

ஒக்லஹாமா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோ ஷெரினியன் எழுதிய ‘தமிழ் ஃபோக் மியூசிக் அஸ் தலித் லிபரேஷன் தியாலஜி’ புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். மதுரை கிறிஸ்தவ இறையியல் கல்லூரியைச் சார்ந்த தியோஃபிலஸ் அப்பாவுவுடைய பாடல்களையும் இசையையும் மையப்படுத்தி எழுதப்பட்ட ஆய்வு நூல் இது. கிருஷ்ணரைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ‘கிருஷ்ணா: எ சோர்ஸ் புக்’ எனும் புத்தகத்தையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். கிருஷ்ணர் எப்படிக் கடவுளாக ஆனார் என்று பேசும் புத்தகம் இது.
போரால் உருக்குலைந்துபோயிருந்தாலும், கடந்த 40 ஆண்டுகளில் அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் தென் கொரியாவின் வரலாற்றை, அங்கு குடியேறும் தமிழ்க் குடும்பத்தின் பின்னணியில் நாவலாக எழுதிக்கொண்டிருக்கிறேன். நாவலின் பெயர்: அழாதே மச்சக்கன்னி!
சுண்டல்
பொதுவெளியில் இயங்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். அதுவும் தாங்கள் சார்ந்த மதம், இனம்பற்றிய விமர்சனங்களை முன்வைத்தாலோ பெண்களுக்கான உரிமைகள்பற்றிப் பேசினாலோ பல திசைகளிலிருந்தும் வசைமழையை எதிர்கொள்ள நேர்கிறது. சமீபத்தில் ஒரு போலீஸ் அதிகாரி, பெண் போலீஸிடம் ஆபாசமாகப் பேசிய குரல் பதிவு வெளியானபோது, அதை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த சிலர், அந்த நிகழ்வுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத பெண்களின் படத்தை அதில் பயன்படுத்தினார்கள்.
பெண் கவிஞர் ஒருவர் இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து, ஃபேஸ்புக்கில் அவரைப் பற்றிய அவதூறுகள் தொடர்கின்றன. இந்த அவதூறுகளைச் செய்வது அந்தக் கவிஞரின் மதத்தினரே என்றும் சொல்லப்படுகிறது. அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள் என்று பலரும் இதற்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்திருக்கிறார்கள்.