நம்முடன் உறவாடும் கவிதைகள்

நம்முடன் உறவாடும் கவிதைகள்
Updated on
1 min read

காலம்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள, வாழ்வனுபம் சார்ந்து வெளிப்படுத்தப்படும் படைப்புகளையே தமிழ்க் கவிதையும் நம்பியிருக்கிறது. சீராளன் ஜெயந்தனின் ‘மின்புறா கவிதைகள்’ நூலில்ஒரு குறுங்காவியம் உட்பட 56 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. தமிழ் வாழ்வின் அன்றாடப் பாடுகளை, அரசியலை, அதிவேகப் பாய்ச்சல் காட்டும் நவீன அறிவியலையும்கூட உள்வாங்கிப் பிரதிபலிக்கும் கவிதைகளாக இருக்கின்றன. எளிமை தனக்கே உரிய கம்பீரத்துடன் ஊடாடும் மொழியில் முதல் வாசிப்பிலேயே நம்முடன் நேரடியாக உறவாடக் கூடியவை இந்தக் கவிதைகள்.

“முதுகில் உருண்டு

நதியில் விழுந்தது கலயம்

சாம்பலாய்க் கரைந்தார்

கையில் தாங்கி

நீந்தச் சொன்ன தந்தை”

- என்ற கவிதை, உலகை நீத்த தந்தைக்கு இறுதிக் கடன் செய்து அஞ்சலியைச் செலுத்துவதைப் பேசும் அதே நேரம், இதே தண்ணீரில் தனக்கு நீச்சல் பழகச் செய்த நினைவுகளையும் அலையாட வைத்துவிடுகிறது. சீராளன் ஜெயந்தனின் தந்தையான ஜெயந்தன் சிறுகதைகள் மற்றும் நாடகத்தில் குறிப்பிடத் தக்க தடங்களை விட்டுச்சென்றவர். இவர் கவிதை வடிவத்தை விரும்பி எடுத்துக்கொண்டிருக்கிறார். முதல் தொகுப்பில் அரும்பி நிற்கும் கவிதைகள், உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டு வெளிப்பட்டிருப்பதே அசலான தேர்ச்சியாக இருக்கிறது.

மின்புறா கவிதைகள்
சீராளன் ஜெயந்தன்
மெய்ப்பொருள் வெளியீடு
38/22. 4-வது பிரதான சாலை,
கஸ்தூர்பா நகர்,
அடையாறு,
சென்னை - 20. தொடர்புக்கு: 044 - 24420630
விலை: 180/-

- சொல்லாளன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in