Last Updated : 08 Feb, 2015 12:30 PM

 

Published : 08 Feb 2015 12:30 PM
Last Updated : 08 Feb 2015 12:30 PM

பெண் எழுத்து: புலம்பியது போதும்

‘ஒரு பெண்ணாக, ஒரு எழுத்தாளராக’ (BEING A WOMAN BEING A WRITER) என்ற அந்தத் தலைப்பு புதியதில்லை. இதற்கு முன் பல இந்தியப் பெண் எழுத்தாளர்கள் பங்குபெற்ற இலக்கிய அமர்வுகளில் விலாவாரியாகப் பேசப்பட்ட விஷயம்தான். ஆனால், சமீபத்தில் போபாலில் டெல்லி சாகித்ய அகாடமி ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் நடந்த இலக்கியச் சம்மேளனத்தில், பெண் எழுத்தும் சிந்தனையும் வெகுஜன உளவியலில் அவர்களைப் பற்றி வரையப்பட்ட சித்திரத்தை விட்டு வெளியே வந்து வெகு காலமாகிவிட்டதென்பது தெரிந்தது. ‘ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்’ என்று அவர்கள் கோஷம்போடவில்லை. பால் இன பேதம் தங்களை எந்த வகையிலும் இளைத்தவர்கள் ஆக்கிவிடவில்லை என்கிற இயல்பான புரிதலுடன் பேசினார்கள். பெண் மட்டுமே இச்சமூகத்தின் victim என்று சொல்வது அபத்தம் என்கிற கருத்து எல்லாரது பேச்சிலும் தொனித்தது.

உங்கள் ஆவேசத்தைப் புரிந்துகொண்டோம்

சகோதரிகளே, புலம்பினது போதும். சென்ற நூற்றாண்டின் மையத்தில் Second Sex என்ற புத்தகம் எழுதி உலகை, பெண்ணினத்தை உலுக்கிய சிமோன் தெ பூவா அவர்களே, நீங்கள் சொன்னவற்றையெல்லாம் நாங்கள் உள்வாங்கிக்கொண்டோம்! புரிகிறது… நாம் ஏன் இரண்டாம் பாலினமாகிப்போனோம் என்பது. இப்போது சற்றே விலகி இரும்.

பெண்கள் மீதான ஆண்களின் மிதமிஞ்சிய வெறுப்பே, பெண்களை சுயமதிப்பை இழக்கச் செய்து தங்கள் உடலையே வெறுத்து வெட்கவைத்து அவர்களை நபும்சகர்களாக்கியது என்று ஆக்ரோஷத்துடன் Female Eunuch புத்தகத்தை எழுதி பெண்ணிய கோஷம் போட்ட ஜர்மேன் க்ரியரே! புரிந்துகொண்டோம் உங்கள் ஆவேசத்தை. உங்களைத் தொடர்ந்து வந்த பல பெண்ணிய கோஷங்களும் எங்கள் புரிதலைத் தெளிவாக்கின. காத தூரம் பயணித்த பிறகு எங்கள் எல்லைகள் விரிந்துவிட்டன. மிக விசாலமானது இவ்வுலகம். மிகச் சிக்கலானவை அதன் பிரச்சினைகள். மனித உரிமை மீறல் பல விதமாக இந்தப் புவியை அலைக்கழிக்கின்றன. அதன் பயங்கர அரசியலில் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் மட்டுமில்லை. பெண்ணாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சந்திக்கும் பொறுப்பும் வலிமையும் நம்மிடம்தான் உள்ளன என்று நம்புவோம். வேண்டாம் கோஷம். வேண்டாம் இந்தப் புலம்பல்.

