

‘தீர்த்த யாத்திரை சென்று வந்த தீண்டத்தகாதவர் ஒருவர், தன்னைப் போன்ற பிற தீண்டத்தகாதவர்களுக்கு ஒரு மதக் கடமையாகச் சிறப்பான விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார்… அப்போது நூற்றுக்கணக்கான இந்துக்கள் தடிகளோடு அந்த இடத்துக்கு விரைந்தனர். உணவைக் கொட்டிக் கவிழ்த்தனர்.
சாப்பிடுவதை விட்டுவிட்டு, தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடியவர்களை அடித்து உதைத்தனர். கூறப்பட்ட காரணம் என்னவென்றால், விருந்தளித்தவர் விருந்திலே நெய் சேர்க்கும் அளவுக்குத் ‘திமிர்’ பிடித்தவராக இருந்தாராம். விருந்தாளிகளும் துணிந்து நெய் சாப்பிடும் அளவுக்கு முட்டாள்களாக இருந்திருக்கிறார்கள்!’
1936-ல் ராஜஸ்தானில் சக்வாரா பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவத்தை ‘ஜாதியை அழித்தொழிக்கும் வழி’எனும் நூலில் விவரிக்கிறார் டாக்டர் அம்பேத்கர். நெய், இந்துக்களின் கவுரவப் பிரச்சினை. தலித்துகள் ‘நெய்’ சாப்பிடுவது ‘திமிர்’ பிடித்த செயல். நெய் வாங்கும் அளவுக்கு வசதி உள்ளவர்களாக இருந்தாலும்கூட அதைப் பயன்படுத்தக் கூடாது. தங்களுக்குரிய உணவாக நெய்யை நினைத்ததன் மூலம் சாதி இந்துக்களைத் தலித்துகள் அவமதித்துவிட்டார்கள்.
எனவே, அவர்களைப் பழிவாங்க வேண்டும். இப்படியாக நடந்தேறிய இச்சம்பவம், சாதியம் தன் கோரப் பற்களைப் பண்பாட்டுத் தளத்திலும் மனித மனத்திலும் எத்தனை ஆழமாகப் பதித்திருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து நிறுத்துகிறது.
அன்றும் இன்றும்
ஏதோ 80 ஆண்டுகளுக்கு முன்பு நடந்து வழக்கொழிந்து போன சம்பவம் என்று இதைக் கடந்து போக முடியாது. இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் கார்ப்பரேட் யுகத்திலும் இப்படியும், இதைக் காட்டிலும் கொடூரமாகவும் தன் அருவருப்பான அவதாரங்களை சாதியம் காட்டிக்கொண்டே இருக்கிறது.
ராஜாராம் மோகன் ராய், காந்தி உள்ளிட்ட எத்தனையோ முற்போக்குச் சிந்தனையாளர்களும் சமூகச் சீர்திருத்தவாதிகளும், சாதியின் பிடியிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பெறப் பல சித்தாந்தங்களை முன்மொழிந்தாலும் சாதியத்தின் வேர்களைப் பிடுங்க அவர்கள் முனையவில்லை. மறுபுறம் ‘இழப்பதற்கு ஒன்றுமில்லை விலங்குகளைத் தவிர’ எனும் கோஷத்துடன் வர்க்கப் போராட்டத்தினால் மட்டுமே புரட்சி சாத்தியப்படும் என்று செயல்பட்டுவந்தார்கள் மார்க்சியவாதிகள். இவர்களுக்கிடையில் ‘ஜாதியை அழித்தொழிக்கும் வழி’ மூலம் சாதியத்தின் ஆணிவேரைக் கண்டறிந்து, அதனூடே பாய்ந்து, அதன் மையத்தைக் கட்டுடைக்கிறார் அம்பேத்கர். இந்த நூல் வெளியான அடுத்த ஆண்டே பெரியார் ‘ஜாதியை ஒழிக்கும் வழி’ என்ற பெயரில் இதை மொழிபெயர்த்து, குடியரசு இதழில் கட்டுரைகளாகவும், பின்னர் புத்தகமாகவும் வெளியிட்டார்.
