Last Updated : 26 Apr, 2015 01:12 PM

 

Published : 26 Apr 2015 01:12 PM
Last Updated : 26 Apr 2015 01:12 PM

பிரச்சினை இஸ்லாத்தில் இல்லை: ஸர்மிளா ஸெய்யித் நேர்காணல்

ஸர்மிளா ஸெய்யித், இலங்கையின் இளம் தலைமுறை எழுத்தாளர்; சமூகச் செயற்பாட்டாளர். துணிச்சலான சமூகச் செயற்பாடுகளால் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் விமர்சனத்துக்கு உள்ளானவர். அவரது சொந்த ஊரான இலங்கையின் ஏறாவூரில் வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டவர். ‘உம்மத்’ என்னும் நாவலை எழுதியுள்ளார். போருக்குப் பிறகான பெண்களின் வாழ்வு, இஸ்லாமிய அடிப்படைவாதம் ஆகியவை இந்த நாவலின் மையங்கள்.

ஸர்மிளாவைப் பற்றிய அவதூறுகளும் பெருகிவருகின்றன. அவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகக்கூட இலங்கை இணையதளங்களில் செய்திகள் வந்துள்ளன. மதுரைக்கு வந்த அவரிடம் ‘உம்மத்’ குறித்து மேற்கொண்ட நேர்காணலின் சுருக்கம் இது.

உங்கள் நாவலில் விமர்சிக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடக்கத்தில் இருந்தே இலங்கையில் இருக்கிறதா?

இஸ்லாமிய அடிப்படைவாதம் இலங்கைக்குப் புதிய ஒரு விஷயம்தான். இருபது வருஷத்துக்குள் உருவான விஷயமாகப் பார்க்க வேண்டியது. திறந்தபொருளாதாரக் கொள்கையின் விளைவுகளில் ஒன்று. இலங்கை முஸ்லிம்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் போகத் தொடங்கியபோதுதான் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியங்களைப் பார்க்கிறார்கள். அதற்கு முன்பு சவுதி அரேபியா குறித்து நாங்கள் கதைகளாகத்தான் தெரிந்து வைத்திருந்தோம். அங்கு சென்ற பிறகு ஒரு முஸ்லிம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவர்களுக்குள் ஒரு தாக்கம் ஏற்படுகிறது.

இஸ்லாத்தைப் பற்றிப் போதிக்கிற மார்க்கப் பள்ளிகள் அதிகரிக்கின்றன. தெருவுக்குத் தெரு மதரஸா, அரபிக் கல்லூரிகள், அஹதியா பாடசாலைகள் வந்துவிட்டன. இருபது வருடங்களுக்கு முன்பு குரான் ஓதுவதைக் கற்கிற வகுப்பு பள்ளிவாசல்களில் இருக்கும். அதைத் தவிர அரபிக் கல்லூரிகள் என்பது ஆர்வமாகத் தேடிப் போய்ப் படிக்கிற விஷயமாக இருந்தது. இப்போது இது கட்டாயமாக ஆகியிருக்கிறது. பெண்கள் முகம் மூடும் வழக்கமும் இலங்கையில் மிக அண்மையில்தான் வந்தது.

என் உம்மாவும், உம்மாவுடைய உம்மாவும் வெறுமனே சேலை முந்தானையால் தலையைச் சுற்றிக்கொள்வார்கள். இன்றைக்கு இது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இந்த உடை மாற்றம் எல்லாம் பின்னால்தான் வருகிறது. இதெல்லாம் பெரிய சந்தைப்படுத்தல். அரபிக் கல்லூரிகளும்கூட ஒரு வியாபாரம்தான். பாலைவனக் கலாசாரத்தை இஸ்லாமிய மயமாக்கலாக விஸ்தீகரிக்க எடுத்துக்கொண்ட விஷயம்தான் மதம்.

ஒரு பக்கம் இந்துக்களான தமிழர்கள், இன்னொரு பக்கம் பவுத்தர்களான சிங்களவர்கள் இந்த அடையாளங்களுக்குள் தங்களை வேறுபடுத்திக் காட்டத்தான் இந்த இஸ்லாமியக் கடும்போக்கு உருவானதா?

