

இவை அனைத்தும் எனக்குச் சொந்தம் என இத்தனை நாட்கள் நினைத்திருந்தேன். ஆனால் இப்பொழுது அத்தனையும் துறந்து இவ்விடத்தை விட்டு அகல வேண்டும். இந்த மரங்கள், அறைகள், சாளரங்கள், குன்றுகள், வேதால் மலைக்குப் பின்னால் இருக்கும் புல்வெளிகள், அங்கு சிதறிக் கிடக்கும் சிகப்பு குண்டுமணிகள் இவை அத்தனையோடும் இத்தனை காலம் பின்னிப் பிணைந்த உறவு இவ்விடத்தைவிட்டு அகன்ற மறு கணம் உடைந்து விழும்.
அதற்குக் காரணமே தேவை இல்லை. இன்று இணையும் உறவுகள் நாளை உடையும் என்பது யாருக்கும் தெரிவதில்லை. இந்த நிலம் எப்படியும் தன்னை நம்மிடமிருந்து துண்டித்துக்கொள்ளும். ஏனெனில் நம் பாதங்கள் இந்த மண்ணில் வேர் ஊன்றவில்லை.
(சமீபத்தில் ஞானபீட விருதுபெற்ற மராத்திய நாவலாசிரியர் பாலச்சந்திர நெமதேவின் ‘கோசலா’ நாவலின் கதாபாத்திரம் பாண்டுரங்க் மனசாட்சியின் குரல்)