

காலியாக்கப்படும் இயற்கை வளங்கள், பெருகும் வன்முறை, 24 மணிநேரமும் ஊடுருவும் செய்திகள், அலுப்பாக இருக்கும் அன்றாடத்தின் சவத்தன்மைக்குள் ஒரு சமகாலக் கவிஞனுக்குச் சொல்ல என்ன இருக்கிறது? கொஞ்சம் கதைகளையும், கனவுகளையும் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதை நரனின் ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் தொகுப்பு வெளிப்படுத்துகிறது. அலுவலகம் தின்று விட்ட வாழ்வை நரன் அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். “ ஷூ” விழுங்கிவிட்டது/ எனது காலை/ உடைகள் எனது உடலை/ இரவு சப்பாத்துகளற்ற கால் மட்டும் தனியே மாடிப்படியேறிக்/ கொண்டிருக்கிறது/ என்று. உப்பு நீர் முதலை தொகுப்பின் மூலம் தனித்த குரலாக அறியவந்த நரனின் இரண்டாவது தொகுதி இது. இத்தொகுப்பில் ஒரு ஓவியம் போன்ற அனுபவத்தைத் தரும் துண்டுக் கவிதைகளும் உண்டு. ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் தொகுதி அருமையான படங்களுடன் நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்
நரன்
வெளியீடு: கொம்பு, எண்.11, பப்ளிக் ஆபிஸ் ரோடு, தேவி தியேட்டர் எதிரில்
நாகப்பட்டிணம்- 611 001
விலை: 60/-
கைப்பேசி: 995236742