

‘தாய்’, ‘மூவர்’, ‘அர்த்மோனவ்கள்’ உள்ளிட்ட மறக்க முடியாத நாவல்களையும் 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதிய ரஷ்ய எழுத்தாளர் மக்ஸிம் கார்க்கி, தனது வாழ்க்கை அனுபவங்கள்பற்றி எழுதிய கட்டுரைத் தொகுப்புகள் மூன்று பாகங்களாக வெளிவந்தன.
இவற்றில் கடைசித் தொகுப்பு ‘மை யூனிவர்சிட்டீஸ்’. 1923-ல் ரஷ்ய மொழியில் வெளியான இந்தப் புத்தகத்தை, ‘யான் பயின்ற பல்கலைக்கழகங்கள்’(தமிழில்: ஆர்.எச். நாதன், எஸ். நாராயணன்) எனும் பெயரில் காரைக்குடி புதுமைப் பதிப்பகம் 1958-ல் வெளியிட்டது. 256 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் மாணவர்கள், தொழிலாளிகள், விவசாயிகள், முதலாளிகள் என்று பலதரப்பட்ட மனிதர்களுடனான தனது சந்திப்புகள், அவை தனக்குள் ஏற்படுத்திய தாக்கம் என்று பல்வேறு விஷயங்களைப் பதிவுசெய்திருக்கிறார் மக்ஸிம் கார்க்கி.
வேலையில்லாமல் இருந்த நாட்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் இதில் பதிவு செய்திருக்கிறார். தனது எழுத்தின் வழியே 19-ம் நூற்றாண்டில் சோவியத் ஒன்றியத்தின் சமூக வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டியிருப்பார் கார்க்கி.