எளிய சொற்களாலான சூத்திரம்

எளிய சொற்களாலான சூத்திரம்
Updated on
1 min read

காரல் மார்க்ஸின் மூலதனம் நூலை அணுகுவதற்கான திறவுகோலைத் தந்திருக்கிறார் த.ஜீவானந்தம். ‘மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்’ என்னும் நூல், தன் தலைப்புக்கு ஏற்ப மூலதனத்தை வாசகருக்கு விரிவாகவும் நுட்பமாகவும் அறிமுகப்படுத்துகிறது.

மார்க்ஸின் நூலின் முதல் தொகுதி ஜெர்மன் மொழியில் 1867 செப்டம்பர் 14-ல் வெளியானது. 1883-ல் மார்க்ஸ் மரணமடைந்ததால் மூலதனத்தின் இரண்டாம், மூன்றாம் பாகங்களை எழுதும் வேலையை மார்க்ஸின் நண்பர் எங்கல்ஸ் தொடர்ந்தார்.

அவர்கள் இருவரும் மறைந்த பிறகு மூலதனத்தின் நான்காம் தொகுதியை உபரி மதிப்பின் தத்துவம் எனும் தலைப்பில் கார்ல் காவுத்ஸ்கி 1910 -ல் வெளியிட்டார்.

மனித குலத்தில் தற்போது நிலவும் துன்பத்தின் ஊற்று முதலாளித்துவ உற்பத்தி முறைதான் என மூலதனத்தின் தொகுதிகள் மூலமாக மார்க்ஸ் விவாதிக்கிறார். 19-ம் நூற்றாண்டில் பல அறிவியல் சாதனைகள் மலர்ந்தன.

மனித சமூகத்தின் அரசியல், பொருளாதாரச் செயல்பாடுகளின் வரலாறையும் அவற்றின் எதிர்காலத்தையும் மனிதனுக்குத் தெளிவுபடுத்தும் அறிவியல் சாதனையாக மூலதனம் நூலின் தொகுதிகள் வெளியாயின.

மனித சமூக வளர்ச்சி எங்கிருந்து தொடங்கி, எங்கே போய்க்கொண்டிருக்கிறது எனும் மர்மங்களை விடுவிக்கும் சூத்திரங்களை மார்க்ஸ் தருகிறார். இதனால் சமூக வளர்ச்சியின் எந்தக் கட்டத்தில் நிற்கிறோம் என்பதை உழைக்கும் மக்கள் புரிந்துகொள்ள வாய்ப்புகள் பிறந்தன. மூலதனத்தின் முதல் மொழிபெயர்ப்பு 1872-ல் வெளியான ரஷ்ய மொழியிலானது. ரஷ்யப் புரட்சியின் காரணிகளில் அதுவும் ஒன்று.

முதலாளித்துவ உற்பத்தி முறை வளராத நாடுகளின் மக்களும்கூட மார்க்சியம் கிடைத்த பிறகு பிற தத்துவங்களை மறுத்தனர்.

தனியொரு நாட்டில் சோசலிசப் புரட்சி வராது என்றும், முதலாளித்துவம் பழுத்து கனிந்த நாட்டில்தான் சோசலிசம் ஏற்படும் என்றுமான தர்க்க ரீதியான எதிர்பார்ப்புகளை எல்லாம் மக்கள் தகர்த்தனர்.

மூலதனத்தின் முதல் தொகுதியைப் புரிந்துகொள்ள ஜீவானந்தம் வழிகாட்டுகிறார். விற்பனைக்காகத் தயாரிக்கப்படும் சரக்கைச் செங்கலாகப் பாவித்து அதன் வழியாக முதலாளித்துவப் பொருளாதார மாளிகையின் தன்மைகளை மனித அறிவுக்குத் திறந்து காட்டும் மார்க்ஸின் கருத்துகளைக் கட்டுக்குலையாமல் வாசகருக்கு விரித்து வைக்கிறார் ஜீவானந்தம்.

கூடியவரையிலும் எளிமையான சொற்கள், எளிய உதாரணங்கள் மூலமாக கருத்துகளை விளக்கியுள்ளார்.

மூலதனத்தின் கருத்துகளைத் தற்காலப் பொருளாதார வளர்ச்சி யோடு இணைத்து விவாதிக்கும் நூல்கள் வர வேண்டிய காலம் இது. இந்த நூல் அத்தகைய முயற்சிக்கு இளைஞர்களைத் தூண்டும் என எதிர்பார்க்கலாம்.

மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்

த. ஜீவானந்தம்

விலை: ரூ. 100

வெளியீடு: சுருதி வெளியீட்டகம்,

123, பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர், சென்னை, 11, தொலைபேசி: 9444009990.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in