

என்னைப் பாதித்த புத்தகங்களின் பட்டியல் நீளமானது. உடனடியாக நினைவுக்கு வருவது மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய ‘சிதரம்பர நினைவுகள்’. கே.வி.ஷைலஜா மொழிபெயர்த்திருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சிறுகதைபோல இருக்கும்.
பாலச்சந்திரனும் அவரது மனைவியும் காதலர்களாக இருந்த நாட்களின் பதிவு, பேருந்து நிலையத்தில் தனியாக நின்றுகொண்டிருக்கும் பாலியல் தொழிலாளியை, பாலச்சந்திரன் தன் வீட்டுக்கு அழைத்துவந்து மனைவியிடம் அறிமுகம் செய்வது, 20 ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரிக் காதலியைச் சந்திப்பது, ஓணம் பண்டிகை திருநாள் அன்று ஒரு வீட்டில் உணவு அருந்தும் நெகிழ்வான நிகழ்வு, அன்னை இல்லத்தில் சிவாஜியைச் சந்தித்து ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வசனத்தைப் பேசச் சொன்னது என்று புத்தகம் நெடுக அற்புதமான பயணம் பதிவாகியிருக்கும்.
பாலச்சந்திரனின் சுயசரியாதையான இந்தப் புத்தகம் ஒரு சிறுகதைத் தொகுப்பாகவும் இருப்பதால் நடுவில் எந்த அத்தியாயத்தை வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம். என்றாவது அவரை ஒரு நாள் சந்திக்க வேண்டும் என்பது என் விருப்பம்.