

எளிய குடும்பத்தில் பிறந்து, கடும் உழைப்பின் மூலம் வெற்றி அடைபவர்களைப் பற்றிய பதிவுகள் பல இலக்கியப் படைப்புகளில் இடம்பெற்றிருக்கின்றன. ஒரு தனிமனிதரின் வாழ்க்கைப் பின்னணியில், வாழ்வின் மர்மங்கள், வணிக உலகின் சூட்சுமங்கள், உறவுச் சிக்கல்கள் என்று பல விஷயங்களை சுவாரசியமான சித்தரிப்புடன் விவரிக்கும் நாவல் ‘பொய்த்தேவு’.
கறாரான விமர்சகராக அறியப்படும் க.நா.சு. எழுதிய படைப்புகளில் மிகச் சிறந்தது என்று கருதப்படும் நாவல் இது. கும்பகோணம் அருகில் உள்ள சாத்தனூர் கிராமத்தில், கருப்பன் எனும் ரவுடிக்கும் வள்ளியம்மைக்கும் மகனாகப் பிறக்கும் சோமுதான் கதையின் நாயகன். தந்தையை இழந்து, நிச்சயமற்ற எதிர்காலத்துடன் வளரும் அந்தச் சிறுவன், பின்னாட்களில் வணிகத்தில் கொடிகட்டிப் பறப்பவனாக, ஊரின் முக்கியப் புள்ளியாக உருவெடுப்பதுதான் கதை.
கால மாறுதல்களும், ஊர்க்காரர்கள் அவற்றை எதிர்கொள்ளும் விதமும், வாழ்வின் அனைத்து சாத்தியங்களையும் பயன்படுத்திய பின்னர் அதிலிருந்து விலக முயலும் மனித மனத்தின் விசித்திரமும் அசலாகப் பதிவான படைப்பு இது.