

சமீபத்தில் எனக்கு ஒரு நண்பர் ஒரு இலக்கியக் கடிதம் எழுதினார். நண்பரும் எழுத்தாளர்தான். பல நாவல்களும், பல சிறுகதைகளும் எழுதியவர். அவர் நூல்கள் பல பதிப்புகள் வந்திருப்பதாகவும் அவரே எழுதியிருக்கிறார். ஆனால் இலக்கியத்துக்கும் அவருக்கும் வெகு தூரம் என்று நான் சொல்வதைப் பிரச்சினைக்குரிய விஷயமாக வைத்துத்தான் கடிதத்தை எழுதியிருந்தார்.
அதில் டால்ஸ்டாயின் மறுபிறப்பு, ஸோமர்ஸட் மாமின் கத்திமுனை, மாக்ஸிம் கார்க்கியின் தாய் முதலிய நாவல்களைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். இதில் தொக்கி நின்ற விஷயம் என்னவென்றால், “அவற்றிற்கெல்லாம் எந்த விதத்திலும் பின்னடைந்தவையல்ல என் நாவல்கள்” என்பதுதான். எனக்கு இதில் ஒன்றும் ஆட்சேபம் இருக்க முடியாது.
என் படிப்பை வைத்து நான் இலக்கியம் என்று சிலவற்றையும் இலக்கியம் அல்லாதது என்று இன்று எழுதப்படுவதில் சிலவற்றையும் பிரித்துக்கொள்கிறேன். இலக்கியத்துக்கும் இலக்கியமல்லாததற்கும் இடையே உள்ள கோடு எங்கே, காட்டு என்று யாராவது சொன்னால் நான் முழிக்க வேண்டியதுதான்.
அப்படி ஒரு கோடு என் உள்ளத்தில், என் பார்வையில் இருக்கிறதே தவிர சுட்டிக்காட்டுகிற அளவில் எங்காவது இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது.
புள்ளிவிவரங்கள் பயன் தராது. எத்தனை வார்த்தைகளைப் போட்டுக் குழப்பினாலும் இந்த விஷயத்தைத் தெளிவாகச் சொல்ல முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஆனால் கோடு இருக்கிறதோ, இல்லையோ! இலக்கியமல்லாததும் இருக்கிறது. இலக்கியமும் இருக்கிறது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். அதை வார்த்தைகளில் சொல்ல முடியும் என்று நான் எண்ணவில்லை.
நண்பர் தந்திருக்கிற உதாரணங்களைப் பார்க்கலாம்.
டால்ஸ்டாயின் சிறந்த நாவலாக - அதன் அளவில் - நான் ரிஸரக் ஷனைக் (புத்துயிர்ப்பு) கருத மாட்டேன். உலக விமரிசன அபிப்பிராயமும் என் கருத்தை ஆமோதிப்பதாகத்தான் தோன்றுகிறது. அது எப்படியாயினும் என் படிப்புப் பற்றி என் அபிப்ராயம் என் அளவில் முக்கியம். ரிஸரக் ஷனைவிட ‘இவான் இல்லி’ சிறந்த நாவல். அன்னா கரீனினா இன்னும் அதிகமாகச் சிறப்புடைய நாவல். ஆனால் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு வாசகனையும் உணர்ச்சிவசப்படச் செய்கிறது. அதனால் லட்சிய நாவலிலிருந்து ஒரு மாற்றுக் குறைவு என்று சொல்லத் தோன்றுகிறது.
மிகச் சிறந்த டால்ஸ்டாய் நாவல் என்று சொல்ல வேண்டுமானால் ‘வார் அண்ட் பீஸ்’ (போரும் வாழ்வும்) நாவலைத் தான் சொல்ல வேண்டும். நாவல் கலையில் ஒரு மகோன்னதமான சிகரம் அது.
ஆனால் அதைப் படிக்க மனம் உள்ளவர்கள், பொழுதுள்ளவர்கள் இந்தக் காலகட்டத்தில் குறைந்துகொண்டிருக்கிறார்கள். காமிக்காகவோ, சினிமாவாகவோ அதைப் பார்த்துவிடுவது, நாவலைப் படிப்பதைவிடச் சுலபமாகப் போய்விடுகிறது.
