

‘தொலைநோக்கி’ப் பார்வை

இந்தப் புத்தகக் காட்சியில் நேஷனல் புக் ட்ரஸ்ட் சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் ‘எஜுகேஷனல் அண்ட் சயின்ஸ் எய்ட்ஸ்’ அரங்கில் வானியல் தொலைநோக்கிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. சிறிய அளவிலான ரூ. 3,500 முதல் ரூ. 12,500 வரை வெவ்வேறு வகை தொலைநோக்கிகள் கிடைக்கின்றன. குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்!

- வெ. சந்திரமோகன்,

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x