காலம் மாறிவிட்டது

ஒரு கன்னடக் கவிஞர் பழைய பாணியில் ஆண்களைத் துச்சமாகக் கருதி வெறுப்புக் கக்கும் வரிகளையும் பாலுறுப்புகளைச் சுட்டும் வார்த்தைகளையும் பிரயோகித்து, பெண்கள் குடித்தால் என்ன தவறு என்கிற பாணியில் கவிதை மழை பொழிந்தார். அரங்கம் முழுவதும் எரிச்சலுடன் கையொலி எழுப்பி அவரை நிறுத்தச் சொன்னது வியப்பை அளித்தது. அப்படிச் செய்தவர்கள் ஆண்கள் இல்லை. வயதான பெண்களோ பழமைவாதிகளோ இல்லை. கல்லூரி மாணவிகள்.

பெண்மொழி என்று உண்டா

பெண் எழுத்து என்று படைப்பாக்கத்தில் பிரித்துப் பேசுவது ஒரு அரசியல் என்று ஆகிவிட்ட நிலையில் ஒரு கேள்வி எழுகிறது. புவியில் சரிசமமாக உள்ள ஆண்களும் பெண்களும் அவரவர் சமூகப் பின்புலத்தில் வெவ்வேறு விதமான பாதிப்புகளை அனுபவிப்பதால் வெவ்வேறு உணர்வு நிலைகளையும் அதற்குத் தக்கவாறான வித்தியாசமான மொழிப் பிரயோகத்தையும் கையாளுகிறார்களா? அவர்களது குறிக்கோள்களில், பரிணாம வளர்ச்சியில் வித்தியாசம் உண்டா? அது உண்மையா? உண்மை என்றால் ஏன் அப்படி? அப்படி இல்லையென்றால் ஏன் தொடர்ந்து அப்படி இருப்பதாகச் சொல்கிறோம்? பெண் சார்ந்த சமூக கலாச்சார இருப்பியல் ஒரு ‘பெண் மொழி’யை உருவாக்குமா?

பெண் எழுத்தாளர் சுமக்கும் மரபுச் சுமை ஆண் எழுத்தாளர் சுமக்கும் சுமையிலிருந்து வேறுபட்டது. அது பெண் எழுத்தில் ஒலிப்பது இயல்பானது. ஆனால் அச்சுமையுடன் அவளது மூதாதையரின் சரித்திரங்களும், கதைகளும் புராணங்களும் காலத்தால் அவளது நினைவுகளிலிருந்து அழிக்க முடியாத கீதங்களும் தாலாட்டுகளும் ஒப்பாரிகளும் பிணைந்திருக்கின்றன. அவளுள் இயல்பான ஒரு கதை சொல்லி இருப்பதை அவளுடைய பாட்டிகளும் கொள்ளுப் பாட்டிகளும் உணர்த்தியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் சொல் இருந்தது என்கிறது பைபிள். அது பெண்ணின் நாவிலிருந்து வந்திருக்கும்.

மேகாலயாவின் ஷில்லாங்கிலிருந்து ஆங்கிலத்தில் எழுதும் எஸ்தெர் சீயம் என்ற காஸி இன எழுத்தாளர் சொன்னது சுவாரஸ்யமாக இருந்தது. காஸி இனம், தாய்வழிச் சமுதாயம். சீயம் என்பது அவரது தாய் வழி வந்த பெயர். எஸ்தருக்கு மண்சார்ந்த இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்த பாட்டியின் கிராமத்து நினைவுகளும் அங்கு விளக்கில்லாத சமையற்கட்டுகளில் கேட்ட கதைகளுமே இன்னமும் உயிர்ப்புடன் தாக்கம் ஏற்படுத்துவதாகச் சொன்னார். பல ஜென்மத்துக் கதைகள். பாட்டியின் பார்வையில் வெளிப்பட்ட தரிசனங்கள். அங்கிருந்தே தனது எழுத்துப் பயணம் ஆரம்பித்ததாகக் கூறினார் எஸ்தர்.

