"விடுதலையைத் தந்த விரல்கள்" - நடிகர் சத்யராஜ்
என்னை மிகவும் பாதித்த புத்தகங்களை வேறு யார் எழுதியிருப்பார்? பெரியார் தான். பெரியாரின் புத்தகங்கள் புத்தகங்கள் அல்ல, களஞ்சியங்கள். இயல்பாகவே மகிழ்ச்சிகரமான மனப்போக்கு உள்ளவன் நான். பெரியாரின் எழுத்துகள் எனது மகிழ்ச்சியை இன்னும் விரிவடையச் செய்தன. அநாவசிய மூடநம்பிக்கைகள் இல்லாமல் இருப்பதைவிட வேறு என்ன சந்தோஷம் வேண்டும்? நான் எந்த ஓட்டலில் தங்கினாலும், 13-ம் எண் அறையா என்று பயப்படுவதில்லை. 8-ம் தேதி படப்பிடிப்பா என்று பதறுவதில்லை. இதெல்லாம், பெரியாரின் எழுத்துகள் எனக்குச் செய்த பேருதவிகள்.
அதேபோல், மன விடுதலையை எனக்குத் தந்தவை ஓஷோவின் எழுத்துகள். ‘உங்கள் சிறைகளை அமைத்துக் கொள்கிறீர்கள். அதற்கான சாவியும் உங்களிடம்தான் இருக்கிறது’ என்று சொன்னவர் ஓஷோ.
சமீபத்தில், இலங்கைத் தமிழர்களின் நிலைபற்றி புலவர் புலமைப்பித்தன் எழுதிய ‘ஒரு பூகோளமே பலிபீடமாய்’ எனும் புத்தகம் படித்தேன். ஒரு நாட்டின் நிலவியல் அமைப்பு அந்நாட்டின் ஒருபிரிவினருக்குப் பாதகமாக அமைந்திருக்கும் துயரத்தைப் பதிவுசெய்திருக்கும் முக்கியமான புத்தகம் அது. அதேபோல், தமிழ்மகன் எழுதிய ‘மானுடப் பண்ணை’ எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். கதையில் பொருளாதாரரீதியாகக் கீழ் நிலையில் உள்ள நாயகன் அனுபவிக்கும் துயரங்களை, வசதியான பின்புலம் கொண்ட என்னால் உணர்வுபூர்வமாக உள்வாங்க முடிந்தது. இது அந்த எழுத்தின் வலிமை என்றே சொல்வேன்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் என்று அறிஞர்கள் எழுதிய எம்.ஜி.ஆரின் பாடல்களைக் கேட்பதே புத்தகங்களைப் படிப்பதற்குச் சமம்தான்!
