ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம்

ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம்
Updated on
1 min read

நூலைப்படி – சங்கத்தமிழ்

நூலைப்படி – முறைப்படி

நூலைப்படி

தொடங்கையில் வருந்தும்படி

இருப்பினும் ஊன்றிப்படி

அடங்கா இன்பம் மறுபடி

ஆகுமென்ற ஆன்றோர் சொற்படி –என்பார் பாரதிதாசன்.

இரசிகமணி டி.கே.சி.யோ சங்கப்பாட்டுகள் சங்கடப் பாட்டுகள் என்று ஒதுக்குவார். ‘தொடங்கையில் வருந்தும்படி இருக்கும்’ என்று பாரதிதாசனும் சங்கடத்தை ஒத்துக் கொண்டாலும் ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் என்கிறார்.

எப்படியானாலும் கிடைத்திருக்கிற தமிழிலக்கிய வரலாற்றில் காலத்தால் மூத்ததும், விரிந்த பரப்புடையதுமாகிய சங்க இலக்கியங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.

‘என்றுமுள தென்றமிழ்’ என்பது கம்பனின் சற்றே மிகைப்பட்ட கவிக் கூற்றுதான். தமிழ் காலந்தோறும் ஒலிகள், எழுத்துகள், சொற் கூறுகள், சொற்கள், வாக்கியங்கள், சொற்பொருண்மை எல்லாவற்றிலும் மாறிக் கொண்டுதான் வந்திருக்கிறது. என்றாலும் கம்பனின் கவிக்கூற்றிலும் உண்மை இல்லாமலுமில்லை. தமிழின் சில அடிப்படைப் பண்புகள் இன்றளவும் தொடர்கின்றன. பாரதிதாசனின் வேறொரு பாட்டைப் பார்ப்போம்.

இன்று சென்று நாளையே வருவோம்

வீழும் அருவிபோல் விரைந்துதேர் நடத்துவாய்

இளம்பிறை போல் அதன் விளக்கொளி உருளை

விண்வீழ் கொள்ளிபோல் விளைநிலம் படியக்

காற்றைப் போலக் கடிது மீள்வோம்

வளையல் நிறைந்த கையுடை

இளையளை மாண்புற யான்மணந்து உவக்கவே

- இக்காலத் தமிழ்ப் பழக்கமுள்ள எவருக்கும் இந்தப் பாட்டு புரியாமல் போகாது. இது பாரதிதாசனின் சொந்தப் பாட்டல்ல சங்கப் பாட்டு.

‘இன்றே சென்று வருவது நாளைக்

குன்றுஇழி அருவியின் வெண்தேர் முடுக

இளம்பிறை அன்ன விளங்குசுடர் நேமி

விசும்புவீழ் கொள்ளியின் பைம்பயிர் துமிப்பக்

கால்இயல் செலவின் மாலை எய்திச்

சில்நிரை வால்வளைக் குறுமகள்

பன்மாண் ஆக(ம்) மணந்து உவக்குவமே

என்கிற குறுந்தொகைப் பாட்டைத்தான் (189) பாரதிதாசன் மறுஆக்கம் செய்திருக்கிறார்.

‘இழி’, ‘முடுக’, ‘நேமி’, ‘விசும்பு’, ‘துமிப்ப’, ‘கால்இயல்’ ‘சில்நிரை’ போன்ற சொற்களின் பொருள் தெரியாமலிருக்கலாம். ஆனால் ஏறத்தாழச் சங்கப் பாட்டின் வாக்கிய அமைப்பு இன்றைக்கும் தொடர்கிறது.

(‘தி இந்து சித்திரை மலரி’ல் இடம்பெற்றுள்ள கட்டுரையிலிருந்து ஒரு பகுதி)
பா. மதிவாணன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர், துறைத் தலைவர்.
தொடர்புக்கு: bamavanan@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in