

சி.சு. செல்லப்பா கொண்டுவந்த எழுத்து இதழ் மூலம் புதுக்கவிஞராகவும் சிறுகதையாளராகவும் அறிமுகமானவர் நகுலன் என்ற டி.கே. துரைசாமி. இவரது ஆங்கிலக் கவிதை நூலான நான் பீயிங்(non-being) கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. நகுலன் படைத்த நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் அவ்வளவிலும் நகுலன் தன்மை என்ற ஒன்றை சாத்தியப்படுத்தியவர் அவர். மனிதன் இருக்கிறான். சில நேரம் தன்னை மறந்து இல்லாமல் இருக்கும் நிலையையும் விரும்புகிறான்.
இருக்கும் நிலையிலே மனம் சலித்தபடியும் இருக் கிறான். அந்த விசாரணையை நகுலனது படைப்புகள் வழங்குகின்றன. அந்த வகையில் ‘இல்லாது இருத்தல்’ என்ற இப்புத்தகத்தின் தலைப்பு மிகவும் பொருத்தமானது. 20-ம் நூற்றாண்டில் சாராம்சம் இழந்துபோன, மனித வாழ்வின் அவதானங்களும் அனுபவங்களுமாக இக்கவிதைகள் உள்ளன.
நகுலன் ஆங்கிலத்தில் சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். அப்போதைய இந்திய-ஆங்கில இலக்கியச் சூழலில் நகுலனின் படைப்புகள் துரதிர்ஷ்டவசமாக கவனிக்கப்படாமல் போயின என்று நினைவுகூர்ந்துள்ளார் மலையாளக் கவிஞர் அய்யப்ப பணிக்கர். அவரது ஆங்கிலப் படைப்புகள் அவர் வாழ்நாளிலும், அவர் இறந்த பிறகும் கூட தமிழில் மொழிபெயர்க்கப்படவோ தொகுக்கப்படவோ இல்லை.
அவர் ஆங்கிலத்தில் எழுதிய இந்தச் சிறுகவிதை நூலாவது காலம் தாழ்ந்தாவது மொழிபெயர்க்கப்பட்டிருப்பது ஒரு அதிர்ஷ்டம். அந்தக் காரியத்தை நிகழ்த்தியிருப்பவர் தஞ்சாவூர்க் கவிராயர்.
இல்லாது இருத்தல்
அனன்யா வெளியீடு
ஆங்கில மூலம்: நகுலன்
தமிழில்: தஞ்சாவூர்க்கவிராயர்
8/37, பி.ஏ.ஒய். நகர்,
குழந்தை இயேசு கோவில் அருகில்,
புதுக்கோட்டை சாலை,
தஞ்சாவூர்-613 005
விலை: 50 ரூபாய்
தொலைபேசி: 9442346504
- ஷங்கர்