மதுவாகினியின் சுவடுகள்

மதுவாகினியின் சுவடுகள்
Updated on
1 min read

ந. பெரியசாமியின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. எளிய சொற்கள் மூலம் பெரியசாமி கட்டியெழுப்பும் காட்சிகள் அசாதாரணமானவை. இறந்தவர்களெல்லாம் பறவைகளாகிவிடும் மரணமற்ற ஊர், ஆசிரியரைக் கேலிச்சித்திரமாக்கும் சிறுமி, தற்கொலைக்கு முயல்கிற வனுக்குக் குழந்தைகளாகத் தெரியும் ரயில்பெட்டி, பசுவின் நிழலை வளர்ப்பவன், மேகத் துண்டைத் தலையணையாக்கும் சிறுவன், துணை வானத்தைச் சிருஷ்டிக்கும் சிறுமி, அக்டோபர் முதல்நாள் திக்விஜயம் செய்யும் காந்தி… என்று மாறுபட்ட காட்சிகள் வழியே பரந்துபட்ட தளத்தில் நமது வாசிப்பை சாத்தியப்படுத்துகிறார்.

இறுக மூடியபின்னும்

சொட்டும் நீர்த்துளிகள்

நிறைந்து வழிகிறது

ஒன்றை மறந்து

புதிதாக வேறொன்றைக் கேட்கும்

மகனின் ஆசைகளும்.

நாளை பார்க்கலாம்

அடுத்தவாரம்

கட்டாயம் வரும் மாதமென

பாத்திரங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறேன்.

பெரியசாமியின் படைப்புலகம் பாசாங்குகளற்ற சொற்களால் ஆனது. குழந்தைகள் பற்றிய கவிதைகளில் மட்டுமே அவர் சற்று ஒப்பனை செய்து கொள்கிறார், அதுவும் குழந்தைகளை மகிழ்விக்கும் கோமாளியின் ஒப் பனையைப் போல மாசுமருவற்றது.

- மயூரா ரத்தினசாமி

தோட்டாக்கள் பாயும் வெளி
ந.பெரியசாமி.
வெளியீடு : புது எழுத்து, 2/205,
அண்ணா நகர், காவேரிப்பட்டினம் - 635 112,
தொடர்புக்கு: 90421 58667
முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2014
விலை : ரூ. 70

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in