

நம் சந்தடிகளிலிருந்து, வெம்மையிலிருந்து வெளியேறும் ஒற்றையடிப்பாதையை கவிதைதான் தொடங்கி வைக்கிறது. ‘அத்தி பழுத்த மரத்தில் ஆயிரம் இரைச்சல்/புத்தி முதிர்ந்த இடத்தில் புரிதல் இல்லா மௌனம்' என நவீன சூஃபி மனநிலையிலுள்ள கவிதைகள் அடங்கிய தேவேந்திர பூபதியின் புதிய தொகுப்பு இது.
ஒரு வயலின் இசையைப் போல் நமது அமைதிக்குள் நுழையும் இன்னொரு அமைதிதான் தேவேந்திர பூபதியின் கவிதைகள். மனித உறவுகளில், குணநலன்களில் தாக்கத்தை விளைவிக்கும் பருவகாலங்களை, பயிர்களை, நிலத்தோற்றங்களைப் பின்னணியில் கொண்ட பருண்மை கூடியவை. ‘உன்னை ஒப்படைத்தது ஒரு பனிக்காலம்/ அப் பருவத்தில் நாம் மறு பிறவிகளாய்ப் பிரிந்தோம்/ திணை மட்டும் திரிந்து/ பாலை ஆகி இருந்தது பெண்ணே' என தான் பால்யத்தில் நேசித்த பெண்ணின் பிரிவுத் துயரால் நிலம் பாலையாயிற்று என்கிற தேவேந்திரபூபதியிடம் தெரிவது நம் சங்கக் கவிகளின் சாயல்.
இவ்வண்ணம் மனிதனுக்கும் நிலத்துக்கும் காலத்துக்கும் பருவத்துக்குமிடையேயான தொடர்பை வெகு ஸ்தூலமாக பேசும் கவிதைகள் காணக்கிடைப்பது அபூர்வமே. மேலும், கவிதைகளில் வார்த்தைகளுக்கு இடையேயான இசைவு, லயம் கூடி அழகியலும் அமைதியும் முழுமை பெற்ற பாங்கையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
எல்லாமே குலையும், குழையும். இதில் இழப்பொன்று மில்லை. குலைந்தது காலத்தை விழுங்கியது. குழைந்ததோ காலத்துக்குள் பயணிக்கப்போவது. மௌனம் கலந்த இந்த வார்த்தைகள் சடாரென வெளிச்சம் காட்டுகின்றன. இது போலவே ‘நானொரு மேனி’ என ஒரு கவிதை. ஒரு மரம் வெட்டப்பட்டுவிட்டது. ‘அவ்வளவு வெற்றிடத்தை/ அது ஏன் அடைத்து நின்றிருந்தது' என்கிறார்.
கவிஞரின் விதை சொற்களே. அவையே அவருடைய வனத்தைப் பசுமையாக்குகிறது. இந்தச் சொற்களைக் கொண்டிருக்கும் நடுக்கடல் மவுனத்தை நம் இதயக் கரங்களால் அள்ளிப் பருகலாம்.
நடுக்கடல் மௌனம்
தேவேந்திர பூபதி, காலச்சுவடு பதிப்பகம் ,
669, கே.பி.சாலை நாகர்கோவில்-629001
தொடர்புக்கு: 04652-278525. விலை: ரூ.70
-கரிகாலன்