Last Updated : 24 Jan, 2015 01:10 PM

 

Published : 24 Jan 2015 01:10 PM
Last Updated : 24 Jan 2015 01:10 PM

கவிஞர்களுக்கு மேன்மையெல்லாம் இருக்கிறதா?

“என் மேன்மையென்பது எனக்குள் இருக்கும் இருட்டுதான்”

- கொரியக் கவிஞர் கிம் ஹைசூன்

கவிஞனுக்கு மேன்மையெல்லாம் இருக்கிறதா என்று கேட்பவர்களுக்குச் சரியான பதிலை கொரியக் கவிஞர் கிம் ஹைசூன் வழங்கியிருக்கிறார். எனக்குள் இருக்கும் இருட்டுக்கு அளவே இல்லை. இந்த மனிதச் சமூகம் முழுமைக்கும் தேவைப்படும் அளவுக்கு இருட்டு கவிஞனுக்குள் இருக்கிறது. மனிதச் சமூகம் குடிக்கக் குடிக்கத் தீராத இருட்டு. இருளின் இறகுகளில் சொற்கள் நழுவுகின்றன. அவை முட்டுச்சந்துகளில் திரண்டு எழுந்து கவிதைகளை உருவாக்குகின்றன.

நான் கவிஞனாக வேண்டும் என்று எனது இளம்வயதில் ஒருபோதும் விரும்பியதில்லை. ஆனால், நான் கவிஞனாகப் பிறந்திருக்கிறேன் என்பதைப் பின்னால் புரிந்துகொண்டேன். பாரதிக்குக் கிடைத்த அபரிமிதமான கவிதா சக்தியில் ஒரு துளி கிடைத்தால் போதும் என்று நினைத்தேன். மரணத்தையோ வாழ்வையோ ஒரு மகா உறுதியுடன் புயலைப் போல சந்திக்க வேண்டும் என்பதை ஓசிப் மெண்டல்ஷ்டாம், சில்வியா பிளாத், காலா ப்ரீடா, மாய்க்கோவ்ஸ்கி, பாப்லோ நெருடா என்று எனக்குள் இறங்கியிருக்கும் பலரும் சொல்லிக் கொடுத்தார்கள்.

நல்ல வேளையாக இடியட், புத்துயிர்ப்பு, கரமசோவ் சகோதரர்கள் போன்ற பெருங்கதைகளைப் படித்துத் தப்பித்துக்கொண்டேன். எனக்காக என ஆல்பெர் காம்யு, காஃப்கா எல்லாம் படித்தேன். கொஞ்சம் சிங்கிஸ் ஐத்மாதோவ், விளாதிமீர் நபக்கோவ் மற்றும் டி.எச். லாரன்ஸ் படித்தேன். இன்னும் எஸ்.வி. ராஜதுரை தனது ‘அந்நியமாதல்’ நூலில் அறிமுகப்படுத்திய ஆட்களைத் தேடித்தேடிப் படித்தேன். நீட்சேவின் செல்லக் குழந்தையாக இருந்து பார்த்தேன். ‘சிஸிபஸ் புராணம்’ என்று ஆல்பெர் காம்யு, நீட்சேவுடன் சேர்ந்து சுயமரணம் பற்றி வெகுநாட்கள் உரையாடிவிட்டு, அந்தப் புகழ்பெற்ற பாறையுருட்டும் விளையாட்டில் கலந்துகொண்டு இதுதான் வாழ்க்கை என்பதைப் புரிந்துகொண்டேன்.

உலகம் முழுவதும் அங்கங்கே வெடித்துப் புரண்ட போராட்டங்களுக்கு முன்பு நாம் வெறும் தூசி, காலிப் போத்தல் என்பதையும் புரிந்துகொண்டேன். இந்த எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளக் கூடிய ஆப்த நண்பனாக கவிதை என்னைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டது. 90-க்குப் பிறகான இளைஞர்களைக் கவிதை கவர்ந்துகொண்டதில் என் வாழ்வு அர்த்தம் பெறத்தொடங்கியது. தினம் தினம் இளங்கவிஞர்களுடன் உரையாடத் தொடங்கினேன்.

