

சமீபத்தில் தொல்காப்பியம் தொடர்பான ஒரு நூல்தான் படித்தது. பேராசிரியர் ராஜ் கௌதமன் எழுதிய ‘பாட்டும் தொகையும்’ - தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும் என்பதே அந்தப் புத்தகம். தமிழ்க் கல்விப்புலத்தில் நடந்த ஆய்வுகள் அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலையில் இந்த நூல் முக்கியமாகப்படுகிறது. ஆண், பெண் இருவருக்குமான உறவே அரசியல் அடிப்படையிலானது என்று கூறுகிறார் ராஜ் கௌதமன். அக்காலத்தில் ஒடுக்கி ஒதுக்கப்பட்ட மக்களைப் பற்றிப் பேசும் கட்டுரையும் இதில் உண்டு.
என்னுடைய சிறுகதைத் தொகுப்பு ஒன்றைக் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறேன். இருபது கதைகளைச் சேகரித்திருக்கிறேன். பஞ்ச வர்ணக் குகை என்பதுதான் தலைப்பு. புதிய உத்திகளில் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைப் பேசும் கதைகள் அவை.
- நட சிவகுமார், கவிஞர்.