

அமேசான் காடுகளைப் பாதுகாக்கப் போராடிய சிக்கோ மெண்டிஸ் எழுதிய ‘காடுகளுக்காக ஒரு போராட்டம்’ (தமிழில்: பேரா. ச. வின்சென்ட்) என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அ. வெண்ணிலா தொகுத்த ‘மீதிமிருக்கும் சொற்கள்’ 1930 முதல் 2014 வரை பெண் எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகள் அடங்கிய சிறப்பான புத்தகத்தையும் சமீபத்தில் படித்தேன். நான் படித்ததில் மற்றொரு முக்கியமான புத்தகம் மைத்ரேயி தேவி எழுதிய ‘கொல்லப்படுவதில்லை’ (வங்க மொழியிலிருந்து தமிழில் சு. கிருஷ்ணமூர்த்தி) நாவல். தனது இளம் பருவத்துக் காதலின் நினைவில் வாழும் பெண்ணைப் பற்றிய அற்புதமான நாவல் இது.
சமீபத்தில் எழுதிய கவிதைகளின் தொகுப்பாக ‘சூரியன் ஓர் உப்புக் கடல்’ புத்தகம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இருளர் இன மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் ‘காயாம்பூ’ நாவலை எழுதியிருக்கிறேன். இந்த நாவலின் ஒரு பகுதி டேனிஷ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. ‘கொற்றவை சிரித்தாள்’ எனும் நாவலையும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
சுண்டல்
இணைய உலகிலும் இலக்கிய உலகிலும் ‘அடையாளம் தெரியாத மர்ம நப’ராக அறியப்படுபவர் பேயோன். அவரைப் போலவே, தற்போது, ஃபேஸ்புக்கில் ‘மத்த விலாச பிரகசனம்’ என்ற பெயரில் ஒருவர் தோன்றி இலக்கியப் பதிவுகள், நகைச்சுவைக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டு கலக்குகிறார். பேயோனின் பூர்வாசிரமத்தை ஊகித்துக் களைத்துப்போன இணையவாசிகள், ‘யார் யார் கையாக இருந்தாலென்ன, மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டார்கள்.
தற்போது மத்த விலாச பிரகசனம் யார், இவரா, அவரா, உவரா, ஒருவரா, இருவரா, பலரா என்று குழம்பியபடி அவரது எழுத்துக்களை ரசித்துவருகிறார்கள் இணையவாசிகள். மத்த விலாச பிரகசனம் என்ற அங்கத நாடகத்தை மகேந்திரவர்ம பல்லவன் எழுதியிருக்கிறார் என்பது மட்டுமே நமக்கு உறுதியாகத் தெரிந்த தகவல். யாரென்றே தெரியாத மர்ம நபர் ஒருவர், மத்த விலாச பிரகசனத்தைத் தொடர்பு கொண்டு அவர் யார் என்று கேட்டபோது, “மத்த விலாச பிரகசனம் என்பவர் யாரென்றே எனக்குத் தெரியாது” என்று சொல்லி தொடர்பைத் துண்டித்துவிட்டாராம்.