

மசானபு ஃபுகோகா எழுதிய ‘இயற்கை வேளாண்மை' (எதிர் வெளியீடு) படித்துக் கொண்டிருக்கிறேன். நிலத்தை அதன் இயல்பிலேயே பாதுகாத்துச் செய்யும் விவசாயம்தான் இயற்கை விவசாயம் என்கிறார் ஃபுகாகோ. இயற்கை வேளாண்மைக்கு ரசாயன உரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் வேளாண்மையைவிட, உழைப்பு குறைவாகத் தேவைப்படும் என்கிறார். அதீத உற்பத்தி, அதீத தரம் என்பதே இன்றைய மனித உழைப்பின் இலக்காக இருக்கிறது. ஆனால், இயற்கைக்கும் சக மனிதர்களுக்கும் ஊறுவிளைவிக்காத உழைப்புதான் அவசியமானது என்கிறார்.
‘யாமினிக்கு ஒரு கடிதம்' என்ற உரைநடைக் கவிதைத் தொடரை எழுதிவருகிறேன். இரவே பெண்ணாக இருக்கிறது. எனக்கும் வெவ்வேறு பெண்களுக்கும் ஏற்பட்ட உறவு, பிரிவு, ஏக்க உணர்வுகளை இரவைக் சாட்சியாக வைத்து எழுதுகிறேன். காமமும் வலியும் காதலும் சேர்ந்த கவிதைகள் என்று இதைச் சொல்வேன்.
சுண்டல்
எழுத்தாளர்கள் கூடிப் பேசும் சந்திப்புகள் பல புதிய படைப்புகளுக்கும் விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் வழிவகுத்திருக்கின்றன. அந்த வகையில், மே மாதம் இரண்டு நாள் இலக்கியப் பட்டறையை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது, ‘தமிழில் சிற்றிதழ் இயக்கம்’. சிலேட்டு, கல்குதிரை, கடவு, மயன் ஆகிய சிற்றிதழ்கள் நடத்தும் இயக்கம் இது. முதல் நாள் கோணங்கியின் படைப்புலகம் பற்றிய அமர்வுகள். இரண்டாவது நாள் கவிதை பற்றிய அமர்வுகள் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். “நம்மைச் சுய பரிசோதனைக்கு உட்படுத்தத் தொடங்கிவிட்டோமெனில், தமிழின் அடுத்த காலகட்டம் தோன்றிவிடும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சிலேட்டு இதழின் ஆசிரியர் லக்ஷ்மி மணிவண்ணன்.