Published : 21 Feb 2015 12:40 PM
Last Updated : 21 Feb 2015 12:40 PM

உதாசீனங்களே சன்மானமாய்…

வெற்றி பெற்றவர்களின் வரலாறு எளிதில் பரவிவிடும். அதற்குப் பெரும் எத்தனிப்புகள் அவசியமல்ல. ஆனால், வெற்றிபெறும் வரை அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் போராட்டங்களும் அவஸ்தையானவை. வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரே அளவிலான உழைப்புதான் அவசியப்படுகிறது. ஆனால், வெற்றிக்கு மரியாதையும் தோல்விக்கு உதாசீனமுமே சன்மானங்கள். இந்த மாயம் புரிபடாதபோதும் படைப்பின் மீது கொண்ட தீராத காதலால் பல ஆளுமைகள் திரையென்னும் சுழலுக்குள் சிக்கிச் சுழல்கிறார்கள். அப்படியொரு ஆளுமை ஜெயபாரதி.

தீவிரமான தமிழ் திரைப்படங்களில் ஈடுபாடு கொண்ட ஜெயபாரதி என்னும் பெயர் தமிழ்ப் பார்வையாளர்களுக்கு ஓரளவு பரிச்சயமானதே. ஆனாலும் அவரது குடிசை, உச்சிவெயில், நண்பா நண்பா போன்ற படங்களைப் பற்றித் தெரிந்திருக்கும் அளவுக்கு அவரைப் பற்றி அறிந்திருப்போமா என்பது சந்தேகமே. ஜெயபாரதி என்னும் இயக்குநரின் வாழ்க்கைச் சம்பவங்களின் தொகுப்பை ‘இங்கே எதற்காக?’ என்னும் பெயரில் நூலாக அவரே எழுதியுள்ளார்.

பத்திரிகையாளர், இயக்குநர், நடிகர் என்ற பல்வேறு பணிகள் காரணமாக நாம் அறிந்த எத்தனையோ ஆளுமைகளை அவர் எதிர்கொண்டுள்ளார். அவர்களின் மற்றொரு பக்கத்தைக் கிண்டலாகவும் கேலியாகவும் ஆழமான மன உளைச்சல் தொனிக்கப் பகிர்ந்துள்ளார்.

இறந்தவர்களைப் பற்றி தான் அறிந்த மாறுபாடான தகவல்களைத் தெரிவிக்க ஜெயபாரதி தயங்கவே இல்லை. தான் சந்தித்த பல ஆளுமைகள்குறித்த தகவல்களை அவர் தெரிவிக்கும்போது நமக்கு அதிர்ச்சி ஏற்படும்போதும் அவற்றின் நம்பகத் தன்மை பற்றிய சந்தேகங்களும் எழாமல் இல்லை. ஆனாலும், நூலை வாசிப்பதற்கு இது தடைக்கல்லாக அமையவில்லை.- ரிஷி

இங்கே எதற்காக?
இயக்குநர் ஜெயபாரதி
டிஸ்கவரி புக் பேலஸ் பி.லிட்.
கே.கே.நகர் மேற்கு, சென்னை-78
விலை ரூ: 150 தொலைபேசி: 044-65157525



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x