பிறவிக் கலைஞர் எம்.வி. வெங்கட்ராம்

பிறவிக் கலைஞர் எம்.வி. வெங்கட்ராம்
Updated on
2 min read

தஞ்சை மாவட்டத்தின் கோயில் நகரமாம் கும்பகோணம், 1930,40களில் கதைகளின் கருவூலமாகத் திகழ்ந்து வந்தது. இதை எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி தனது பள்ளிப்பருவ நினைவுகளில் பதிவுசெய்துள்ளார். மகாமகக் குளத்தின் படிக்கட்டுகள், நகர மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள ‘தொண்டரடிப் பொடிக்கடை’ ஆகியவைதான் கதைஞர்களின் கூடலரங்குகளாக இருந்துவந்தன.

எழுத்துலகை அதிரச்செய்த கதைகளை உருவாக்கிய எம்.வி.வெங்கட்ராம், கு.ப.ரா., கரிச்சான் குஞ்சு, தி.ஜானகிராமன் போன்றோர் உற்சாகமாகக் குடந்தையில் இயங்கிவந்த காலம் அது. அந்த வரிசையில் எம்.வி.வெங்கட்ராம் ஒரு பிறவிக்கதைஞர்.

நவீன இலக்கிய இதழான ‘மணிக்கொடி’, பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருந்த நேரம் அது. தனது 16 வயதில் ‘சிட்டுக்குருவி’ என்ற சிறுகதை மூலம் இலக்கிய வானில் இடம்பிடித்தார் எம்.வி.வெங்கட்ராம். சௌராஷ்டிர மொழிபேசும் பட்டு நெசவாளர் குடும்பத்தில் பிறந்து இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவல்கள், வரலாற்று நூல்களை எழுதியவர். ஒரு மேடை நாடகமும் இதில் சேரும்.

விளம்பர வெளிச்சத்துக்கு வராத எழுத்தாளராகவே மறைந்துவிட்ட எம்.வி.வியின் ‘நித்யகன்னி’ புதினத்தின் சிறப்பை தி.ஜானகிராமன் புகழ்ந்து பேசியுள்ளார். “இலக்கியகர்த்தாக்களுக்கு மாடம் கட்டிப்போற்றும் விமர்சனக் கொத்தனார்களுக்கு இவருடைய நினைவு வராதது வியப்பான செய்தி” என்று அவர் தெரிவிப்பது உண்மையே.

“பெரும்பான்மை வாக்குகளால் இலக்கியம் வாழ்வதில்லை. சில ரசிகர்களால்தான் இலக்கியம் வாழ்கிறது. காலத்தின் சோதனைகளுக்கு ஈடுகொடுத்து வாழக்கூடிய ஆற்றல் என் எழுத்துகளுக்கு உண்டு. அதை வாழ்த்தி வரவேற்கும் ரசிகர்கள் என்றும் இருப்பர் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு” என்று தன்னிலை விளக்கத்தைத் தனது ‘நித்ய கன்னி’ நாவலில் தெரவித்துள்ளார்.

விவரணையில் கவிதைமொழி

அவரது புகழ்மிக்க புதினமான ‘வேள்வித்தீ’ஓர் அடைமழைக் காலத்தில் தொடங்குகிறது.

‘ஒரு மின்னலோ இடியோ இல்லை; இருக்கத் தேவை இல்லாதவற்றை இடித்துத் தள்ளுவதற்காகப் பூமியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதைப் போல் மழை அடர்த்தியாகவும் கனமாகவும் மிக நிதானமாகவும் பெய்து கொண்டிருந்தது.

இரண்டு நாட்களாக வானத்தை அடைத்துக்கொண்டு கொட்டிய மழை முற்பகலோடு ஓய்ந்துவிடும் போலத்தான் இருந்தது. பிற்பகல், வெயில் கடுமையாக அடித்தது. மாலையில் ஆகாயத்தில் மேகங்கள் படைவீரர்களைப் போல நடமாடிக் கொண்டிருந்தன. இரவு பத்துமணிக்கு மேல் மக்கள் அயர்ந்து தூங்கட்டும் என்று காத்திருந்ததைப் போல் புதிய பலத்தைத் திரட்டிக் கொண்டு மழை தாக்கத் தொடங்கியது’.

இந்த வர்ணனை மகாகவி பாரதியின் வசன கவிதையை நினைவூட்டுவதாக இருப்பதோடு படிக்கிற வாசகனையும் குடையைத் தேடவைக்கும் மொழி நடையாக இருப்பதே எம்.வி.வியின் எழுத்துக்கலை.

