

கு.அழகிரிசாமி, கி.ராஜநாரயணன், பூமணி, தேவதச்சன், மு.சுயம்புலிங்கம், சோ.தர்மன் என தமிழ் கவிதைக்கும், கதை இலக்கியத்துக்கும் ஆழமும் வளமும் சேர்த்த இடம் கரிசல் பூமி.
கரிசல் நிலத்தின் விவரிக்கப்படாத இருட்டையும், இயற்கையையும், பெண்களின் பெருமூச்சுகளையும் தொன்ம மொழியில் கதைகளாகச் சொல்லி புதிய கதைசொல்லியாக தமிழில் அதிர்வுகளை ஏற்படுத்தியவர் கோணங்கி.
தமிழின் புராதனக் கதைசொல்லல் மரபில் உருவான ‘மதினிமார்கள் கதை’, ‘கொல்லனின் ஆறு பெண்மக்கள்’, ‘பொம்மைகள் உடைபடும் நகரம்’ போன்ற தொகுதிகள் அதுவரை எழுதப் பட்டுவந்த நவீன கதைகளின் மொழியைக் கேள்விக்குள்ளாக்கியவை.
பழுத்துக் கனிந்த மூதாட்டியின் மந்திர மொழியில் பேசிய கோணங்கியின் கதைமொழி, வெவ்வேறு பரிசோதனைகளையும் கடந்தது. அந்த வகையில் அவரது படைப்புகளையும், கோணங்கி என்னும் எழுத்தாளனின் அக உலகத்தையும் அறிந்துகொள்ளும் வகையில் இருக்கிறது இந்த நேர்காணல் நூல்.
இந்த நூலுக்கு கோணங்கியின் அண்ணனும் சிறுகதை எழுத்தாளருமான ச. தமிழ்செல்வன் முன்னுரை எழுதியிருக்கிறார். தனது மன உலகமும், கோணங்கி என்ற சகோதரனின் மன உலகமும் எங்கே மாறுபட்டன என்பதை ஆத்மார்த்த மாகப் பகிர்ந்துகொள்கிறார். கோணங்கியின் படைப்புகள் ஊடாகவும், அவரது ஆளுமைக்கு நெருக்கமாகவும் போய்க் கேள்விகளைக் கேட்டுள்ள கீரனூர் ஜாகிர்ராஜா இந்தப் புத்தகத்தை அருமையான வாசிப்பனுபவமாக மாற்றுகிறார்.
அருமையான தாளகதியைப் பிடித்து நிகழ்த்தப்படும் உச்சாடனத்தைப் போல கோணங்கி தனது பால்ய கால அனுபவங் களையும், தனது சிறுவயதுக் காதல்களையும் சொல்கிறார்.
வயதில் மூத்த தனலட்சுமியின் மீது தான் கொண்ட காதல்தான் தனது படைப்புகளின் அடிநாதமாக இருப்பதைப் பகிர்ந்துகொள்கிறார். போடிநாயக்கனூர் பாசஞ்சர் ரயிலைப் பற்றிப் பேசும்போது காப்ரியேல் கார்சியா மார்க்வெஸின் ‘செவ்வாய்க் கிழமை மதியத் தூக்கம்’ என்ற புகழ்பெற்ற கதை ஞாபகத்துக்கு வருகிறது. கோணங்கியின் படைப்புலகத்தையும், அவரது கலைவாழ்வையும் புரிந்துகொள்ள உதவும் அரிய உரையாடல் நூல் இது. - ஷங்கர்
பாட்டியின் குரல்வளையைக் காப்பாற்றி வைத்திருக்கிறேன்
கோணங்கி நேர்காணல்
சந்திப்பு: கீரனூர் ஜாகிர்ராஜா
பாரதி புத்தகாலயம் 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18
தொலைபேசி: 044-24332424, விலை: ரூ.50