

நாவல் என்னும் சொல்லே நேற்றி லிருந்து வேறானது எனப் பொருள்படுகிறது. புதுமை என்பதே அதன் அர்த்தம். புதிதாகப் படைக்கப்படுவதே நாவல். அது பெரும்பாலும் இரண்டு உலகங்களோடு தொடர்புகொண்டது. ஒன்று, கதை வழியாக நாவல் விரிக்கும் உலகம்.
மற்றொன்று வாசக மனம் காலூன்றி நிற்கிற நிகழ் உலகம். படைப்பாளி நாவலில் முன்வைக்கும் உலகம் எது? தான் வாழ்கிற உலகோடு முரண்பட்டு, அதற்கு மாற்றான இன்னொரு உலகை அழகியல் சார்ந்து அவன் உருவாக்குகிறான். அதுவே படைப்புலகம். எழுத்தாளன் பெருமை கொள்ளும் உலகம். மொழிக்கு வளம் சேர்க்கும் செயல்முறை அது. வாழ்க்கைக்கு வண்ணம் பூசும் கலை அதிர்வு.
நாவல், அதன் முதல் வரியிலேயே, பிரத்யேகமாக ஒரு காலத்தை உருவாக்கிவிடுகிறது. அது நாம் இப்போது வாழ்கிற உலகின் காலமல்ல. படைப்புக்குள் அப்போது பிறக்கிற காலம். வாழும் உலகின் கால உணர்விலிருந்து, நாவல் தன்னை முதலில் விடுவித்துக்கொள்கிறது. புதிய காலமும் புதிய இடமும் நாவலுக்குள் விரிகின்றன. முற்றிலும் புதிதான உலகை வாசகனுக்குத் திறந்துவிடுகிறது.
வாசிப்பு மூலம், அந்த உலகின் நுட்பங்கள் இயக்கம் கொள்கின்றன. அதில் காணும் நிகழ்வுகள் படைப்புலகின் நிகழ்வுகள். வாசக மனம் அப்படி நினைக்கும்படியாக எழுத்து இயங்க வேண்டும். அது படைப்பாளியின் எழுத்து வலிமை சார்ந்தது. படைப்பாளி சந்திக்க வேண்டிய கலைத்திறன் சார்ந்த இடம் இது. ஒரு கதையை நாவலாக்கும் அம்சமும் இதுவே.
இப்படி எழுதப்படும் நாவலை அதன் படைப்புலகம் சார்ந்து அணுகுவதே முறையான வாசிப்பு. நாவலை அது முன்வைக்கும் உலகத்திலிருந்து முழுதாகப் படித்து முடித்த பின்புதான், அதை நிகழ் உலகத்திலிருந்து பார்க்கவோ விமர்சிக்கவோ நமக்கு உரிமை கிடைக்கிறது. நாவலை கருத்துரீதியாக அப்போது பேச முடியாது. நாவலுக்குள்ளிருக்கும் சாரம் சுயேச்சையானது.
அதுவே நாவலின் உயிர். பிறந்த உடலுக்கான உயிர். டால்ஸ்டாய் படைத்த கதாபத்திரமான அன்னா கரீனினாவோடு சண்டைபோட யாருக்கும் உரிமை இல்லை. தேர்ந்த வாசகன் இதை நன்கு அறிந்துள்ளான். இந்த எல்லை வரைக்கும் சிக்கல் இல்லை.
தேர்ந்த வாசகன் நாவலைப் புனைவாக மட்டுமே பார்க்கிறான். புனைவிலிருந்து தனக்கான பிரதியை வாசிக்கிறான். அது சாத்தியமல்ல என்றால் நாவலை விட்டுச் சத்தமில்லாமல் வெளியேறிவிடுகிறான். தாங்கள் விரும்பும் படைப்புகளை வாசகர்கள் கொண்டாடுகிறார்கள். நாவலுக்குள் இலக்கியம் சாராதவர்கள் நுழைகிறபோது அல்லது இந்த நாவல் தங்களுக்கு எதிரானது என முன்முடிவோடு வாசிக்கப்படும்போது நாவல் கருத்துரீதியாகப் பார்க்கப்பட்டு வெளியே தள்ளப்படுகிறது.
இலக்கியத்தை நேசிக்கும் வாசகன் இதைச் செய்வதில்லை. அப்படியான வாசகன் நாவலை விட்டு வெளியேறுவான் அல்லது கொண்டாடுவான். எழுத்தாளன் தனது அனுபவங்களைத் தான் வாழ்கிற உலகத்திலிருந்துதான் பெறுகிறான். நிகழ் உலகின் சாயல் இல்லாமல் எந்த நாவலையும் உருவாக்க முடியாது. வட்டார நாவல்களில், வரலாற்று நாவல்களில், சாதீய மற்றும் இனப் பதிவுகளிலிருந்து எழுதப்படும் நாவல்களில், சமூக நாவல்களில் இந்தச் சாயல் அதிகமிருக்கும்.
நாவலில் நம்பகத்தன்மைக்காக நிகழ் உலகின் புற, அகப் பரப்புகளைக் கொண்டுவர முயலும்போது சமூகரீதியான எதிர்வினைகளை உலகம் முழுவதும் பல நாவல்கள் சந்தித்துள்ளன. இலக்கியம் அல்லாத இடத்தில் நின்று தனது நாவலைக் காப்பாற்றும் அவலம் எந்தப் படைப்பாளிக்கும் நேரக் கூடாது. நாவலுக்குள் விரிகிற படைப்புலகம் சுயம்புவாக இருக்க வேண்டும். புதிய மண்ணை புதிய உயிர்களை, புதிய காற்றை நிரப்ப வேண்டும். நிகழ் உலகோடு போராடவல்ல ஒரு புதிய உலகைப் படைப்பதே நாவல்.
கதை சொல்வதையும் தாண்டியது நாவல். புனைவும், அனுபவமும், அனுபவம் கூட்டிச் செல்கிற உள்மனப் பயணமும் கலந்த வெளியாக நாவல் திகழ்கிறது. நாவலாசிரியன் உருவாக்கும் முழுமையான புனைவுலகுடன் சண்டைபோட யாருக்கும் உரிமை இல்லை. படைப்பாளி தனக்கு வெளியே உள்ள எல்லாவற்றையும் நேசிக்கிறவன். சிறந்த படைப்பாளி எப்போதுமே நேர்மையான மனிதன். அவனது பேனா எல்லாருக்குமானது.
க.வை. பழனிசாமி,
நாவலாசிரியர், கவிஞர்
தொடர்புக்கு: kavai.palanisamy@gmail.com