

எத்தனை விதங்களில் எழுதினாலும், நான் என் பிறவியுடன் கொண்டு வந்திருக்கும் என் கதைதான்; உலகில் - அது உள் உலகமோ வெளியுலகமோ - அதில் நடக்கும் அத்தனையிலும், அத்தனை யாவும் எனக்குக் கிட்டுவது என் நோக்குத்தான். ஆகை
யால் நான் எனக்காக வாழ்ந்தாலும் சரி, யாருக்காக அழுதாலும் சரி, அப்படி என் நோக்கில் நான்தான் இயங்குகிறேன், என் நோக்கில் நான் காண்பவர், காணாதவர் எல்லோரும் என் கதையுடன் பிணைக்கப்பட்டவரே. என் கதையின் பாத்திரங்களால், அவர்கள் ப்ரவேசங்களில் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் வேளைகளில்தான், நெடுநாளைய பிரிவின் பின் சந்திக்கும் பரபரப்பு, பரிமளம், ஜபமாலையின் நெருடலின் ஒவ்வொரு மணியும் தன் முறை வந்ததும்,தான் தனி மணி என அதன்மேல் உருவேறிய நாமத்தின் தன் பிரக்ஞையை அடையும் புது விழிப்பு.
என் சொல்தான் என் உளி. நான் தேடும் பொருளோ, நயமோ தரும் சொல் கிட்ட, ஓரொரு பக்கத்தை, பதினெட்டு இருபத்தியேழு தடவைகள் எழுத நான் அலுத்ததில்லை. தேடியலைந்த போதெல்லாம் கண்ணாமூச்சி ஆடிவிட்டு, சொல் என்னை நள்ளிரவில் தானே தட்டி எழுப்பி இருக்கிறது. ஒரு சமயம் கனவில், பாழும் சுவரில் ஒரு கரிக் கட்டி தானாகவே ஒரு வாக்கியத் தொடரை எழுதி அடி எடுத்துக் கொடுத்தது. சம்பந்தா சம்பந்தமற்றவை போன்று வார்த்தைகளை மூளையுள் வேளையில்லா வேளைகளில் மீன் குட்டிகள் போல், பல வர்ணங் களில் நீந்திக் காண்பிக்கும். சில சமயங்களில் நான் தேடிய சொல், அதே சொல், நான் தேடிய அதே உருவில், காத்திருந்தாற் போல், நடுத் தெருவில் நான் போய்க் கொண்டிருக்கையில் யார் வாயிலிருந்தேனும் உதிரும்.
“நீ ஒன்றும் கழற்றிவிடவில்லை. என் கட்டியங்காரன். நான் சொன் னதை நீ சொல்” என்று அது எனக்கு உணர்த்துகிறது.
இத்தனை கதைகள் எழுதியதும், இனி எழுதப் போவது எத்தனையானாலும் அத்தனையும் நித்தியத்துவத்தின் ஒரே கதையின் பல அத்தியாயங்கள்தான். அத் தனையும் ஒன்றாக்க எனக்கு சக்தியோ, ஆயுளோ போதாது. என்னால் முடிந்தது ஒரு சொல்தான், அச்சொல்லின் உரு வேற்றல்தான்.
(கங்கா சிறுகதைத் தொகுப்புக்கு லா.ச. ராமாமிருதம் எழுதிய முன்னுரை, 1962)