

பொதுவாழ்வில், வணிகத்தில், கலைத் துறையில் வெற்றியை ருசித்தவர்களின் சுயசரிதை என்றால் அதில் சர்ச்சைகளும் எதிர்பாராத சம்பவங்களும் நிறைந்திருக்கலாம். ஆனால், அதுபோன்ற மாயக் கவர்ச்சி எதுவும் தேவைப்படாமல் ஆனால் இப்படியும் ஒரு ஆசிரியர் தன் வாழ்க்கையை மாணவர்களுக்காக அர்ப்பணிக்க முடியுமா என்று ஆச்சரியப்படவும் நெகிழவும், சமயங்களில் கலங்கவும் வைத்துவிடுகிறது கல்வித் துறையிலிருந்து வந்திருக்கும் இந்தச் சுயசரிதை.
மகன் கப்பல் கேப்டனாக வேண்டும் என்று விரும்பி அவனை நுழைவுத் தேர்வு எழுத வைக்கிறார்கள் பெற்றோர்கள். அந்தத் தேர்வில் முதல் வகுப்பில் வெற்றிபெற்றும் கப்பலுக்கு கேப்டனாக விரும்பாமல் மாணவர்களுக்கு கேப்டனாக விரும்பியிருக்கிறார் இந்த நூலின் நாயகர். கிறிஸ்தவ இறையியலில் குருத்துவம் பெற்று ஆசிரியராக மாறுகிறார். தன்னை நம்பி விடுதியில் விட்டுச்செல்லப்படும் மாணவர்களுக்குக் கல்வியைப் புகட்டுவதோடு தன் கடமை முடிந்தது என்று இவர் போய்விடவில்லை. தாய் தந்தையரைப் பிரிந்து விடுதியில் தங்கிப் பயிலும் மாணாக்கர் அனைவருக்கும் தாயாகவும் தந்தையாகவும் இருந்து அவர்களைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்கிறார்.
அவர்களது முன்னேற்றங்களை அணுஅணுவாக உயர்த்தி அழகு பார்த்திருக் கிறார். தங்கள் ஆசிரியரின் இந்தத் தாயுள்ளம் பற்றிய பெருமைகளை இந்தச் சுயசரிதை நூலில் மதம், இனம் கடந்து அவரது மாணவர்களைத் தனித்தனி அனுபவக் கட்டுரைகளாக எழுதி உணர்ச்சிப் பகிர்வுகளாக இணைத்திருக்கிறார்கள். சுயசரிதையைத் தொகுத்தவர்,
‘பிரம்படி பிரம்மா’ அவரது மாணவர்களால் வருணிக்கப்படும் ஒரு பள்ளி ஆசிரியருக்கு அப்படி என்ன சிறப்பு இருந்துவிட முடியும் என்று கேட்கிற யாருக்கும் இந்தப் புத்தகம் ஓர் அரிய பொக்கிஷம். இந்த நூலின் நாயகர் வரலாற்றுப் பெருமை மிக்க கடலூரில் கடந்த 145 ஆண்டுகளாகக் கல்விப்பணியை நிறைவு செய்திருக்கும் ‘கர்னல் கார்டன்’ புனித வளனார் மேல்நிலைப் பள்ளியின் முதல்வரான பீட்டர் அடிகளார்.
கர்னல் தோட்டத்தின் கருணை ஒளி!
நூலாசிரியர்: கே. எஸ். இளமதி
விலை: 150/-
வெளியீடு: கீதம் பப்ளிகேஷன்ஸ்,
3/3, பத்மாவதி அவென்யூ,
திருமலை நகர் அனெக்ஸ்,
பெருங்குடி, சென்னை- 96.
தொலைபேசி:044-24960231
- சொல்லாளன்