இல்லவே இல்லை. இந்த இஸ்லாமிய கடும்போக்கு உருவாவதற்கு முன்பே முஸ்லிம்கள் அரசியல்ரீதியாகத் தங்களை வேறுபடுத்திக் காட்டிவிட்டார்கள். மொழி ரீதியான அடையாளங்களைவிடவும் மதத்துக்கு முன்னுரிமையளித்து இஸ்லாமியர்கள் தங்களை வேறு பட்ட அடையாளத்தை ஏலவே நிறுவியுள்ளார்கள்.

உம்மத்தின் கதாபாத்திரங்கள் நம்ப முடியாத வன்முறைக்கு ஆளாகிறார்கள்; ஊர் கூடித் தாக்க வருகிறது. இந்த வன்முறைகளை யார் ஒருங்கிணைக்கிறார்கள்?

ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு குழுதான் இதைச் செய்கிறது என அடையாளப்படுத்தக்கூடிய நிலை இல்லை. தனி நபர்களாகச் சேர்ந்து உடனடியாகச் சில விஷயங்களை அமல்படுத்த நினைக்கிறார்கள். இஸ்லாம் என்கிற ஒற்றைப் பார்வை இல்லாமலாகி, குழுநிலைவாதமும் இயக்கவாதமும் மேலோங்கியிருப்பதன் விளைவாகவே இந்த வன்முறைகள் உருவாகின்றன.

ஒரு இஸ்லாமியப் பெண் தவறுசெய்துவிட்டால் அவளைத் தண்டிக்க வேண்டும் என்ற தீர்மானம் வழிபாட்டுத் தலங்களில் இயற்றப்படுகிறதா?

இவர்களின் செயல்பாடுகளுக்கும் பள்ளிவாசலுக்கும் முழுமையான தொடர்பு உண்டு என்று சொல்ல முடியாது. அறவே இல்லை என்றும் சொல்ல முடியாது. இலங்கையைப் பொறுத்தவரை இஸ்லாமிய கிராமங்களில் சட்டம், ஒழுங்கு எல்லாம் ரெண்டாம்பட்சம்தான். மத நிறுவனங்கள்தான் முன்னிலையில் இருக்கின்றன. இந்த மத நிறுவனங்கள் பெண்களுக்கு எதிராகத் தீர்மானங்கள் எடுப்பதில்லை. ஆனால் எடுக்கப்படும் வன்முறைகளை எதிர்ப்பது கிடையாது.

உங்கள் கதாபாத்திரமான ‘தவக்குல்’ பொதுவெளிக்கு வருவதே பெரும் விமர்சனத்துக்கு உள்ளாவதாகச் சித்தரிக் கப்பட்டுள்ளது. இலங்கையில் இஸ்லாமியப் பெண்கள் பொது வெளிக்கு வருவதே இல்லையா?

ஆண்களைவிடவும் நிறைய படித்தவர்களாகப் பெண்கள் இருக்கிறார்கள். டாக்டர்களாக, இ்ன்ஜினீயர்களாக, டீச்சர்களாக வேலை பார்க்கிறார்கள். ஆனால் பெண்கள் என்ன வேலை பார்க்க வேண்டும் என்ற தெரிவை ஆண்கள்தான் எடுக்கிறார்கள். பெண்களுக்கான கவுரவமான தொழில் என்று ஒரு வார்த்தையைப் பாவிப்பார்கள். ஒரு சமூகச் செயற்பாட்டாளராக இருப்பதையோ, கள ஆய்வு செய்வதையோ கவுரவமான வேலையாகப் பார்க்கப்படுவதில்லை.

இப்போது உருவாகியிருக்கும் இஸ்லாம் அடிப்படைவாதம், ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடுதானா?

நிச்சயமாக ஒரு ஆணாதிக்கச் சூழல்தான் இதை உருவாக்குகிறது. அடிப்படைவாதத்துக்கும் ஆணாதிக்கத் துக்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. ஆண்கள் தங்கள் கொள்கைகளை விஸ்தரிப்பதற்குப் பெண்கள்தான் ஊடகமாக இருக்கிறார்கள். இன்றைக்கு மார்க்கக் கல்வி, மதத்தின் கூறுகளைப் பிரித்து, அதை எப்படி நம் வாழ்க்கையில் பிரதியீடுசெய்வது என்பதில் வந்திருக்கிறது. இதை முக்கியமான கடமையாக, அர்ப்பணிப்புடன்தான் பலரும் செய்கிறார்கள். அவர்களுக்கே தெரியாது இது ஜனநாயகமற்ற செயல் என்று.