துளியைக் கடலாக்கியவர்

மகாமகக் குளப்படித்துறையில் அமர்ந்து எழுத்தாளரும் ‘கிராமிய ஊழியன்’ இதழாசிரியருமான கு.ப.ரா, மகாபாரதத்தின் உபாக்யானங்களிலிருந்து பத்துப் பெண் கதாபாத்திரங்களை எடுத்து சிறுகதைகளாக வார்க்க வேண்டும் என்ற ஆசையை வெளியிட்டார். தனக்கு நேரம் இல்லையென எம்.வி.வியை எழுதச்சொல்லிக் கேட்டுக்கொண்டார். எம்.வி.வி முதலில் திலோத்தமை என்ற பெண்பாத்திரத்தைத் தனது கைவண்ணத்தில் கதையாகத் தீட்டுகிறார்.

வியாச பாரதத்தில் ஆறு பக்கங் களுக்கும் குறைவான ஒரு சிறிய கதையை எடுத்துக்கொண்டு அவர் படைத்ததுதான் ‘நித்யகன்னி’ என்னும் அழியாப் புகழ் படைத்த நாவல். சந்திர வம்சத்தைச் சேர்ந்த யயாதியின் மகள் மாதவி வெறும் எண்ணூறு புரவிகளுக்காகக் காதலன் காலவனின் கடைச்சரக்காக மாறுகிறாள். மூன்று மன்னர்களுக்கு மணமுடிக்கப்படுகிறாள். தாயான பிறகும் நித்தியகன்னியாக மாற இயலும் அவளது வரமே அவளுக்குச் சாபமாக மாறுகிறது. மனம் ஒரு ஆணிடமும் உடல் பல்வேறு ஆண்களிடமும் வதைபடும் பெண்ணின் கதாபாத்திரம் இன்றைய வாழ்க்கை நிலைக்கும் பொருந்தக்கூடியது.

எழுத்தின் பின்னணி

பட்டுத்தறித் தொழிலில் கோடிகோடியாகப் பணம் குவிக்கும் வாய்ப்பை உதறிச் செல்வத்தை இழந்து இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவர் எம்.வி.வி. ‘யாருக்குப் பைத்தியம்?’ என்ற சிறுகதையில் ஜரிகை வியாபாரத்துக்குப் போய் இடைத்தரகரிடம் கதைகேட்டு நேரம்கழிக்கும் பாத்திரமாக வலம்வரும் கதாபாத்திரம் வேறு யாருமல்ல. வியாபாரியாகப் போனாலும் கதைக்காரனின் உணர்ச்சி மறைந்துவிடுமா? என்று கேட்கும் வினா அவருடைய அடிமனத்தின் வெளிப்பாடு.

1948-ம் ஆண்டு ‘தேனீ’ என்ற இலக்கிய இதழைத் தொடங்கி ஆசிரியராக நஷ்டமடைந்து வாசகர் களுக்கு இலக்கிய லாபம் ஈட்டிக் கொடுத்தவர்.

இத்தனை சாதனைகளையும் பங்களிப்புகளையும் செய்த எம்.வி.வெங்கட்ராம் பெரிய அங்கீகாரம் இல்லாமல் கடைசிவரை வறுமையில் வாழ்ந்து மறைந்தவர். அவர் தனது இறுதிக்காலத்தில் எழுதிய ‘காதுகள்’ நாவலுக்கு சாகித்ய அகாதமி பரிசு கிடைத்தது. ‘காதுகள்’ நாவல் எம்.வி.வெங்கட்ராம் என்னும் மாபெரும் எழுத்தாளனின் சுயசரிதையின் ஒரு பகுதி. எழுத்தாளனாக அவர் அடைந்த சரிவுகளையும், ஆன்மிகரீதியாக அவர் எதிர்கொண்ட போராட்டங்களையும் பதிவுசெய்திருக்கும் படைப்பு அது.

‘எம்.வி.வியின் கதைகள் எனது எழுத்துலகப் பயணத்தின் வழிகாட்டி’ என்று தி.ஜானகிராமன் குறிப்பிட்டுள்ளார். அவரைப் போலவே இன்றைக்கும் எண்ணற்ற கதைஞர்கள் எம்.வி.விக்கு குருதட்சணை கொடுக்காத ஏகலைவர்கள்தான்.

தொடர்புக்கு: sathiyamurthy2000@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in