

1953-ம் ஆண்டு பிறந்த கி.பி.அரவிந்தனின் இயற்பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிஸ். 1978-ம் ஆண்டிலிருந்து 1988-ம் ஆண்டுவரைத் தமிழகத்திலிருந்தபோது அவருக்குப் பெயர் சுந்தர். புலம்பெயர்ந்தோர் இலக்கிய உலகில் கி.பி.அரவிந்தன் என்ற பெயரை எப்படி மறக்க முடியாதோ அவ்வாறே ஈழ விடுதலைப் போராட்ட அரசியலில் சுந்தர் என்ற பெயரை மறக்க முடியாது.
1987-ம் ஆண்டு ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் மூலம் தமிழகத்தைப் போராட்டப் பின்தளமாகப் பயன்படுத்திய வாழ்க்கை முறை முடிவுக்கு வந்தபோது போராட்ட இயக்கத்தவர்கள் இந்திய இராணுவ விமானத்தில் ஈழத்திற்குத் திரும்பினர். ‘சுந்தர்’மட்டும் மண்டபம் முகாமுக்குச் சென்றார். கப்பலில் இலங்கை செல்ல அகதியாகப் பதிவுசெய்தார். கப்பலிலேயே காங்கேசன்துறை வழியாக 16 ஆண்டுகளுக்குப் பின் வீடு திரும்பினார்.
எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இருந்தது. ஆனால் உடனிருந்தவர்கள் மேல் நம்பகத்தன்மை போயிருந்தது ‘நம்பகத்தன்மையற்றவர்கள்’ சூழ இருந்தபோதுதான் மிகவும் உடைந்திருந்தார். இந்த விரக்தியைத்தான் இந்தத் தோல்வியைத்தான் கவிஞனாகத் தன்னை வடிவமைத்துக் கொள்ள, மடைமாற்றிக் கொள்ளப் பயன்படுத்திக் கொண்டார்.
இருபத்தைந்து ஆண்டுக் காலம் பிரான்ஸ் தேசத்தில் வாழ்ந்த அகதி வாழ்க்கை முறையில் இலக்கிய ஆளுமையாக, கலை ஆர்வலராக கி.பி.அரவிந்தன் உச்சம் பெற்றார். தாயகமான ஈழத்தின் நிகழ்வுகள் பற்றியும் மொழியால் ஒன்றுபட்ட தமிழக நிகழ்வுகள் பற்றியும் மிகுந்த அக்கறை செலுத்தி வந்தார். அன்றாட நடப்புகளின் விவரங்களை விரல்நுனியில் வைத்திருந்தார்.
தமிழகத்துப் படைப்பாளிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஓவியர்கள் என்று ஒரு பெரும் உறவு வட்டத்தையே கட்டிக்காத்து வந்தார். நோய் அவரை வாட்டியபோதும் தொலைபேசி வாயிலாக, மின்னஞ்சல் மூலமாக, ஸ்கைப் வழியாகப் பேசிக்கொண்டே இருந்தார். தமிழகத்தில் போராளியாக வாழ்ந்ததைவிட கலை இலக்கியம் பயிலும் தீவிர மாணவனாகச் செயல்பட்டார். கி.பி.அரவிந்தனுக்கு ஐரோப்பிய நாடோடிகளை நிரம்பப் பிடிக்கும். அவர்களுடைய வண்ணமிகு ஆடைகள் அவர்களின் கலைமேவிய வாழ்க்கை முறையை வியந்து வியந்து பேசுவார்.
எதையும் கண்டுகொள்ளாத ஐரோப்பிய தேசங்களின் அவசர உலகத்தில் தமிழ்க் கலைஞர்களே தமிழ்ப் படைப்பாளிகளே நாங்கள் இருக்கிறோம் என்று வருவிருந்து காத்து வரவேற்க அவர் இல்லக் கதவு எப்போதுமே திறந்திருந்தது. விருந்தினர்களைக் கலைக்கூடங்களுக்கும் வரலாற்று நினைவுச் சின்னங்களுக்கும் அழைத்துச் செல்ல நண்பர்கள் பட்டாளத்தையே கூட வைத்திருந்தார். இவ்வளவுக்கும் அவர் செல்வச் செழிப்பு மிகுந்தவரல்ல.
நீங்கள் ஆரம்பத்தில் என்ன வேலை செய்தீர்கள் என்று அவரிடம் ஒரு முறை கேட்கப்பட்டபோது அவர் சொன்னார், “கிளீனிங் வேலைதான் செய்தேன். கார்ப்பெட் சுத்தம் செய்ய வேண்டும், டாய்லெட் கழுவ வேண்டும் மேசை துடைக்க வேண்டும். சிகரெட் ஆஷ்ட்ரே துடைக்க வேண்டும். காலையில் ஊழியர்கள் அலுவலகம் வருவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்புபோய் வேலை செய்ய வேண்டும். அலுவலகம் முடிந்ததற்குப் பின் இரவு ஏழு மணியிலிருந்து பத்து மணி வரை வேலை செய்யவேண்டும்” இப்படிப்பட்ட உழைப்பில்தான் விருந்தினரை அவர் வரவேற்றார். அவர்கள் மனம் நோகாமல் உபசரித்தார்.
பிரான்சிலிருந்து மௌனம் எனும் காலாண்டிதழை கி.பி.அரவிந்தன் ஆசிரியராக இருந்து நடத்திவந்தார். ஓசை, சுவடு, ஈழமுரசு ஆகிய இதழ்களிலும் பங்களிப்புச் செய்துள்ளார். இனியொரு வைகறை, முகங்கொள், கனவின் மீதி மூன்று கவிதைத் தொகுப்புகள் தனித்தனியாக வெளிவந்துள்ளன. இம்மூன்று நூல்களும் ஒருசேரத் தொகுக்கப்பட்டு ‘மிச்சமென்ன சொல்லுங்கப்பா’ எனும் பெயரில் 2015-ம் ஆண்டு வெளிவந்துள்ளது. கி.பி.அரவிந்தனின் தன் வரலாறு, நேர்காணல்கள் கட்டுரைகள் அடங்கிய ‘இருப்பும் விருப்பும்’ எனும் நூல் வெளிவந்துள்ளது.
2009, மே 17, முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் கி.பி. அரவிந்தனின் அரசியல் எதிர்பார்ப்பையும் அரசியல் ஈடுபாட்டையும் நொறுக்கிப் போட்டது.
“ஈழக்குடியுரிமை விண்ணப்பிக்கும் போதே எனது அகதி நிலையை மாற்ற விரும்புகிறேன். அப்படி ஒரு நிலை தோன்றும் என்றே நம்புகிறேன். அதுவரை சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியதுதான். பரவாயில்லை. அகதியாகவே வாழ்ந்து விட்டுப் போகிறேன். அல்லது அகதியாகவே செத்துப் போகிறேன்” என்று சொன்ன கி.பி. அரவிந்தன் மார்ச் 8ஆம் தேதி அகதியாகவே செத்துப் போய்விட்டார் என்பது நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
கட்டுரையாளர், பதிப்பாளர் - தொடர்புக்கு: saalaramvaigarai@gmail.com