

தமிழ்ச் சிறுகதைகளுக்கென்று பெருமிதம் மிக்க மரபு இருக்கிறது. நம்பிக்கையூட்டும் சிறுகதைகள் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன. ஆனாலும், நம்பிக்கையூட்டும் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வாசிக்கப் புறந்தருவது ஒரு கதை சொல்லியின் சாமர்த்தியம்தான். அது ஷோபாசக்திக்கு இருக்கிறது. அதை மறுபடியும் மெய்ப்பிக்க வந்து நிற்கிறான் ‘கண்டிவீரன்’. பத்துக் கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பைக் கருப்புப் பிரதிகள் நேர்த்தியாக வெளியிட்டிருக்கிறது.
யாரும் யாரையும் நம்ப முடியாத பதற்றமிகு பின்னணியில், சிங்கள ராணுவமும் போராளி இயக்கங்களும் சந்தேகத்தின் பேரில் எளிய உடல்கள் மீது நிகழ்த்திய குரூரங்களைத் தனது எழுத்தின் வழியாக வாசிப்பவரிடம் கடத்துகிறார் ஷோபா. உள்ளடக்கம் சார்ந்து இந்தக் கதைகள் எதிரும் புதிருமான அரசியல் வாக்கியங்களை வாசிப்பவரிடத்தில் உற்பத்தி
செய்யலாம். உள்ளீடற்ற கதைகள் உலவும் தமிழ்ச் சூழலில் வாசிப்பவருக்கு இது ஆறுதலானதுதான். தவிர, வாசிப்பு என்பதை நாக்கில் அலகு குத்துவது போன்ற சுயவதையாக மாற்றிக்கொண்டிருக்கும் பிரதி களுக்கு மத்தியில், வாசிப்பை மகிழ்ச்சிப்படுத்தும் கருணை கொண்டவை ஷோபாவின் இந்தக் கதைகள். தமிழ்ப் பரப்பில் நின்றுகொண்டு உலகளாவிய கதை சொல்லியாக உருவெடுத்திருக்கிறார் ஷோபாசக்தி.
வதைகளின் சித்திரம்
பத்தும், பத்து விதமாகச் சொல்லப்பட்டவை போன்ற உணர்வைத் தருவது தொகுப்பின் பலம். விமானக் குண்டுவீச்சில் வலது கால் துண்டிக்கப்பட்டு, ராணுவத்தினரிடம் சிக்கிக்கொள்ளும் விடுதலைப் புலியை அவர்கள் அணுவணுவாக வதை செய்வது குறித்த விவரணைகள் கொண்ட ‘ரூபம்’, வாசிப்பவரைத் தொந்தரவு செய்யும் கதை. கலை நேர்த்தியோடு துயரார்ந்த ஒரு குறும்படமாய்க் காட்சிகள் விரியும் கதை அது.
ஷோபாசக்தியின் ஆயுட்காலப் பெருமிதம் ‘கண்டிவீரன்’ கதை. மொத்தம் ஆறே நபர்களைக் கொண்ட ‘ரோஸ்டி’ என்கிற அதி தீவிரவாத இடதுசாரி இயக்கம் ஒரு திருடனைக் கைதுசெய்து வைத்துக்கொண்டு, அவனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றும் முயற்சியில் அவர்கள் படும் அறம்சார் அவஸ்தை பகடியின் உச்சம்.
ராணுவ முகாம், விமான நிலையம், திரையரங்கு, பணியாற்றும் தொழிற்சாலை எனத் தன் உடலைத் தடவிச் சோதனையிடும்போது அவமானமாக உணரும் ஒருவரது நூதன எதிர்வினையான ‘எழுச்சி’ கதையும் நம்மை அதிரச் செய்கிறது. அதேபோல், இலங்கைத் தீவிலும் கவுரவக் கொலை களுக்கான சாதிய முரண்கள் கனன்றுகொண்டிருக்கும் கொடும் சித்திரம் ‘வாழ்க’ கதையில் தீட்டப்பட்டுள்ளது.
படைப்பென்பது நேயர் விருப்பமல்ல
சந்தேகத்தின்பேரில் விடுதலைப் புலிகளால் கைதுசெய்யப்படுகிறவர்கள் சிங்கள ராணுவத்தைவிடக் கொடூரமான சித்தரவதைக்கு ஆளான விவரிப்புகள் உள்ளன. இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இறுதி யுத்தத்துக்குத் தங்கம் திரட்டிய முரட்டுக் கதைகள் உள்ளன. விடுதலைப் புலிகளின் இந்தச் சித்திரங்கள் புலி ஆதரவாளர்களுக்கு உவப்பாக இல்லாமல் இருக்க லாம். ஆனால், படைப்பாளி ‘எஃப்.எம் ரேடியோ’வும் இல்லை, படைப்பு ‘நேயர் விருப்ப’மும் இல்லை.
முழுக்க முழுக்க ஈழப் பின்னணி கொண்ட இந்தக் கதைகளுக்கும் கதைசொல்லிக்கும் திட்டவட்டமான நோக்கம் இருக்கிறது. சொல்வதற்கான செய்தி இருக்கிறது. தனி ஈழம், ஈழ விடுதலை, போராளி இயக்கம் தொடர்பான கதையாடல்களின் மறைவுப் பிரதேசங்களில் வெளிச்சம் பாய்ச்சி, பொது அரசியல் வெளியில் புழங்கும் வழமையான வாக்கியங்களையும் அதைத் தொடர்ந்து உச்சரிப்போரையும் தொந்தரவு செய்வதே அது.
“ஒண்டு மட்டும் சொல்லலாம்... ஜனநாயகம் வாழ்க! இதுக்குள்ள நாஸிப் பிரச்சினை, அகதிப் பிரச்சினை, தலைமுறைப் பிரச்சினை, இனப் பிரச்சினை, சாதிப் பிரச்சினை எல்லாம் அடங்குதுதானே” என்று ஒரு கதையை முடித்து வைக்கிறார் ஷோபா. அரசியல் உள்ளடக்கம் கலையைக் கெடுத்துவிடும் என்ற பயம் பீடித்தவர்கள் ஷோபாவின் கண்டிவீரனிடம் போய் மந்திரித்துக்கொள்ளலாம்.
கருப்புப் பிரதிகள்
B74, பப்பு மஸ்தான் தர்கா,
லாயிட்ஸ் சாலை சென்னை - 600 005
பக்கங்கள் : 192, விலை : ரூ.160
தொடர்புக்கு: 9444272500
- லிபி ஆரண்யா,
‘உபரி வடைகளின் நகரம்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர்,
தொடர்புக்கு: libiaranya@gmail.com