

நோயல் இருதயராஜின் இந்தப் புத்தகம் பின்நவீனத்துவ அறிமுக நூல் அல்ல. தமிழில் ஏற்கெனவே நடந்திருக்கும் அறிமுகப் படுத்தல்களின் அபத்தங்களையும் போதாமை களையும் சாத்தியமின்மைகளையும் உள்ளடக்கிய விமர்சன அறிமுகம் என்றே கூற வேண்டும்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றி, ஓய்வுபெற்ற நோயல் ஜோசப் இருதயராஜ், ஆங்கிலக் கல்விப்புலத்தின் அனைத்து அனுகூலங்களையும் கொண்டவர். கற்பனை வளமும் கருத்துகளில் தெளிவும் துல்லியமும் நயமும் பட இலக்கிய நடையில் தனது கட்டுரைகளை எழுதுகிறார்.
பின்நவீனத்துவம் குறித்து பின்நவீன பாணி யிலேயே எழுதப்பட்டிருக்கும் முதல் கட்டுரைத் தொகுப்பு இது என்றுதான் இந்தப் புத்தகத்தைப் பற்றிக் கூற வேண்டும்.
சதுக்க பூதம், நிகழ், பன்முகம், புலமை, இந்தியா டுடே மலர் உள்ளிட்ட இதழ்களில் வெளியான கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு இது. ‘மேலை நோக்குகளில் தொல்காப்பிய மெய்ப்பாட்டியல்’ என்ற கட்டுரை இந்த நூலில் தான் முதன்முதலில் வெளியாகிறது.
சொற்கள் என்பவை வெள்ளைக் காகிதத்தில் அச்சேற்றப்படும் உயிரில்லா எழுத்துக்கள் அல்ல. சொற்கள் என்பவை பிரபஞ்சம், ‘மொழியே தத்துவம்-தத்துவமே மொழி’என்பதை இந்த நூல் நினைவில் நிறுத்துகிறது. இதற்குப் பிரதானமாக அமைவது மொழி வரலாற்றியல் சார்ந்த வேர்ச்சொல் ஆய்வு. பன்மொழி நடை, வடமொழி துவேஷமின்மை, தமிழ் மொழியைத் தத்துவச் சொல்லாடலுக்குப் பயன்படுத்தும் முயற்சி ஆகியவை இந்த நூலின் நடை விசேஷங்களுள் குறிப்பிடத் தகுந்தவை.
- ஆர். முத்துக்குமார்
கோட்பாட்டு விமர்சன யுகம் விமர்சனக் கோட்பாட்டு யுகம்
நோயல் ஜோசப் இருதயராஜ்
வெளியீடு: அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை,
புத்தாநத்தம்-621310. விலை: ரூ. 200/-
தொடர்புக்கு: 04332 273444