

பிபன் சந்திரா எழுதிய ‘நவீன இந்தியாவில் வகுப்புவாதம்’ (என்.சி.பி.எச்., தமிழில்: இரா. சிசுபாலன்) புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இந்தியாவில் வகுப்புவாதம் வளர்ந்த விதம், அதன் அடிப்படைத் தன்மை பற்றிய வரலாற்றுரீதியான ஆய்வு, வகுப்புக் கலவரங்களைப் பற்றிய துல்லியமான பதிவு என்று நீளும் இந்தப் புத்தகம், இவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் பேசுகிறது.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நிலைபெறத் தொடங்கிய 1860 முதல் 1880 வரையில் நிலவிய தாதுவருடப் பஞ்சத்தை அடிப்படையாகக் கொண்டு ‘பஞ்சம்’ எனும் நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்தக் காலகட்டத்தின் சமூகம் / பொருளாதாரம்தான் கதையின் முக்கியப் புள்ளி. இந்திய வேளாண்மையை ஆங்கிலேயர்கள் சுரண்டிய விதம், பஞ்சம் இயற்கையானதா, ‘உருவாக்கப்பட்டதா’ எனும் விவாதமும் இந்நாவலில் இடம்பெறும்.
சுண்டல்
அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் வசந்த் சாய் என அண்மையில் பெயர் மாற்றம் செய்துகொண்டிருக்கும் வசந்த். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் நிலவிய தண்ணீர்ப் பஞ்சத்தைப் பின்புலமாகக்கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல், குறியீட்டுத் தன்மை கொண்டது என விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். அசோகமித்திரனுக்கே உரிய தணிந்த தொனியில் நீருக்கான நெருக்கடியை அசாத்தியமான வீரியத்துடன் சித்தரிக்கும் இந்த நாவல், உண்மையில் வாழ்வின் நெருக்கடியைப் பேசுவதை நம்மால் உணர முடியும். ஏற்கெனவே சிக்கலாகியிருக்கும் வாழ்நிலை, புற உலகின் நெருக்கடியால் மேலும் சிக்கலாகிவிடுவதைக் காட்டும் நாவல் இது. மனித வாழ்வையும் உறவுகளையும் பற்றிய நுட்பமான சித்திரங்கள் கொண்ட இந்த நாவலுக்குத் திரை வடிவம் கொடுக்கும் சவாலை வசந்த் ஏற்றிருக்கிறார்.