Last Updated : 01 Feb, 2015 05:17 PM

 

Published : 01 Feb 2015 05:17 PM
Last Updated : 01 Feb 2015 05:17 PM

கலைஞர்கள் விடுக்கும் செய்தி

ஒரு விதத்தில் அதை அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். பல்வேறு குழுக்களையும் எழுத்துப் போக்குகளையும் சேர்ந்த படைப்பாளிகளும் செயல்பாட்டாளர்களும் அரசியல்வாதிகளும் வாசகர்களும் ஒன்றாகப் பங்குபெற்ற கூட்டங்கள் அண்மையில் நடந்தன.

தமிழ் இலக்கியப் பரப்பில் வெவ்வேறு புள்ளிகளில், வெவ்வேறு திசைகளில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பலரும் ஒன்றுபட்டு நிற்பதற்கான காலத்தின் தேவையை உணர்ந்ததன் அடையாளம் இந்தக் கூட்டங்கள்.

படைப்புக்கு எழுந்த சோதனை

எழுத்துக்கு என்றுமில்லாத சோதனை இன்று வந்திருக்கிறது. ஒரு படைப்பாளி எதை எழுத வேண்டும், எதை எழுதக் கூடாது என்பதைச் சாதி, மதக் குழுக்களும் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகள் சிலரும் கூடி முடிவுசெய்ய முடியும் என்பதை வலியுறுத்திவரும் காலம் இது. எழுத்தாளன் செத்துவிட்டான் என அந்த எழுத்தாளனையே அறிவிக்க வைக்கும் சூழல் இது.

படைப்பாளியின் படத்தைப் போட்டுப் பெரிய பெரிய பதாகைகள் வைத்து அவரைச் சமூக விரோதி போலவும் ஒதுக்கப்பட வேண்டியர்போலவும் சித்தரிக்கும் காலம் இது. சாதி, மத உணர்வுகளுடன் எழுத்துக்கு எழும் எதிர்ப்புகள் ஜனநாயக எல்லைகளை மீறிச் செல்வதுடன் எழுதும் கைகளை முடக்கிவிடும் அளவுக்கு வலுப்பெற்றிருக்கும் காலம் இது. எழுத்தாளர்கள் அச்சுறுத்தப்படும் காலம் இது. எனவே எழுதுவதற்கான உரிமையை மீட்டெடுக்க எழுத்தாளர்கள் போராட வேண்டிய காலமாகவும் இது இருக்கிறது.

ஜனநாயகத்தில் நம்பிக்கை

ஜனவரி 20 மற்றும் 25-ம் தேதிகளில் நடந்த இரு நிகழ்வுகள் காலத்தின் நெருக்கடியைப் படைப்பாளர்களும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட செயல்பாட்டாளர்களும் வாசகர்களும் உணர்ந்திருந்ததைக் காட்டின. கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஆகிய அமைப்புகளின் சார்பில் எழுத்துரிமையைப் பாதுகாக்கவும் ஜனநாயக விரோதமான ஒடுக்குமுறைகளை எதிர்க்கவுமான ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஜனவரி 20-ம் தேதி நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு தொடங்கிவைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகள், தமிழர் அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டார்கள். பழ.நெடுமாறன் முதல் அ.மார்க்ஸ்வரை பலரும் பங்கெடுத்த ஆர்ப்பாட்டக் கூட்டம் இது.

ஒன்றுபட்ட படைப்பாளிகள்

சிற்றிதழ் இயக்கம் சார்பில் ஜனவரி 25 அன்று நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் ஓவியர் சந்ரு, கோணங்கி, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சுகிர்தராணி, லஷ்மி மணிவண்ணன் உள்பட பல எழுத்தாளர்கள், ஓவியர்கள், கவிஞர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைப் பதிவுசெய்தார்கள். பல்வேறு கலை வெளிப்பாட்டுப் போக்குகளைச் சேர்ந்த இவர்கள் பரஸ்பரம் தீவிரமாக விமர்சித்தும் விவாதித்தும் வருபவர்கள். இவர்களில் பலர் ஒரே மேடையில் தோன்றி, ஒரே அரங்கில் சந்தித்துப் பல ஆண்டுகள்கூட ஆகியிருக்கலாம். ஆனால் எழுத்தின் அடிப்படை அம்சத்துக்கே அச்சுறுத்தல் வரும்போது எல்லா வேற்றுமைகளையும் தாண்டி ஒன்றிணைய வேண்டும் என்பதை இவர்கள் அனைவரும் ஆழமாக உணர்ந்த செயல்பாடாகவே இந்தக் கூட்டம் அமைந்தது.

பெருமாள்முருகன், துரை. குணா, கண்ணன் ஆகியோரது எழுத்துகளுக்கான எதிர்ப்புகள் ஜனநாயக எல்லைகளை மீறி அச்சுறுத்தும் அளவுக்குச் சென்றுள்ளதைக் கண்டித்த இந்தக் கூட்டம், இதற்கு முன்னால் இதேபோலப் பாதிக்கப்பட்ட படைப்பாளிகளுக்கான குரலையும் எதிரொலித்தது.

தனக்குத் தெரிந்த உண்மையைத் தனக்குச் சாத்தியப்பட்ட படைப்பு மொழியில் வெளிப்படுத்துவதே ஒரு படைப்பாளியின் வேலை. அதில் தன் பொறுப்புணர்வு என்ன என்பதும் ஒரு படைப்பாளிக்குத் தெரியும். வால்மீகி, வியாசர், ஹோமர், காளிதாசன், ஷேக்ஸ்பியர், லியோ டால்ஸ்டாய், ஆல்பர் காம்யு, சில்வியா பிளாத், புதுமைப்பித்தன், ஜி. நாகராஜன் முதலான எந்தப் படைப்பாளியும் யாரிடமும் அனுமதி கேட்டுக்கொண்டு எழுதவில்லை.

ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு புதுமைப்பித்தன் எழுதிய கதைக்கும் எதிர்ப்பு வந்தது. ராஜாஜி உள்ளிட்ட பலர் அதை விமர்சித்தார்கள். எழுதும் உரிமையும் விமர்சிக்கும் / எதிர்க்கும் உரிமையும் சம தளத்திலானவை. ஒடுக்கும் உரிமை என்பது இதற்கு அப்பாற்பட்டது.

எழுத்து உள்ளிட்ட எத்தகைய கலை வெளிப்பாடும் யாராவது ஒருவரைப் புண்படுத்தும் சாத்தியக்கூறு இருக்கவே செய்கிறது. எத்தகைய எழுத்திலும் ‘புண்படுத்தும்’ அம்சங்களை ஒருவர் கண்டுபிடித்துவிடக்கூடும். எனவே புண்படுத்தும் எழுத்தைத் தடை செய்வது என்றால் கலைச் செயல்பாடுகளை முற்றாகத் தடை செய்ய வேண்டும் என்பதே பொருள் என்னும் கருத்து இக்கூட்டத்தில் பல கோணங்களில் அழுத்தமாக முன்வைக்கப்பட்டது.

காலத்தை நோக்கிக் கலைஞர்கள் விடுக்கும் செய்தி இது. காதுள்ளவர்கள் கேட்கக் கடவது.

- அரவிந்தன், தொடர்புக்கு : aravindan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x