

மார்ச் 27: உலக நாடக தினம்
உலக நாடக தினத்தை முன்னிட்டு ‘சங்க இலக்கியங்களில் நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடுகள் மற்றும் நிகழ்த்து முறைகள்’ என்ற தலைப்பில் மூன்று நாள் தேசியக் கருத்தரங்கை புதுவைப் பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைத் துறை ஏற்பாடு செய்து நடத்தியது. கடந்த 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடந்த இந்தக் கருத்தரங்கில் சங்க இலக்கியச் சடங்குகள் நிகழ்த்துக் கூறுகள், சங்க இலக்கியச் சடங்குகளும், பெண்களும், கூத்தும் சடங்குகளும், சமயக் கூறுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி உதவியுடன் நடைபெற்ற மூன்று நாள் கருத்தரங்க விழாவில் புதுவைப் பல்கலைக்கழகப் பதிவாளர் பன்னீர்செல்வம், புதுவைப் பல்கலைக்கழக முன்னாள் இயக்குநர் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, புதுவைப் பல்கலைக்கழக நிகழ்கலைப் பள்ளியின் துறைத் தலைவர் கரு.அழ. குணசேகரன், பேராசிரியர் அ.ராமசாமி, புதுவைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை பேராசிரியர் சுஜாதா விஜயராகவன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுண்கலைத் துறை க.சிதரம்பரநாதன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மூன்று நாட்கள் நடைபெற்ற கருத்தரங்க ஏற்பாடுகளை பேராசிரியர் எம்.சுப்பையா ஒருங்கிணைத்தார். இந்த விழாவில் அறிஞர்கள் நிகழ்த்திய உரையின் சுருக்கங்கள்:
பேராசிரியர் கே.ஏ.குணசேகரன்
பாணர்கள், விரலியர்கள் இசைக்கருவிகளைச் சேர்த்து ஒரு பலாப்பழ மூட்டைப் போலக் கட்டிக்கொண்டு அந்தப் பகுதியில் புதுத் தண்ணீர் வருவதால் மங்கள இசை நடத்திச் சடங்கு நடத்தப் புறப்படுகிறார்கள். செல்லும் வழியில் சற்று ஓய்வுக்காக மர நிழலில் அமரும்போது, மரத்திலிருந்த ஒரு குரங்கு, மூட்டைக்குள் பழம் ஏதோ இருக்கிறது என்று வந்து இசைக்கருவி மூட்டையை அவிழ்க்கிறது. மூட்டைக்குள் இருந்த ‘டப்’ என இசைக் கருவியின் சத்தம் கேட்டு குரங்கு ஓட்டம் பிடிக்கும். அந்தத் திடீர் சத்தத்தில் மரக்கிளையில் அமர்ந்திருந்த குயிலும் திசை மாறிச் செல்லும். இசைக் கலைஞர்கள், மன்னர் சார்ந்தவர் என்பதால் அவர் வந்ததும் சடங்குகள், வழிபாடல்களில் இறங்க வேண்டும் என்பதற்காகக் காத்திருக்கிறார்கள். பாணர்கள், விரலியர்களுக்குச் சற்று தொலைவில் மலைக்குறவர்களும் கொட்டு மேளத்தோடு மன்னன் வருகைக் காகத் தயாராக நிற்கிறார்கள். இந்த நிகழ்வு புறநானூற்றில் பதிவுசெய்யப் பட்டுள்ளது. இன்றைக்குத் தனித்து இருக்கின்ற நம்பிக்கைகளும், சடங்கு களும், வழிபாடுகளும் முன்பு ஒன்றுக்குள் ஒன்று பிணைந்தே இருந்திருக்கின்றன. ஆகவே, சங்க இலக்கியத்தில் பரவிக் கிடக்கும் ஒன்றிணைந்த நிகழ்த்துக்கலை குறித்து ஆராய வேண்டிய நேரம் இது.
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி,
நடிப்பின் பிரதிபலிப்பு புதிது புதிதாக மாறிக்கொண்டே இருக்கும். மனிதனின் காலடிபட்ட இடங்களில் எல்லாம் நாடகங்கள் போய்ச் சேரும் என்று ஷேக்ஸ்பியர் கூறியிருக்கிறார். 1988-ல் இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையைத் தொடங்கி வைக்க வேண்டும் என்று அழைத்தார்கள். நான்தான் கற்கை நெறிமுறையாக நாடகத் துறை பங்களிப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். அப்படித் தொடங்கப்பட்ட இந்தத் துறையின் செயல்பாடுகள் இந்திய அளவில் கவனிக்கும்படி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பேராசிரியர் அ.ராமசாமி
நாடகங்கள் நிகழ்காலத்தைப் பற்றிப் பேச வேண்டும். ஷேக்ஸ்பியர் அந்தக் காலத்தில், அவர் வாழ்ந்த காலகட்டத்திற்கு முந்தைய காலகட்ட நிகழ்வுகளின் பின்னணியில் நாடகங்கள் நடத்தினாலும், அதில் அவர் வாழ்ந்த நிகழ்காலத்தின் பிரதிபலிப்பு இருக்கவே செய்திருக்கிறது. மேலை நாட்டுக் கலாச்சார, உலக நாடகப் புரிதல் என்று வந்தாலும் நம் மண்ணின் மரபைச் சார்ந்து இல்லாமல் போனால் அது சரியாக அமையாது. நாடகக்காரர்கள், நவீன நாடகங்கள் படைக்கும்போது இதில் கவனமாக இருக்க வேண்டும்.
பேராசிரியை சுஜாதா விஜயராகவன்
இலக்கியம் மூலம் சிந்தனைகளை வெளிப்படுத்த முடியும். அப்படிச் சிறந்த சிந்தனையை விதைக்ககூடிய இலக்கியத்தை நிகழ்த்துக்கலை வழியே கொடுக்கும்போதுதான் எல்லாத் தரப்பு மக்களிடமும் போய்ச் சேரும். அதனால்தான் இங்கே கலையின் பங்களிப்பு அவசியமானதாகப்படுகிறது. சமீப காலமாக சரித்திர நிகழ்த்துக்கலை இலக்கிய இயக்கமாக மாறிவருகிறது