Published : 22 Jan 2015 09:52 AM
Last Updated : 22 Jan 2015 09:52 AM

வீடில்லாப் புத்தகங்கள் 18 - நாடகமே உலகம்!

கறுப்பு வெள்ளைப் புகைப்படங் களைப் போன்றவை பழைய புத்தகக் கடையில் கிடைக்கும் புத்தகங்கள். அதை கையில் எடுத்தவுடனே கடந்த கால நினைவுகள் கொப்பளிக்கத் தொடங்கிவிடுகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ரீகல் தியேட்டர் அருகில் உள்ள சாலையோர புத்தகக் கடையில், அவ்வை சண்முகம் எழுதிய ‘எனது நாடக வாழ்க்கை’ நூலை வாங்கினேன். வானதி பதிப்பகம் வெளியிட்ட புத்தகம் அது. தமிழக நாடகக் கலையின் வரலாற்றை அறிந்துகொள்ள விரும்பு கிறவர்கள், இந்த ஒரு புத்தகத்தை வாசித்தால் போதும்.

‘பாய்ஸ்’ கம்பெனியில் தொடங்கி சினிமா நடிகரானது வரையான அவருடைய 55 ஆண்டு கால நாடக வாழ்க்கை அனுபவத்தை சுவைபட விவரிக்கிறார் டி.கே.சண்முகம்.

இந்தப் புத்தகத்துக்கும் நான் எழுத்தாளன் ஆனதற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணர் எனது சொந்த ஊர். 9-ம் வகுப்பு படிக்கும்போது கிராம நூலகத்துக்குப் போய் எனது ஊரைப் பற்றி ஏதாவது புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதா… எனத் தேடிக் கொண்டிருப்பேன். நியூஸ் பேப்பரில் வெளியாகும் செய்தியில் ஊரின் பெயரை சிலவேளை குறிப்பிட்டிருப்பார்கள். அதைத் தவிர எந்தப் புத்தகத்திலும் யாரும் ஒரு வரியும் எழுதியிருக்கவில்லை.

‘ஏதாவது வரலாற்று சிறப்புகள், ஆளுமைகள் இருந்தால்தான் புத்தகத் தில் எழுதுவார்கள். அப்படி நம் ஊரில் என்ன இருக்கிறது’ என நூலகர் கேலி செய்வார்.ஆனால், நிச்சயம் யாராவது, ஏதாவது எழுதியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் கையில் கிடைக்கிற புத்தகங்களில் தேடிக் கொண்டிருப்பேன். அப்படி ஒருநாள் ‘எனது நாடக வாழ்க்கை’ புத்தகத்தைப் புரட்டி படித்துக் கொண்டிருந்தபோது, மல்லாங்கிணரைப் பற்றி இரண்டு பக்கம் எழுதப்பட்டிருந்தது.

என் ஊரின் பெயரை ஒரு புத்தகத்தில் அன்றுதான் முதன்முறையாக பார்த்தேன். அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதை நூலகரிடம் கொண்டு போய் காட்டினேன். அவரும் சந்தோஷம் அடைந்தார்.

எங்கள் ஊரில் நாடகம் அல்லது பொது நிகழ்ச்சி ஏதாவது நடைபெறுகிறது என்றால் அதை தெரியப்படுத்த மூன்று முறை பலத்த சத்தம் எழுப்பும் வேட்டு போடுவார்கள். அந்தச் சத்தம் கேட்ட மறுநிமிஷம் ஒட்டுமொத்த ஊர் மக்க ளும் கோயில் தேரடி முன்பாக கூடிவிடுவார்கள். அதுதான் விளம்பரம் செய்யும் வழி. ‘இப்படியொரு விளம்பர உத்தியை வேறு எந்த ஊரிலும் நான் கண்டதில்லை’ என வியந்து டி.கே.எஸ் எழுதியிருக்கிறார்.

அதை வாசித்தபோதுதான் என் ஊரை, ஊர் மனிதர்களை, அவர்களின் வாழ்க்கைப் பாடுகளையும் எழுத வேண்டும் என்ற ஆசை எனக்குள் முளைவிடத் தொடங்கியது.

ஒவ்வோர் ஊருக்கும் ஒரு சிறப்பு இருக்கவே செய்கிறது. அது உள்ளுர்வாசிகளுக்குத் தெரிவதே இல்லை. வெளியில் இருந்து வருபவர் களே அந்தப் பெருமையை உலகுக்கு அடையாளம் காட்டுகிறார்கள், கொண் டாடுகிறார்கள்.

அவ்வை சண்முகத்தின் இந்நூல் நாடக உலகின் வரலாற்றை மட்டும் விவரிக்கவில்லை. கடந்த 75 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்களையும் நுட்பமாக விவரிக்கிறது.

பேருந்து வசதியில்லாத மாட்டு வண்டியில் பயணம் செய்த நாட்கள், மின்சார வசதியில்லாத நாடகக் கொட்டகை, கருப்பட்டி காபி குடிக்கும் பழக்கம், அந்த நாள் மதுரை வீதிகள், பாடசாலைகள், வைகை ஆறு ஆகியவை குறித்து அவ்வை சண்முகம் நமக்கு காட்டும் காட்சிகள்… ஓர் ஆவணப்படம் பார்ப்பதைப் போலவே இருக்கிறது.