மறுக்கப்பட்ட எழுத்து
1936-ல் ஆரிய சமாஜத்தின் இணை அமைப்பான ‘ஜாட் பட் தோடக் மண்டல்’ ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் உரையாற்ற அம்பேத்கர் அழைக்கப்பட்டபோது, அவர் தயாரித்த உரைதான் ‘ஜாதியை அழித்தொழிக்கும் வழி’. ஆனால், அன்றைய பேச்சுக்கான எழுத்துப் பிரதியைப் பார்த்து அந்த உரையின் மூலம் இந்து மதத்தையும் அதன் புனித நூல்களையும் அம்பேத்கர் நேரடியாகத் தாக்கப் போகிறார் என்பதை உணர்ந்து, அழைப்பை வாபஸ் பெற்றுவிட்டார்கள்.
புறமும் அகமும்
சாதி ஒழிப்புப் போராளிகளால் சாடப்படும் வர்ணாசிரம தர்மத்தை மட்டுமல்ல, அறவழிப்பட்ட விஷயங்களாகப் பார்க்கப்படும் மாயாவாதம், கர்ம வினை, ஆன்மிகம், அகிம்சை, சாத்வீகம், புலால் உண்ணாமை உள்ளிட்ட உன்னதங்களுக்குள் ஒளிந்துகிடக்கும் சாதியத்தையும் தர்க்கரீதியாகக் கட்டவிழ்க்கிறார் அம்பேத்கர். இந்து இலக்கியங்களில் மலிந்து கிடக்கும் தீண்டாமை, சாதிகளின் சுயநல மனப்பான்மையை அலசும்போது, ‘சமூக விரோத மனோபாவம் என்பது சாதியோடு நின்றுவிடவில்லை. அது இன்னும் ஆழமாகப் பரவி உட்சாதிகளுக்கிடையே உள்ள பரஸ்பர உறவையும் கெடுத்துவிட்டது.’
‘…மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள் இல்லை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர்கள் இவ்வாறு சமமாக இல்லை என்பதால், நாம் அவர்களைச் சமம் இல்லாத முறையில் நடத்த வேண்டுமா? சமத்துவத்தை எதிர்ப்பவர்கள் இந்தக் கேள்விக்குப் பதில் கூற வேண்டும்.’
‘…அரசியல் கொடுமையை விடச் சமூகக் கொடுமை பயங்கரமானது. எனவே, சமூகத்தை எதிர்த்துநிற்கும் சீர்திருத்தவாதி, அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் அரசியல்வாதியை விட தீரம் மிகுந்தவன்.’
‘…சாதி, மதமாற்றத்துக்குப் பொருந்திவராத ஒன்று… சாதி சட்டப்படி, எந்த ஒரு சாதியிலும் உறுப்பினர் ஆகும் உரிமை, அந்தச் சாதியில் பிறந்தவருக்கு மட்டுமே உரியது… ஒவ்வொரு சாதியும் மூடப்பட்ட அமைப்பாக இருப்பதாலும் - மதம் மாறியவர்களுக்கு இந்து சமூகத்தில் இடம் இல்லை.” ஆகவே மதமாற்றம், பரப்புரையை இந்து மதம் ஆதரிக்காததற்குக் காரணம் இந்து மதமல்ல, சாதிதான் என்கிறார் அம்பேத்கர். அதே நேரத்தில், சாதிய இடஒதுக்கீடு அவசியமானது என்பதை வரலாற்று ஆதாரங்களைக் கொண்டு விவரிக்கிறார்.
என்ன தேவை?
சமபந்தி விருந்தை நடத்துவதும், சாதி மறுப்புத் திருமணமும்கூட சாதியத்தை மறுதலிக்கும் சமூக நோக்கங்களாக எடுத்துக்கொள்ள இயலாது. ஏனெனில், சாதி என்பது நம் மனநிலையில் உள்ளது என சமூக நீதிக்கான குரல் எழுப்பும் அம்பேத்கர், ‘சாஸ்திரங்கள் புனிதமானவை என்ற நம்பிக்கையை அழித்தொழிப்பதுதான் சாதியை ஒழிக்கும் உண்மையான வழிமுறை’ என்கிறார்.
- ம. சுசித்ரா,
தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in