

கடைக்கோடி மனிதருக்கும் நீதி என்று கனவுகண்ட நமது அரசியல் சாசனத்தின் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்பதற்கும், அடிப்படை மனித உரிமைகளை உறுதிப்படுத்தவும் இன்றும் இந்திய நீதித் துறை மட்டுமே ஒரே நம்பிக்கையாக உள்ளது. நீதித் துறை சார்ந்து சாதாரணக் குடிமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் குறியீடாகச் செயல்பட்டவர்களில் ஒருவர் நீதிபதி சந்துரு, தனது ஓய்வுக்குப் பின்னர் ‘தி இந்து’ முதலான நாளிதழ்களில் எழுதிய கட்டுரைகளின் விரிவாக்கப்பட்ட தொகுதி இது.
குடிமை நீதி, சமூக நீதி என்ற அடிப்படையில் அணுகுபவை இவரது கட்டுரைகள். நீதிமன்றங்களில் எடுக்கப்படும் சத்தியப் பிரமாணம், அரசியல் தலைவர்கள் அரசுப் பதவியேற்கும் போது எடுக்கும் உறுதிமொழி ஆகியவற்றைத் தொட்டு இந்த சத்தியப் பிரமாணங்களின் பயனின்மையையும் சந்துரு யதார்த்தமாக விளக்குகிறார். அதற்கு ஒரு கதையையும் சொல்லி இலக்கியப் பரிமாணத்தையும் அளிக்கிறார். சிலைகளுக்கும் நினைவகங்களுக்கும் தடைகளும் பிரச்சினைகளும் அடுக்கடுக்காக வந்த சமயத்தில் எழுதிய கட்டுரையை சென்னையின் வரலாறாகப் படிக்கும் அளவுக்குத் தரவுகளுடன் எழுதியுள்ளார். நீதிபதி சந்துரு எழுதியிருக்கும் கட்டுரைகளின் தலைப்புகளே அவரது அகன்ற மனிதாபிமானத்தை வெளிப்படுத்துபவை.
வள்ளலார் முதல் சமகால சினிமா சார்ந்த செய்திகள், சொலவடைகள் வரை அநாயசமாக சந்துருவின் உரைநடைக்கு அழகு சேர்க்கின்றன. சமூகத்தை மேலும் நீதியுணர்வு கொண்டதாகவும், மனிதாபிமானமும் மேன்மையூட்டுவதாகவும் மாற்ற விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் ஒரு வழிகாட்டி.
- வினு பவித்ரா
கனம் கோர்ட்டாரே
கே.சந்துரு
வெளியீடு: காலச்சுவடு
669, கே.பி.சாலை
நாகர்கோவில்-629001
விலை: ரூ. 225