

நம்மைச் சூழ்ந்திருக்கும் புறவுலகின் எழிலார்ந்த குறியீடு வண்ணத்துப்பூச்சி. இந்தியா வெப்பநாடாக இருப்பதால் இந்த வண்ணமிகு உயிரிகளுக்கு ஏராளமான வாழிடங்கள் இருக்கின்றன. என்றாலும், இவற்றுக்குச் சரியான பெயர்கள் இல்லை. அவற்றைப் பற்றிய அறிவியல்பூர்வமான தகவல்கள் கிடைப்ப
தில்லை. ஆகவே, அவை கவனிக்கப்படுவதும் இல்லை. இந்தக் குறைகளைப் போக்க வந்திருக்கிறது டாக்டர் ஆர். பானுமதியின் ‘வண்ணத்துப்பூச்சிகள்: அறிமுகக் கையேடு.’
தமிழகத்து வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றி அறிந்துகொள்வதற்காகப் பல ஆண்டுகளுக்கு முன் நூல்களை நான் தேடியபோது, சென்னை அருங்காட்சியக வெளியீடாக டி.எஸ். சத்தியமூர்த்தி எழுதிய ஆங்கிலக் கையேடு மட்டுமே கிடைத்தது (இந்நூல் இன்னும் கிடைக்கின்றது என்றே அறிகிறேன்). எனக்குத் தெரிந்து தரமான ஒரு அறிவியல் கட்டுரைகூட இல்லை. இந்தப் பின்புலத்தில்தான் நாம் பானுமதியின் கையேட்டைப் பார்க்க வேண்டும்.
இத்தகைய ஒரு கையேட்டை உருவாக்க பானுமதியின் 30 ஆண்டு களப்பணி கைகொடுத்திருக்கிறது. காட்டுயிர் பராமரிப்புக்கு ஆதரவு அதிகம் உருவாகாத ஆண்டுகளிலிருந்து அவர் இந்தத் தளத்தில் இயங்கிவந்திருக்கிறார். இரண்டு வருடங்களாக ‘லேர்னிங் த்ரூ தி லென்ஸ்’ என்ற திட்டத்தில் இவரது ஈடுபாட்டின் விளைவுதான் இந்தக் கையேடு.
நீல அழகி!
இந்தக் கையேட்டின் 230 வண்ணப் படங்களில் பெருவாரியானவை அவர் எடுத்தவை.
வண்ணத்துப்பூச்சிகளைப் படமெடுப்பது சிக்கலான காரியம். சில விநாடிகள்கூட ஓரிடத்தில் இல்லாமல் பறந்துகொண்டேயிருக்கும். இந்தப் பிரச்சினைகளைச் சமாளிக்க டிஜிட்டல் புகைப்படக் கலை கைகொடுக்கிறது. அவர் எடுத்திருக்கும் படங்கள் அற்புதமானவை, 56-ம் பக்கத்திலுள்ள நீல அழகி (ப்ளூ மோர்மன் - Blue Mormon) போல. இது எனக்குப் பிடித்த வண்ணத்துப்பூச்சி. எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பார்த்ததுண்டு. அதைப் போல, இந்தியாவில் பட்டாம்பூச்சிகளைப் படமெடுப்பதில் முன்னோடியான எஸ்.கார்த்திகேயனின் புகைப் படங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. கையேட்டை, நூலின் பேசுபொருளுக்கேற்ப வெகு அருமையாக வடிவமைத்திருக்கிறார் வெ. பாலாஜி. நூலின் அச்சாக்கம் வெகு நேர்த்தி.
இந்த உயிரினங்களை அடையாளம் காட்டுவதில் பல சிரமங்கள் இருந்தாலும் அறிவியல்பூர்வமாக எழுதப்பட்டிருக்கும் இந்த நூல் குழப்பத்துக்கிடமின்றி, எளிய தமிழில் கச்சிதமாகத் தகவல்களைத் தருகிறது. வண்ணத்துப்பூச்சிகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் தோற்றத்தில் வேறுபாடு உண்டு. வெவ்வேறு காலங்களிலும் இப்பூச்சிகளின் புறத்தோற்றம் மாறுபடும். முட்டை, புழு எனப் பல்வேறு வாழ்க்கைப் பகுதிகளும் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக வண்ணத்துப்பூச்சிகளும் வலசைபோகும் பழக்கம் உடையவை.
