

தமிழர்களின் பண்பாட்டில் ஊறிவிட்ட விளையாட்டான ஜல்லிக்கட்டைப் பற்றி சி.சு. செல்லப்பா எழுதிய நாவல் ‘வாடிவாசல்’. சொல்லப்போனால் இது ஒரு குறுநாவல். வெளிவந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் ஈரம் குறையாத இந்தப் படைப்பு ஜல்லிக்கட்டு விளையாட்டின் நுணுக்கங்களை அடர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறது.
மதுரை ஜில்லாவின் கிராமம் ஒன்றில் நடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் ‘அசலூர்’ இளைஞர்கள் பிச்சியும் மருதனும், பண்ணையாரின் காளைக்குக் குறி வைக்கிறார்கள். சீறிப்பாய்ந்து வரும் வேறு எந்தக் காளையையும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. கம்பீரமான மூர்க்கத்துடன் காரி எனும் அந்தக் ‘கருப்புப் பிசாசு’ வந்தவுடன் களத்தில் இறங்குகிறான் பிச்சி.
பிச்சிக்கும் அந்தக் காளைக்கும் நடக்கும் போராட்டம், போட்டியின் முடிவில் பண்ணையார் எடுக்கும் அதிரடி முடிவு என்று காளையின் வேகத்துக்குப் போட்டி போடும் எழுத்து அது. வாடிவாசலில் காத்திருக்கும்போது பிச்சிக்கும் பார்வையாளர்களில் ஒருவரான வயோதிகருக்கும் இடையிலான உரையாடல், அத்தனை இயல்பாக இருக்கும்.
வாடிவாசல் நாவலைத் திறந்தால், மாட்டின் குளம்புகளும் மணிகளும் அதிரும் ஓசையும், கூக்குரலிட்டு ரசிக்கும் மனிதர்களின் குரலும் ஒலிப்பதை உணர முடியும்.