என் பாட்டி சொன்ன கதைகளும் அவை ஏற்படுத்திய தாக்கமும் இன்றும் என்னுள் இருக்கின்றன. சிறு வயதில் மற்ற குழந்தைகளுடன் வட்டமாக நிலா முற்றத்தில் நாங்கள் அமர்ந்திருப்போம். நடு மையத்தில் பாட்டி. கற்சட்டியில் சாதம் பிசைத்து எங்கள் பிஞ்சுக் கைகளில் உருண்டைகள் வைத்தபடி ராமாயணமோ மகாபாரதமோ சொல்வாள். ராமனாக, ராவணனாக கணத்துக்குக் கணம் மாறுவாள். கையில் என்ன விழுகிறது என்று அறியாமல் சாப்பிடுவோம். சீதை அனுபவித்த வேதனையை நாங்களும் அனுபவிப்போம். ராமன் அவளைச் சந்தேகிப்பது கண்டு, என்னைப் பெற்ற தாயே என்னை சுவீகரித்துக்கொள் என்று சீதை மனமொடிந்து பூமிக்குள் மறைந்த போது தாங்க முடியாமல் அழுவோம்.

பெண்ணிய வித்து எங்களுக்குள் அந்தத் தருணம் விழுந்திருக்க வேண்டும். பாட்டியின் வர்ணனையில் அது சீதையின் கதையாக இருந்தது. ராமனின் கதை அல்ல. அப்படித்தான் நாங்கள் உணர வேண்டும் என்பது பாட்டியின் எண்ணமாக இருந்திருக்கும். அன்றைய சூழலில் பாட்டிக்கு எப்படி அப்படி ஒரு பார்வை வந்தது என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஒரியா எழுத்தாளரும் ஞானபீட விருது ஆகிய பெரிய விருது களைப் பெற்றிருப்பவருமான ப்ரதிபா ரே, பெண்களுக்கு இந்தப் பார்வை இயல்பானது என்றார் அழுத்தமாக. பெண்களே மரபுகளின், தொன்மங்களின், கலாச்சாரத்தின் காவலர்கள். அதில் புதுப்புது அர்த்தங்களைக் கண்டு சமகாலத்துக்குப் பொருத்துபவர்கள். எஸ்தர் சொல்வதுபோல நிகழ்காலம் தொலைவாக, இறந்த காலம் அண்மையாகப்படும் விந்தை அது.

ஐதராபாத்திலிருந்து வந்த எழுத்தாளர் மிருணாளினி, எள்ளல் கட்டுரைகள் அல்லது ஹாஸ்யக் கதைகளைப் பெண்கள் எழுதினால் அதை இலக்கியமாக நினைப்பதில்லை என்றார். பெண்ணிய கோஷம் போடாததால் பெண்ணியவாதிகளும் மதிப்பதில்லை என்றார். பெண்கள் அரசியல் எழுதினாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. நான் ஆங்கிலத்தில் எழுதிய அரசியல் தலைவரின் வாழ்க்கைச் சரிதம் வெளியிடத் தயாரான நிலையில் தடைசெய்யப்பட்டு மடிந்து போனபோது எனது கருத்துரிமைக்காக ஒன்றிரெண்டு பேரைத் தவிர] யாரும் குரல் எழுப்பவில்லை. நான் பெண் என்கிற காரணத்தாலா? படைப்பிலக்கியவாதிகளுக்கு அத்தகைய குறுகிய பார்வை இருக்காது என்று நினைக்க ஆசைப்படுகிறேன்.

பெண்கள் தொடர்ந்து எழுதுகிறார்கள்; கதைகள் புனைகிறார்கள் யாருடைய அங்கீகாரத்தையும் பாராட்டையும் எதிர்பார்க்காமல்; எந்தப் பீற்றலும் தம்பட்டமும் இல்லாமல்; வரலாற்றில் காலூன்றி நின்ற நிலையில் அவர்களது எல்லைகள் விரிந்துவிட்டன. மனித நேயமே அவர்கள் சொல்லும் சேதி. பெண்ணியம் என்பது மனித உரிமைக் குரல்களில் ஒன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x