

நேற்று இரவுதான் பெ. கருணாகரன் எழுதிய ‘காகிதப் படகில் சாகசப் பயணம்’ என்ற புத்தகத்தைப் படித்து முடித்தேன். ‘குன்றம் பதிப்பகம்’ அதை வெளியிட்டிருக்கிறது. கிராமப் பின்னணியிலிருந்து சென்னைக்கு வந்து பத்திரிகையாளராக ஆன அவரது அனுபவங்களை என்னுடைய அனுபவங் களுடன் சேர்த்து இனம்காண முடிந்தது. இளம் வயதில் கொண்ட லட்சியங்கள், யதார்த்தத்தில் அவற்றைக் கொண்டுசெலுத்த முடியாமல் போகும் சிரமங்கள், பத்திரிகைத் தொழிலுக்கே உரித்தான நெருக்கடிகள், பொருளாதாரப் பற்றாக்குறைகள் எல்லாவற்றையும் மிகவும் சுவாரசியமாக இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
பத்திரிகையாளராக இருந்தபோது, சென்னையில் கோயில் சிலைகள் செய்யும் ஒரு சிற்பியைச் சந்தித்த பின்னணியை வைத்து, அதைக் கதையாக எழுத நினைத்திருக்கிறேன். அவர் முறையாக சிற்பத் தொழிலைக் கற்றவர் அல்ல. அவர் மேற்கொண்டிருக்கும் தொழிலுக்கும் குடும்பத்தினருக்கும் இடையிலான முரண்பாடுகளை மையமாகக் கொண்டிருக்கும் கதை அது. சிறுகதைக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.
- எழுத்தாளர் பாஸ்கர் சக்தி