வாசனை கொண்ட சிற்பங்கள்

வாசனை கொண்ட சிற்பங்கள்

Published on

துறைமுகம் ஆயிரக்கணக்கான வருடங்கள் வணிகப் பாரம்பரியம் கொண்டது. எண்ணற்ற தேசங்களின் மனிதர்களும், கலாசாரங்களும் வந்து கலந்த இடம் அது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கொச்சி முஜிரிஸ் கண்காட்சி, சர்வதேச அளவில் பிரபலம் அடைந்தது. நவீன கலையைச் சாதாரண மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் பிரமாண்டமாக நடைபெறும் இக்கண்காட்சியில் 30 நாடுகளிலிருந்து 94 ஓவியர்கள் பங்குபெற்றனர்.

சென்னையைச் சேர்ந்த பெனிட்டா பெர்சியாள், கிறிஸ்தவ மதம் சார்ந்த நிகழ்வுகளைச் சிற்பங்களாகச் செதுக்கி கண்காட்சிக்கு வைத்திருந்தது பார்வையாளர்களை ஈர்த்தது. கொச்சின் மட்டஞ்சேரியில் நூற்றாண்டு பழமைகொண்ட ‘பெப்பர் ஹவுஸ்’ என்ற பழைய கட்டிடத்தை எடுத்து மொத்த வீட்டையும் தனது கலையகமாக மாற்றினார் பெர்சியாள்.

ஒரு கிறிஸ்தவக் குடும்பப் பின்னணி கொண்டவராக வாஸ்கோடகாமாவும், புனித தாமசும் வந்திறங்கிய கொச்சின் பகுதி ஓவியர் பெனிட்டாவை ஈர்த்துள்ளது. ‘தி பயர்ஸ் ஆஃப் ஃபெய்த்’ என்ற பெயரில் இவர் தனது சிற்பங்களை உருவாக்கியுள்ளார். இந்தச் சிற்பங்களை உருவாக்குவதற்கு ஊதுபத்திப் பொடியையே முழுமையாகப் பயன்படுத்தியுள்ளார். பிறப்பு முதல இறப்புவரை எல்லாச் சமயத்தவர்களின் சடங்குகளிலும் வாசனைக்குப் பெரும்பங்கு உள்ளது.

கடலின் வாசனையுடன் மாறும் இயற்கை மற்றும் பருவநிலையில் இந்த ஊதுபத்திச் சிலைகள் மாற்றம் அடைவதற்கும் இவர் இடம் கொடுத்துள்ளார். ஒரு சிற்பத்தில் விழுந்த கீறலை அப்படியே அனுமதித் துள்ளார். கிறிஸ்துவைச் சிலுவையில் அறைவது, குருத்தோலை தினம், கடைசி இரவு உணவு போன்ற நிகழ்வுகளை இவர் சிற்பங்களாக மாற்றியுள்ளார். மட்டஞ்சேரிக்கு அருகே பழைய பொருட்கள் விற்கும் கடைவீதியில் விற்கப்படும் உடைந்த சிற்பங்கள் அவரைப் பெரிதாகப் பாதித்துள்ளன. வழிபாட்டு உருவங்களாக இருந்தவை, அவற்றின் பழமை காரணமாக விற்பனைச் சரக்காக மாறுவதைப் பார்த்த அவர் தனது ஊதுபத்திச் சிற்பங்களை உறுப்புகள் இன்றி வடிவமைத்துள்ளார்.

புறக்கணிக்கப்பட்ட நினைவுகளில் இருந்து தெய்வங்களை உருவாக்கு வதாகத் தனது முயற்சி இருக்கிறது என்கிறார். கடலுக்கு ஜன்னலைத் திறந்து வைத்திருந்த பெப்பர் ஹவுஸ் ஒவ்வொரு பொழுதும் வெவ்வேறு வாசனைகளால் நிரம்புகிறது. சிலைகளின் இயல்பும் மாறுகிறது.

காலம்காலமாக கிராம்பு, ஏலம், எலுமிச்சைப் புல், லவங்கம் உள்ளிட்ட பல்வேறு வாசனைப் பொருட்களை ஏற்றுமதி செய்த துறைமுக ஊர் என்பதால் தனது சிற்பங்களையும் அவற்றின் தைலங்களைச் சேர்த்துக் கொண்டு உருவாக்கியுள்ளார். அவை காலத்தின், இயற்கையின், புனித மேரி போன்ற மாபெரும் தாயின் வாசனையுள்ள சிற்பங்கள் என்கிறார் பெனிட்டா.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in