கவிஞர் ஓசிப் மெண்டல்ஷ்டாமின் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ கவிதைகள் தொகுப்புக்கு அவரது மனைவி நடேஸ்டா மெண்டல்ஷ்டாம் எழுதிய முன்னுரையில், வடிவத்துக்கும் உள்ளடக்கத்துக்கும் இடையில் முரண்பாடு இல்லாத- இரண்டும் எப்போதும் புதியதாகவும், ஆனால் ஒரு மிகச் சிறிய வித்தியாசத்துடன் கூடிய கவிதைகள் என்றும், மேலும் கவிஞனின் 'தான்' எப்போதும் மிக வெளிப்படையாக உணரப்படும் இடங்கள் கொண்ட கவிதைகள் என்றும் அவற்றைக் குறிப்பிடுவார்.

அதைவிட முக்கியமாக, கவிதைக்கும் அதை எழுதும் கவிஞனுக்கும் இடையில் முரண்பாடு இருக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். பிழையான கவிதைகளுக்குக் காரணமும் இதுதான். பிழைப்புக்காக ஒரு வேலை என்று ஆரம்பித்து வாழ்வோடு செய்துகொண்ட சமரசம் ஏராளம். ஆனால், கவிதா இதயத்தைக் காப்பாற்றிக்கொள்ள இன்றுவரை, விழிப்பான அரசியல் மற்றும் தத்துவப் பிரக்ஞையைத் தக்கவைத்துக்கொண்டுள்ளேன். அவ்வப்போது கவிதைகளும் எழுதுகிறேன்.

எதுவும் பிடிக்காத சூழல்தான் இன்றும் நிலவுகிறது. இன்னும் தீர்க்கப்பட முடியாமல் அடிப்படைகளிலேயே உழன்றுவருகிறோம். சமூகம் முழுமைக்கும் பரவியுள்ள பொருளியல் ஊழல், இதர எல்லா வகை ஊழல்களுக்கும் அடிப்படை என்பதை நாம் அறிந்தோமில்லை. பெரிய ஊழல், மெகா ஊழல், சிறிய ஊழல் என்பதில்லை. அந்த ஊழல்மனம், அதுதான் பிரச்சினை. எல்லா வடிவங்களிலும் சாதியம் கொடூரமாகத் தலைவிரித்தாடுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.

வன்முறையின் மூலம் அல்லது பிச்சையிடுவதன் மூலம் ஆதிக்க சக்திகள் மக்களைக் காலடியில் நசுக்கிக்கொண்டே ஆள்கின்றன. கவிதையின் பிரதானப் பணி, இவை எல்லாவற்றுக்கும் அப்பால், வாழ்வின் நுண்ணிய கிரணங்களில் குமிழியிடும் விளக்கவே முடியாத கவித் தருணங்களை மொழியின் அபூர்வ சொற்களில் சிக்கவைத்து அவற்றை இதயங்களுக்கு மாற்றுவதாகும். கல் இதயங்களில் கவிதை நுழைவதில்லை. எனவே, கற்களையும் கரைக்கும் சொற்களைக் கவிஞன் தேடிக்கொண்டே இருக்கிறான். பித்தாகி பேதையாகி சமரிடும் பெருவீரனாகி உயிர் துடிக்கத் துடிக்க எப்படியும் எப்போதும் அவன் கவிஞனாக இருக்கிறான்.

பறவைகள் நிரம்பிய முன்னிரவு
ஆசிரியர்: சமயவேல்
வெளியீடு: மலைகள்,
119, முதல் மாடி,
கடலூர் மெயின் ரோடு,
அம்மாப்பேட்டை, சேலம் - 636003
தொடர்புக்கு: 8925554467
விலை: ரூ.80/-

(மலைகள் பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் சமயவேலின் ‘பறவைகள் நிரம்பிய முன்னிரவு’ கவிதைத் தொகுதிக்கு அவர் எழுதியிருக்கும் முன்னுரையிலிருந்து…)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x