Published : 28 Dec 2014 01:04 PM
Last Updated : 28 Dec 2014 01:04 PM

காடோடி: புதிய நாவல்

நக்கீரன், கவிஞர். தமிழ்ப் பசுமை இலக்கியச் சூழலில் இயங்கிவருபவர். ‘காடோடி’ இவரது முதல் நாவல். இந்தாண்டு ஜனவரி சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி அடையாளம் பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. அந்நாவலில் இருந்து ஒரு பகுதி...

றுநாள் காலையில் அலுவலக அறையில் வேலை. ஆயாக்... யாக்… யாக்… யாக்... இருவாசிகளின் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. இவை சிறு கூட்டமாக இங்கு தென்பட்டுக் கொண்டேயிருக்கிறது. சாலையின் விளிம்பிலும், பட்டை உரிக்கப்படும் திடல் ஓரங்களிலும் பூச்சிகளைப் பிடித்துத் தின்றுகொண்டிருக்கிறது.

துவான்... துவான்...

யாருடைய குரல்? வெளியே எட்டிப் பார்க்கிறேன். மரம் வெட்டுபவரின் உதவியாள். இவர் இந்நேரம் மரம் வெட்டும் இடத்திலல்லவா இருக்க வேண்டும்? ஆனாலும் சங்கிலி வாளின் ஒலியைத் தொடர்ந்து கவனித்துக் கேட்டுக்கொண்டிருந்ததால் உள்ளுக்குள் அச்சம் எதுவும் எழவில்லை. என்ன செய்தி என்று விசாரிக்கிறேன்.

மரம் வெட்டுபவர் உங்களை அழைத்து வரச்சொன்னார் துவான். நாங்கள் மரம் வெட்டும்போது ஒரு சிறுவிலங்கு மரத்தின் உச்சியிலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டது. நீங்கள் அதைப் பார்ப்பதற்கு விரும்புவீர்கள் என்று உங்களை அழைத்து வரச்சொன்னார்.

அப்படியா? உடனே எழுந்துகொள்கிறேன். இவர்கள் பத்தாவது தொகுதியில் மரம் வெட்டுகிறார்கள். அத்தொகுதி நோக்கி நடக்கையில் அவரிடம் கேட்கிறேன். அது என்ன விலங்கு என்று தெரியுமா?

தெரியும் துவான். குபுங் குபுங்? அது என்ன விலங்கு என்கிறேன். குபுங் என்றால் குபுங்தான் துவான். நாங்கள் அதை அப்படித்தான் சொல்வோம். வேறு பெயர் தெரியாது. இது என்ன குபுங்? தொடர்ந்து விசாரித்ததில் அது சறுக்கிகளுள் ஒன்று என்பதுபோலத் தெரிகிறது. அந்த உயிரினத்தில் ஓரளவுக்குப் பார்த்துவிட்டேன். அப்படியானால் இது என்னவாக இருக்கும்?

அங்கு சென்றபோது மரம் வெட்டுபவர் கீழேயமர்ந்து வாளின் சங்கிலியை அரத்தால் கூர்தேய்த்துக் கொண்டிருக் கிறார். இது அடுத்த மரத்தை அறுக்கும் முன் நடைபெறும் ஆயத்தம். எங்களைப் பார்த்ததும் அதோ அங்கே வைத்திருக் கிறேன் துவான் என்று சுட்டிக் காட்டுகிறார்.

வெட்டி வீழ்த்தியிருந்த மரத்தின் மேலேயே அதை வைத்திருக்கிறார். சாம்பலும் சற்று இளமஞ்சள் நிறமும் கலந்திருந்த மென்மயிர்த் தோல் கொண்டிருந்த அதைப் பார்த்தவுடனேயே அது தொல்சிறகி என்பது புரிகிறது. ஆனால் உறுதியாக வௌவால் இல்லை. முகம் ஏறக்குறைய அணிலைப் போல் இருந்தாலும் அணிலும் இல்லை. சின்னஞ்சிறிய செந்நிறக் காது. அதன் தோல் இறகை விரித்துப் பார்த்தபோது அத்தோல் ஓரிரு இடங்களில் கிழிந்திருக்கிறது. அதைத் தவிர வேறு எந்த வெளிக் காயமும் தெரியவில்லை. அத்தோல் சிறகு அதன் மணிக்கட்டுப் பகுதியிலிருந்து தொடங்கி வால்பகுதிவரை பரவியிருக்கிறது. அய்யம் இன்னமும் தீரவில்லை. மரம் வெட்டுபவரிடம் கேட்கிறேன்.