மாக்ஸிம் கார்க்கியின் அன்னை என்னும் நாவலைப் புரட்சி நாவல்களுக்கு உதாரணமாக, முன்மாதிரியாகச் சொல்வது வழக்கத்தில் இருக்கிறது. அதில் புரட்சிச் சிந்தனைகளுக்கு சித்தாந்தங்களுக்கு எத்தனை இடம் இருக்கிறதோ அத்தனை இடம் போர்ஜூவா தாய் - மகன் உறவுக்கும் அன்புக்கும் பாசத்துக்கும் இடம் உள்ளது. அந்த டென்ஷன்தான் அதை நாவலாக்கிக் காட்டுகிறது என்று எனக்குத் தோன்றுகிறது.
புரட்சியா, அன்பா என்று நிச்சயமாகச் சொல்ல முடியாமல் இருப்பதே அதன் சிறப்பு என்று சொல்ல வேண்டும். தவிரவும் புரட்சி காரணமாகத் ‘தாய்’ நாவல் மக்கள் கவனைத்தை வெகுவாகக் கவர்ந்தாலும் மாக்ஸிம் கார்க்கியின் மிகச் சிறந்த நூல் என்று அதைச் சொல்ல முடியாது. நாவல்களில் ‘ஆர்ட்மனாஸ் சகோதரர்கள்’ என்றும் ‘டிகேடன்ஸ்’ என்றும் இதைவிடச் சிறப்பாக நாவல்களை அவர் எழுதியிருக்கிறார். ‘லோயர் டெப்த்ஸ்’ என்று ஒரு நாடகம் இதைவிடச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.
எல்லாவற்றிற்கும் மேலாக ‘இருபத்தியாறு ஆண்களும் ஒரு பெண்ணும்’, ‘செல்காஷ்’ போன்ற இருபதுக்கும் அதிகமான மிகச் சிறப்பான சிறுகதைகளை எழுதி இருக்கிறார்.
ஸோமர்ஸட் மாம் பற்றித்தான் நண்பரின் கூற்றைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டும்.
அவர் இலக்கியகர்த்தாவா, வெறும் கதைசொல்லியா, ஒரு காலத்தில் ஒரு கட்டத்தில் உகந்த கவிதைகளை எழுதியவரா, வெறும் பத்திரிகை எழுத்தாளரா என்று சொல்வது சிரமமான காரியமாக இருக்கிறது. அகாதா கிறிஸ்டியையும் ஜேம்ஸ் ஹாட்லி சேஸையும் விட நல்ல தரத்தில் எழுதினார் என்று வேண்டுமானால் சொல்லலாம். அதுக்குக்கூட ஆட்சேபம் இருக்கலாம். ஏனென்றால் கிறிஸ்டியும், ஹாட்லி சேஸும் அவர்கள் தரத்தில் மகோன்னதமான கருத்தை எட்டியவர்கள். மாம் அப்படியல்ல என்று தான் சொல்ல வேண்டும்.
ஜியார்ஜ் மைக்ஸ் என்று ஒரு ஹங்கேரிய ஹாஸ்ய எழுத்தாளர் ஸோமர்ஸெட் மாமைப் பற்றிச் சொன்னதை நினைவிலிருந்துதான் இங்கு தருகிறேன்.
“மாம் ஐந்தாம் தர நாவலாசிரியர். ஆனால் இந்தத் தரத்தைக்கூட என்னால் எட்ட முடியவில்லையே என்று எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது.”
முதல் தரமான எழுத்துக்களை விட மூன்றந்தரமான, ஐந்தாம் தரமான எழுத்துகளை விரும்பிப் படிப்பவர்கள் எப்போதுமே அதிகம்தான். அதில் எதுவும் தவறில்லை என்றும் சொல்ல வேண்டும்.
எல்லாருமே முதல் தரமானதைத்தான் எழுதுவது, முதல் தரமானதைத்தான் படிப்பது என்று வைத்துக்கொண்டுவிட்டால் இலக்கியத்திற்கு உள்ள மேன்மையோ மாட்சிமையோ போய்விடும் என்றுதான் தோன்றுகிறது.
(ஓம் சக்தி இதழில் 1987-ல் க.நா.சுப்ரமண்யம் எழுதிய கட்டுரை)