

ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ என்ற நாவல் தொடராக வந்தபோது படித்த பலரும் பாக்கியவான்கள். அந்த நாவல் நூல் வடிவம் பெற்றபோது படித்தவர்களும் பாக்கியவான்கள். நாவல் வெளிவந்து 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது என்பதால், அந்த நாவலின் தலைப்பைச் சொன்னாலே பலருக்கும் நாவலின் நாயகன் ஹென்றியின் வாழ்க்கையோடு தங்களின் 40 ஆண்டு கால வாழ்க்கையை ஒப்பிடுவது வழக்கம். அந்த நாவலை நினைவுகூர்வதும் மறுபடியும் எடுத்துப் படித்துப் பார்ப்பதும் அழகும் துயரமும் நிறைந்த நினைவுப் பயணம்.
பள்ளிக்கூட ஆசிரியர் தேவராஜன், ஹென்றி, கனகவல்லி, அக்கம்மாள், கிளியாம்பாள், பேபி, துரைக்கண்ணு, பாண்டு, மண்ணாங்கட்டி, மணியக்காரர், தர்மகர்த்தா, சபாபதி பிள்ளை, நீலாம்பாள் என்ற ஒவ்வொரு பாத்திரத்தையும் நேரில் பார்த்த பிரமிப்பு! இவர்களெல்லாம் நாவலின் பாத்திரங்கள் மட்டுமல்ல, நம்மைச் சுற்றி இருப்பவர்களும்கூட. கதைக்களமான கிருஷ்ணராஜபுரம் தமிழ் இலக்கியத்தின் மறக்க முடியாத ஊர்களுள் ஒன்றாகிவிட்டது. இன்று வரை சிறிதும் உயிர்ப்பு குறையாமல் இருப்பதே இந்த நாவலை அவ்வளவு முக்கியமானதாக ஆக்குகிறது.