இந்தக் குபுங்குக்கு வேறு பெயர் ஏதாவது தெரியுமா?

தெரியாது துவான்.

இது துப்பாய் தெர்பாங் கிடையாதுதானே?

கிடையாது துவான். அது பகலில் பறக்கக்கூடியது. ஆனால் இது இரவில் பறக்கும். பகலெல்லாம் வௌவால் மாதிரி மரத்தில் தொங்கியிருந்துவிட்டு மாலையில்தான் இரைதேடிக் கிளம்பும்.

புரிந்துவிடுகிறது. அப்படியானால் இது பறக்கும் லீமர். இதை இங்கு பார்ப்பேன் என்று நினைக்கவே யில்லை. எவ்வளவு அரிய உயிரினம் இது!

இது கொலுகோ. வௌவாலைப் போலவே பாலூட்டி. ஆனால் வௌவாலைப் போலப் பறக்கத் தெரியாது. இது ஒரு சறுக்கி. இருப்பதிலேயே நீண்ட தொலைவு சறுக்கிச் செல்லக்கூடிய விலங்கு. படித்த செய்திகள் நினைவுக்குள் ஒவ்வொன்றாய் வருகின்றன. இக்காடு இன்னும் என்னென்ன அரிய உயிரினங்களை ஒளித்து வைத்திருக்கிறது?

எல்லாவற்றையும் பார்க்க முடியுமா?

அதுதான் ஒவ்வொரு மரமாக வெட்டிச் சாய்க்கப் போகிறோமே அப்போது எல்லாவற்றையும் பார்த்துவிடலாம். ஆனால் இப்படி உயிர் நீங்கிய சடலமாகவா? இதை ஒமரிடம் காட்ட வேண்டும். ஓரடி நீளத்துக்கு மேல் இருந்த அதைக் கையில் எடுத்துக்கொள்கிறேன். ஒரு கிலோவுக்கு மேல் எடையிருக்கும். மரம் வெட்டுபவருக்கு நன்றி சொல்லிவிட்டு அதை எடுத்துக்கொண்டு வெளியே வருகிறேன். தேடும் சிரமம் வைக்காமல் ஒமர், திடலில் நின்று வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். கையில் இருப்பதைப் பார்த்தவுடனேயே பறக்கும் லீமர்தானே என்கிறார். கணித்தது சரிதான். அதை உற்றுப்பார்த்துக் கொண்டே ஒமர் சொல்கிறார்.

இது எவ்வளவு அரிய உயிரினம் தெரியுமா? பரிணாம வளர்ச்சியில் உன் முப்பாட்டன் துபையா மாதிரி இதற்கும் முதன்மையான இடமுண்டு. வௌவாலுக்கு முந்தி இதுதான் பறக்கத் தொடங்கிய பாலூட்டி. அவ்வகையில் இது வௌவாலின் மூதாதை. போர்னியோவைத் தவிர உலகின் வேறு எங்கும் இதைக் காண முடியாது. இதெல்லாம் அழியவே கூடாத இனம். ஆனால் என்ன செய்வது? இனிமேல் இதை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்? போய் தொலைவாக வீசிவிடு.

வீசுவதற்கு முன் ஒருமுறை அதைத் தரையில் வைத்து அதன் தோல் சிறகை அகல விரித்துப் பார்க்கிறேன். செவ்வக வடிவப் பட்டம் உயிருடன் விரிந்து பறக்கும் காட்சி தோன்றி மறைகிறது. காட்டை வெட்டி மரங்களே அற்றுப்போனால் இப்படியான கவிகைவாழ் உயிரினங்கள் என்ன செய்யும்? எங்கே வசிக்கும்? கொக்கோத் தோட்டங்களில் எப்படிச் சறுக்கிப் பறக்க முடியும்? செம்பனைத் தோட்டங்களில் எப்படி வாழமுடியும்? அதன் கிழிந்த தோல்சிறகு எதை எதையோ உணர்த்துகிறது. அதைக் கையிலெடுத்துக் காட்டுக்குள் தொலைவாக வீசியெறிகிறேன். பல கோடி ஆண்டுப் பரிணாம வளர்ச்சியின் வாழும் வரலாறான தொல்சிறகியின் பிணம் குப்பையைப் போல் போய் வீழ்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x