

சில நீதிபதிகள் பிறப்பிக்கும் தீர்ப்புகளும் உத்தரவுகளும்தான் அடிக்கடி ஊடகங் களில் செய்திகளாக வரும். சட்டத்தின் வரையறைக்கு உட்பட்டு, அதே நேரத்தில் மக்களின் நலன்களை முதன்மையாகக் கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்படும் தீர்ப்புகள் எப்போதுமே மக்களின் கவனத்தைப் பெறும்.
அத்தகைய நீதிபதிகளில் சிலர் தங்கள் பதவி ஓய்வுக்குப் பிறகும்கூட தொடர்ந்து மக்களால் போற்றப்படுகிறார்கள். சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் பதவிக் காலத்திலும், ஓய்வுக்குப் பிறகும் அவர்கள் காட்டும் அக்கறையே அதற்குக் காரணம். அத் தகைய நீதிபதிகளில் முதன்மையாக இருப்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு என்பதை உரக்கச் சொல்கிறது `மணற்கேணி' பதிப்பகம் வெளியிட்டுள்ள `இவர்தான் சந்துரு' என்ற நூல். கட்டுரைகள், உரைகள், நேர் காணல்கள், கேள்வி-பதில்கள் என பல்வகைத் தொகுப்பாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
கிருபானந்த வாரியாரின் பேச்சால் கவரப்பட்டு, பெரியாரின் எழுத்துக்களுக்கு அறிமுகமாகி, பின்னர் கம்யூனிச இயக்கங்களால் ஈர்க்கப்பட்டது, கல்லூரி நாட்களில் நடத்திய கிளர்ச்சிகள் என்றெல் லாம் தான் கடந்து வந்த பாதை பற்றி சந்துரு விவரிக்கிறார். ஒடுக்கப்பட்டவர்களுக்காக, தொழிலாளர்களுக்காக நீதிமன்றங்களில் வாதாடிப் பல வழக்குகளில் வெற்றி பெற்ற சந்துருவுக்கு நீதிபதி பதவி வாய்ப்பு வந்தபோது அவரது தோழர்கள் மத்தியில் பெரும் தயக்கம் ஏற்பட்டது. இதனை `தி இந்து' என். ராம் பதிவுசெய்திருக்கிறார்.
“இருக்கிற சட்டத்தின் மூலம் சமூகத் தின் நலிவடைந்த பிரிவினருக்கு ஓரளவு நீதி வழங்க முடியும் என்பதை சந்துரு நிரூபித்துக் காட்டியிருக்கிறார். நீதிபதி பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் அவர் சமூகப் பார்வையுடன் செயல் பட்டுவருகிறார்” என்று மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி சந்துருவின் வாழ்க்கை அனு பவங்கள் மூலம், நாம் எந்தத் துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தாலும் அங்குள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி மக்களின் நலன்களை முதன்மையாகக் கொண்டு பணியாற்றிட முடியும் என்ற நம்பிக்கையை இன்றைய இளம் தலை முறையினருக்கு ஏற்படுத்துவதாக இந்நூல் திகழ்கிறது.
- வி. தேவதாசன்