சங்கரதாஸ் சுவாமிகள் தொடங்கிய ‘மதுரை தத்துவ மீனலோசினி’ பால சபாவில் சிறுவனாகச் சேர்ந்த தனது முதல் அனுபவத்தைப் பிரமாதமாக விவரிக்கிறார் அவ்வை சண்முகம்.

‘மேலமாசி வீதியில் இருந்த தகர கொட்டகைதான் நாடக அரங்கம். புட்டுதோப்பில்தான் நாடக கம்பெனி இயங்கியது. மின்சார வசதி கிடையாது. நான்கு காஸ் லைட் வெளிச்சத்தில்தான் நாடகம் போட வேண்டும். நாடகம் பார்க்க மக்கள் திரளாக வருவார்கள். கடைசி நாளில் நடிகர்களுக்கு பதக்கங்களும் பரிசுகளும் வழங்குவார்கள்…’ என நாடக வாழ்க்கையின் பொற்காலம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

சங்கரதாஸ் சுவாமிகள் ‘அபிமன்யு’ நாடகத்தை ஒரே நாள் இரவில் எழுதி முடித்திருக்கிறார். நான்கு மணி நேரம் நடைபெறக்கூடிய ஒரு நாடகத்தை பாடல்கள், வசனம் உள்ளிட்ட அனைத் தையும் ஒரு வரி அடித்தல் திருத்தல் இல்லாமல், ஒரே இரவில் எழுத முடிந்த மேதமை சங்கரதாஸ் சுவாமிகள் ஒருவருக்கே உண்டு என டி.கே.எஸ் வியந்து பாராட்டுகிறார்.

நாடக உலகை பாராட்டும் அதே வேளையில் அந்தக் காலத்தில் நிலவிய வறுமையே ‘பாய்ஸ்’ கம்பெனியில் சிறுவர்கள் அதிகம் பங்குபெற முக்கிய காரணமாக இருந்தது. மூன்றுவேளை வயிறார சாப்பாடு கிடைக்கும் என்பதற்காகவே சிறுவர்கள் பலர் நடிக்க வந்தார்கள் என்ற உண்மையையும் சுட்டிக் காட்டுகிறார்.

1921-ம் வருஷம் நாடகம் போடுவதற்காக முதன்முறையாக சென்னைக்கு வந்தபோது, சாலைகளில் டிராம் வண்டிகளையும், மனிதனை மனிதன் இழுக்கும் ரிக் ஷாவையும் பார்த்த ஆச்சர்யத்தைச் சொல்கிறார் டி.கே.எஸ். அதைவிடவும் ‘காலை டிபனாக பூரி மசால் பரிமாறப்பட்டது. முதன்முறையாக அன்றுதான் அப்படி ஒரு பலகாரத்தின் பெயரை கேள்விப்படுகிறோம். வட இந்தியர்கள் சாப்பிடும் உணவு என்று சாப்பிட வைத்தார்கள். அதை வாயில் வைக்க முடியவில்லை. பிறகு இட்லி வரவழைத்து சாப்பிட்டோம்’ என்று எழுதுகிறார்.

சென்னையில் முதன்முதலாக மின்சார வெளிச்சத்தில் நாடகம் போட்டதையும், கொசுத் தொல்லையால் மலேரியா காய்ச்சல் வந்த நிகழ்வையும் விவரிக்கும் அவர், அன்று சென்னையில் திரும்பிய பக்கமெல்லாம் நாடகக் கொட்டகைகள் இருந்தன. நாடக நடிகர்கள் மிக பிரபலமாக விளங்கினார்கள்… என்பதை பெருமையாக விவரிக்கிறார்.

13 மனைவிகளைக் கொண்ட கருப்பண்ணன், தனது மனைவிகள் சகித மாக நாடகம் காண வந்தது; பி.யூ.சின்னப்பா நடிகராக வந்து கம்பெனியில் சேர்ந்தது; எடிபோலோ, எல்மோ நடித்த மவுனப் படம் பார்த்த அனுபவம்; கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் மேடை அனுபவங்கள்; தனுஷகோடிக்குப் போய் இலங்கைக்கு கப்பல் ஏறியது; கொழும்பு ‘ஜிந்தும்பட்டி’ ஹாலில் நாடகம் போட்டது… என சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதியிருக்கிறார்.

‘இப்படியான ஒரு புத்தகம் தமிழில் இதுவரை எழுதப்பட்டதில்லை. இதை உடனடியாக ஆங்கிலத்தில் மொழி யாக்கம் செய்து உலகம் முழுவதும் அறிய செய்ய வேண்டும்’ என இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் ம.பொ.சி குறிப்பிட்டுள்ளார்.

ம.பொ.சி குறிப்பிட்டு 50 ஆண்டு களுக்கு மேலாகிவிட்டது. இன்றும் ஆங்கில மொழியாக்கம் நடைபெறவே இல்லை. மராத்தி நாடக உலகைப் பற்றி உலகமே கொண்டாடுகிறது. வங்கத்தில் நடைபெற்ற நாடகங்கள் பற்றி ஆங்கிலத்தில் எத்தனையோ புத்தகங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், தமிழின் பெருமைகளை உலகம் அறிய இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை?

- இன்னும் வாசிக்கலாம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:

writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x