மார்க்கப் பள்ளிகள்தான் அடிப்படைவாதத்தைக் கற்றுத் தருகின்றன என்றால், இஸ்லாம் கொள்கைகளே பெண்களுக்கு எதிரானதாக இருக்கின்றனவா?

அப்படியல்ல. மார்க்கப் பள்ளிகள் எல்லாமும் அடிப்படைவாதத்தை போதிக்கின்றன என்று வரையறை செய்ய முடியாது. அரபு நாடுகளின் நிதியுதவியில் இயங்குகிற வஹாபிய இயக்கங்களால் இந்த நிலை உருவாகிறது. பெண்கள் தொடர்பான விஷயத்தில் இன்னும் புரிந்துகொள்ளப்படாத நிலைதான் இருக்கிறது. பிரச்சினை இஸ்லாத்தில் இல்லை. அதைப் புரிந்துகொள்வதன் போதாமையில் இருக்கிறது. அல்குரான் எங்களுடைய மொழியில் இல்லை.

அதைக் கற்றுத் தேர்ந்த அறிஞர்கள் குரானில் இருக்கிற ஒரே வசனத்தையே மூன்று, நான்கு விதமாக அர்த்தப்படுத்துகிறார்கள். இந்த இடத்தில்தான் புரிந்துகொள்வது தொடர்பாகக் கேள்வி எழுகிறது. சவுதி அரேபியா போன்ற நாடுகளின் சட்டங்கள் இஸ்லாமியர் அல்லாதவர்களாலும், இஸ்லாமியர்களாலுமே விமர்சிக்கப் படுகின்றன. ஆனால், இந்தச் சட்டங்கள் குறிப்பிட்ட காலத்தில் சமூகத்தை ஒழுங்கமைக்க உருவாக்கப்பட்டன. காலப்போக்கில் இதில் நெகிழ்வுத்தன்மையைக் கடைபிடித்திருக்கிறார்கள்.

என்ன மாதிரியான நெகிழ்வுத்தன்மை?

திருடினால் கையை வெட்டுவது சவுதியில் இன்றும் அமலில் உள்ளது. உமர் ரழி என்னும் கலிபா காலத்தில் இந்தத் தண்டனை ரத்துசெய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. வறுமையும் பட்டினியும் இருக்கும்போது தன் கவுரவத்தையும் மீறித் திருடுவதற்கான சூழல் அங்கு இருக்கிறது என்பதால் கலிபா அந்தச் சட்டத்தை நெகிழ்த்துகிறார். அந்த நெகிழ்வு இப்போது ஏன் இல்லை என்று கேள்வி இருக்கிறது.

‘யோகா’ பாத்திரம் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகி மாண்டு போகிறது. போருக்குப் பின்னான சூழல் பாலியல்ரீதியான வன்முறைக் களமாக இருக்கிறதா?

கள ஆய்வில் நான் சந்தித்த ஒரு பெண் காணாமல் போனதாகச் சொல்லப்படும் தன் கணவனைத் தேடிக் கொண்டிருக்கிறாள். அந்தப் பெண்ணை அவள் ஊரைச் சேர்ந்த ஒருவரே, உன் கணவன் இருக்கும் இடத்தைக் காட்டுகிறேன் எனச் சொல்லி கொழும்புக்கு அழைத்துச் சென்று பாலியல் தொழிலாளியாக மாற்றியிருக்கிறார்.

தன் கணவனை என்றாவது கண்டுவிட மாட்டோமா என ஒவ்வொரு முகாமாக ஏறி இறங்கும் ஒரு பெண் பாலியல்ரீதியாக ஏமாற்றப்படுகிறாள். இப்படியான பல பெண்களைச் சந்தித்த அனுபவமும் அவர்களின் பிரச்சினைகளை அறிந்திருந்ததால் பிபிசி நேர்காணலில் எனது கருத்தைப் பதிவுசெய்தேன். இதற்காக என்னையே தரக்குறைவாக விமர்சித்தார்கள். நிம்மதியிழக்கச் செய்யும் இன்னும் பல உண்மைச் சம்பவங்களைக் கள ஆய்வில் கேட்டிருக்கிறேன்.

- தொடர்புக்கு:
jeyakumar.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x