சுற்றுச்சூழலுக்கு வண்ணத்துப்பூச்சிகள் பலவிதத்திலும் பங்களிப்புகளைச் செய்கின்றன. அயல்மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதோடு, பல பறவைகளுக்கும் இன்னும் சில சிற்றுயிர்களுக்கும் இரையாகவும் ஆகின்றன. ஒரு வாழிடம் சீராக இருக்கிறது என்பதை அங்கு சஞ்சரிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் காட்டக்கூடும்.
பொருத்தமான பெயர்கள்
இந்தக் கண்கவரும் உயிரினங்களுக்குத் தமிழில் பெயர்கள் இல்லாத குறையை மொழிபெயர்ப்பு, புதுச் சொல்லாக்கம் என்ற இரு முறைகளைக் கையாண்டு தீர்த்துவைக்க முயல்கிறார் பானுமதி. இந்தப் பணியை மிகுந்த கவனத்துடன் செய்திருக்கிறார். எடுத்துக்காட்டாக, ‘புஷ் ஹாப்பர்’ (Bush Hopper) என்ற வண்ணத்துப்பூச்சிக்கு ‘புதர்த்தாவி’ என்று பெயர் சூட்டுகிறார். இரண்டாவது முறையில், ‘காமன் நவாப்’ (Common Nawab) என்ற வண்ணத்துப்பூச்சிக்கு ‘இரட்டைவால் சிறகன்’ என்று பெயரிடுகிறார்.
ஜெகநாதன் போன்ற மற்ற தமிழறிந்த உயிரியலாளர்களைக் கலந்தாலோசித்து இந்தப் பெயர்களைப் பொருத்தமாக அவர் உருவாக்கியிருக்கிறார். இந்தப் பெயர்கள் புழக்கத்துக்கு வர வேண்டியது அவசியம். உதாரணமாக, நாம் எங்கும் காணக்கூடிய ‘பிளெய்ன் டைகர்’ (Plain Tiger) என்ற வண்ணத்துப்பூச்சியை ‘அதோ ஒரு வெந்தய வரியன்’ என்று சுட்டிக்காட்டும் காலம் வர வேண்டும். அது மட்டுமல்ல, இந்தப் பெயர்கள் இந்திய உயிரியல் மதிப்பாய்வகத்தால் (Zoological Survey of India) ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இப்போது ஒரு தமிழர்தான் அதற்கு இயக்குநராக இருக்கிறார் என்பதால் இது சாத்தியமாகும் என்று நம்பலாம்.
வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை நம் நாட்டில் குறைந்துவருகிறது என்பதை உயிரியலாளர்கள் வருத்தத்துடன் பதிவுசெய்திருக்கிறார்கள். சுற்றுச்சூழல் சீரழிவின் ஒர் அடையாளம்தான் இது! வாழிட அழிப்பு, இரை தாவரங்களின் அழிவு, பூச்சிமருந்துகளின் தாக்கம் என்று பல காரணங்கள்!
வண்ணத்துப்பூச்சிகளின் மேல் ஆர்வத்தை உருவாக்குவதற்கும், உயிர்ப் பல்வகைமையைப் பேணுவதற்குமான ஓர் அடிப்படைத் தேவையை இந்த நூல் நிரப்புகிறது. ஒவ்வொரு கல்லூரியிலும் பள்ளியிலும் இருக்க வேண்டிய நூல் இது. பரிசாக அளிக்கவும் உகந்தது.
வண்ணத்துப்பூச்சிகள்: அறிமுகக் கையேடு
பக்கம்: 264. வண்ணப்படங்கள்: 230 விலை ரூ. 295.
வெளியீடு: க்ரியா பதிப்பகம், புதிய எண் 2, பழைய எண் 25,
முதல் தளம், 17-வது கிழக்குத் தெரு, காமராஜர் நகர்,
திருவான்மியூர், சென்னை - 600 041.
தொலைபேசி: 044-4202 0283
- சு. தியடோர் பாஸ்கரன்,
கானுயிர் ஆர்வலர், ‘சோலை எனும் வாழிடம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்,
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com